185 பகலவன் போல் செல்வர் பலர்க்கும் பயனாவர் - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 12
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
சுடரவன் விளங்கிற் பூமி
..சோதியாம் விளங்கி லானேற்
புடவியு மிருளா மன்ன
..வாறுபோல் திருவோர் செல்லு
நடவையின் தாழ்ந்தோர் மேவி
..நடத்தலால் வரைமே லேற்றும்
அடர்சுடர் விளக்கிற் செல்வர்
..அறத்தராய்ச் சிறத்தல் நன்றே. 12
- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”சூரியன் வானில் உதிப்பதனால் நிலம் ஒளியுடன் திகழ்கிறது. அது இல்லையென்றால் நிலமும் இருளாய் இருக்கும்.
அதுபோல் செல்வர் நடக்கும் நன்மை பயக்கும் வழியில் வறியவர்களும் பின்பற்றி நடப்பதால், மலை மேல் ஏற்றப்பட்ட பெருவிளக்கைப் போல், செல்வர்கள் எல்லோருக்கும் நன்மை செய்பவராய் மேன்மை எய்தும்படி நடந்து கொள்வது நன்மை பயக்கும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
சுடரவன் - சூரியன். நடவை - வழி. வரை - மலை. சிறத்தல் - மேன்மை எய்துதல்.