493 கொலைபுலையின் மிக்ககுற்றம் புரிபவள் பொதுமகள் – கணிகையரியல்பு 20

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

கொலைஞ(ர்)தமைக் கொலைசெய்து கள்வரைவெஞ் சிறையிலிட்டுக்
..குற்றம் செய்யும்
புலைஞரைத்தண் டித்தடக்கு நம்மிங்கி லீசுமன்னர்
..புருடர் ஆவிக்(கு)
உலைவைக்குந் தன்மையளாய்ப் பாதகமெ லாந்திரண்டோர்
..உருவாய் வந்த
விலைமாதைக் கொல்லாம லுலகமிசை யாதுசெய
..விடுத்தா ரம்மா. 20

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

நம்மை ஆளும் ஆங்கிலேய மன்னர் எல்லாத் துன்பமும் ஒருங்கு தரவல்ல பெரும் பாவமாம் கொலை செய்வோரைத் தூக்கிட்டுக் கொன்றும்,

பிறன் வேண்டும் கைப்பொருளைக் களவு செய்யும் உழையாக் கோழையரைக் கடுங்காவலில் வைத்தொறுத்தும்,

கள்ளுண்டல், சூதாடல் முதலிய இழிசெயல் செய்வோரை வெறுங் காவற் சிறையிட்டுத் தண்டித்தும் முறை செய்வர்.

இவர்கள் ஆடவர் உயிருக்குப் பெருங்கேடு சூழும் இயல்பும், பெரும் பாவமே பெருத்து ஓர் உருவெடுத்த வடிவும் கொண்ட விலைமகளாம் பொதுமகளைத் தூக்கிட்டுக் கொன்றுவிடாமல் ஐயோ யாது செய விடுத்தார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jan-23, 9:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே