184 அறவோரைத் தக்கோர் அனைவரும் தாங்குவர் - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 11
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
அமலனே எவர்க்குங் கத்தன்
= அவற்கர சருமில் லாருஞ்
சமமலாற் பேத மில்லை
= தரித்திரர் அறத்தோ ராயின்
அமரரா குவரன் னார்தாள்
= பொடியையும் அரச ரொவ்வார்
தமரெனத் தாழ்ந்தோர் தம்மைத்
= தகையினர் தாங்கு வாரால். 11
- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
மாசற்ற கடவுளே எல்லோர்க்கும் முதல்வராவர். அவர்க்கு அரசரும் பொருளில்லாத வறியவரும் சமமேயல்லாது வேறுபாடில்லை. வறியவர் நற்குணமுடையவராக இருந்தால் தேவராவார். அவருடைய காலில் பட்ட தூசிக்கும் அரசர் ஒப்பாக மாட்டார். வறியவரைத் தனது உறவினர் என நற்பண்புள்ளவர் காப்பாற்றுவார்” என்று கூறுகிறார் இப்பாடலாசிரியர்.
அமலன் - மாசற்றவன், கடவுள். சமம் - ஒப்பு. பேதம் - வேறுபாடு.