வெண்பா பயிற்சிக் களம் சில விளக்கங்கள்
அன்புள்ள கனகரத்தினம்,
உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது. முயற்சியும் தெரிகிறது.
நீங்கள் எழுதிய 'பா'வை
வான்மாரி வந்ததோ புவிக்கு தேன்
கவிதைக்கு பூமாலை தந்ததோ மான்
துள்ளும் வெண்பா புலவர் அப்பரென
சொல்லும் யாப்பு உலகு. - கனகரத்தினம்
கீழேயுள்ளது போல சிற்சில மாற்றங்கள் செய்து,
'இரு விகற்ப நேரிசை வெண்பா' வாக மாற்றியிருக்கிறேன்.
இரு விகற்ப நேரிசை வெண்பா
வான்மாரி இன்றுதான் வந்ததோ இப்புவிக்கு
தேன்கவிதைப் பூமாலை தந்ததோ - மான்துள்ளும்
நல்லுலகம் வெண்பா புலவராம் அப்பரென
சொல்லுமே யாப்பின் உலகு.
வெண்பா எழுதும் பயிற்சிக்காக கீழேயுள்ள விளக்கங்களையும், இணைப்புகளையும் வாசியுங்கள். வலைத்தளங்களிலும் விளக்கம் காணலாம்.
அடிப்படையில் நேரசை, நிரையசை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நேரசை: குறிலாவது, நெடிலாவது தனித்தாவது, ஒற்றடுத்தாவது வருவது நேரசை எனப்படும். உதாரணம்: எ, ஊ, எண், ஊர், ஒப், யான்
நிரையசை: குறிலிணை அல்லது குறில் நெடில் தனித்தாவது ஒற்றடுத்தாவது வருவது நிரையசை எனப்படும். உதாரணம்: அது, பலர், கணை, மறைந்
கல்பனா பாரதியின் 'வெண்பா எழுதுவோம்' கட்டுரையை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
228801 என்ற எண் இணைப்பிலுள்ள கல்பனா பாரதியின் 'வெண்பா எழுதுவோம்' கட்டுரையைப் படித்து விட்டு,
கீழேயுள்ள 160006, 160188, 161388 எண்களிலுள்ள மூன்று இணைப்புகளில் உள்ள என் கட்டுரைகளையும் படிக்கவும்.
வெண்பாக்கள் நான்கு வகைப்படும்.
குறள் வெண்பா - 2 அடிகள் - 7 சீர்கள்
சிந்தியல் வெண்பா - 3 அடிகள் - 11 சீர்கள்
அளவடி வெண்பா - நான்கு அடிகள் - 15 சீர்கள்
பஃறொடை வெண்பா 5 - 12 அடிகள்
ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் (எல்லா வெண்பா வகையிலும் ஈற்றடியில் 3 சீர்கள்).
ஒவ்வொரு சீரிலும் குறைந்தது 2 அசைகள் வரவேண்டும். மூன்றாவது அசை வரலாம். அது காய்ச்சீராகத்தான் (நேரசை) இருக்க வேண்டும். கனிச்சீர் (நிரையசை) வரக்கூடாது.
முதலில் சில திருக்குறள்களில் உள்ள சீர்களை அசை பிரித்துப் பழகிக் கொள்ளுங்கள்.
ஊ/ருணி நீர்/நிறைந்/ தற்/றே உல/கவாம்
நேர்/நிரை நேர்/நிரை நேர்/நேர் நிரை/நிரை
கூ/விளம் கூ/விளம் தே/மா கரு/விளம்
பே/ரறி/ வா/ளன்/ திரு.
நேர்/நிரை நேர்/நேர் நிரை
கூ/விளம் தே/மா மலர்
இதில் நான்கிடத்தில் விளம் முன் நேரசை வந்திருக்கிறது.
மா முன் நிரை இரண்டிடத்தில் வருகிறது. கடைசிச் சீர் 'திரு' என்ற நிரையசை 'மலர்' எனப்படும்.
வெண்பாவில் ஒரு சீரில் இரண்டு அல்லது மூன்று அசைகள் மட்டுமே வரவேண்டும். மூன்றாவது அசை நேரசையாகத்தான் இருக்க வேண்டும் இது காய்ச்சீர் எனப்படும்.
மூன்றாவது அசை நிரையசையாக இருந்தால் அது கனிச்சீர் எனப்படும். வெண்பாவில் கனிச்சீர் வராது.
ஒரு சீர் அடுத்து வரும் சீருடன் இணைவது தளை எனப்படும். மாச்சீர் நிரையசையுடனும், விளச்சீர் நேர் அசையுடனும் இணைவது 'இயற்சீர் வெண்டளை' எனப்படும்.
வெண்பாவில் மூன்று அசைகளுள்ள சீர்களும் வரலாம். அவைகளில் மூன்றாவது அசை, நேரசை கொண்ட `காய்ச்சீர்கள்’ என்னும் வாய்பாட்டுச் சொல்லை இறுதியில் கொண்ட மூவசைச் சீர்களாகும், முறையே தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்.
ஒரு சொல்லில் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் அடுத்து வரும் மூன்றாவது அசை நேரசையாக இருந்தால் அவைகள் முறையே தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் என்ற சீர்களாக அமையும். காய்ச்சீரை அடுத்து வரும் சீரில் முதலில் நேரசையாக இருக்க வேண்டும். இதை காய் முன் நேர் எனப்படும். இப்படி இணைவது வெண்சீர் வெண்டளை எனப்படும்.
எனவே வெண்பாவில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்ற இருவிதமான இணைப்புகளே வரவேண்டும்.
வெண்பாவின் ஈற்றடியில் மூன்று சீர்கள் மட்டுமே வரும்.
ஈற்றடியின் ஈற்றுச் சீர் நேரசையாகவோ, நிரையசையாகவோ வரும். உதாரணம் - பு, மே, பார், வான், இல், ஊன். யவை, இனி,
ஈற்றடி ஈற்று சீரில் ஒருசீர் வந்தால் நேரசையிலும் வரலாம், நிரையசையிலும் வரலாம்.
பு
பே
இல்
கூழ்
பிற
திரு
துணை
கடை
தலை
படும்
அறம்
பொருள்
கொளல்
இரண்டாவது சீர் வந்தால் ஓரெழுத்துதான் வரும், அது உகரத்தில் அமையும் எழுத்தாகும்.
நன்று
பேறு
உலகு
அளறு
அனைத்து
பாற்று
சிறப்பு
தொடர்பு
இனிது
அவர்க்கு
இன்னும் இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா என்பதுபற்றி என்னுடைய மேற்கூறிய இணைப்புகளில் தெரிவித்துள்ளேன். எதுகை, மோனை அமைப்புகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆசாரக் கோவை பாடல்களில் பெரும்பாலானவை இன்னிசை சிந்தியல் வெண்பாக்களே! அதிலுள்ள பாவகைகளின் கணக்கையும் ஒரு இணைப்பில் அல்லது கருத்தில் கொடுத்திருக்கிறேன்.
(முற்றும்)