நினைவுப்பயணம்

ஏதோவொரு சிறு நிகழ்வு ஏதோவொன்றை ஞாபகமூட்டிவிடுகின்றது.

இன்று தீர்ந்து போயிருந்த தக்காளி 'சல்சா' போத்தல் சிங்கில் ஊற வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக தீர்ந்து போய்விட்ட உணவுக் கொள்கலன்களை எறிந்து விடுவது என் வழக்கம். இன்று ஊற வைத்திருந்த இந்தப் போத்தலை நான் கழுவிக் கொண்டிருந்தேன். காரணம் அது அளவில் சிறியதும் கையடக்கமானதாக இருந்தது அதுமட்டுமல்ல அது கண்ணாடியால் ஆனது.

சிறிய கண்ணாடியாலான பொருட்கள் என் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து விடுபவை. அவற்றை உபயோகிக்கிறேனோ இல்லையோ அவற்றைச் சுத்திகரித்து வைத்துக் கொள்வேன்.முன்னரும் இது போன்றே குங்குமப்பூ வாங்கிய சின்னஞ்சிறு தூய கண்ணாடிக் கொள்கலன் ஒன்று;
பார்த்தாலே ஆசைவரும் அதனை. குட்டிக் கடவுள் போல் நின்றிருந்தது பளிங்காக. இன்னமும் அதனை வைத்திருக்கின்றேன்.

இன்று இந்த சல்சா போத்தலை சவர்காரமிட்டு கழுவிக்கொண்டிருந்தேன் என்கை முழுவதும் போத்தலினுள் போனது எனக்கு மகிழ்வைத் தந்தது. அது இன்னொரு நிகழ்வை ஞாபகப்படுத்தி விட்டது.

சிறுவயதில் மாலை மங்கும் நேரத்தில் என் அம்மம்மா கூப்பிடும் குரல் அது

'ஜனா.... புட்டுக்குழல் ஊற வைச்சிருக்கன் கழுவீற்று வா....!"

அங்கு முற்றத்து மணலில் தான் நான் விளையாடிக் கொண்டிருப்பேன். குரல் கேட்டதும் உடனே சின்னக் கிணத்தடிக்கு ஓடிப்போவேன் அம்மங்கலிருட்டில். (பெரிய கிணறும் எங்கள் வீட்டிலுண்டு.)

சின்னக்கிணறு சதுரமுகப்புடையது கற்களால் கட்டப்பட்டது. இரண்டடி உயரம்மட்டுமே உடையது. மங்கல் வெளிச்சத்தில் அதன் முகப்பு மட்டுமே தெரியும். பக்கத்தில் அடர்ந்து வளர்ந்த நித்தியகல்யாணிச் செடி நான்கடி உயரம் இருக்கும் எப்போதும் பூவாகப் பூத்துச் சொரியும் அதைப் பார்த்தாலே மனமெல்லாம் பூத்துவிடும் எனக்கு.

அந்தச் சூழலின் இருட்டுக்கு வெளிச்சம் காட்டும் விளக்குகள் போன்றவை அப்பூக்கள். பளீரென்ற வெண்ணிறம்! அதனைப் பார்த்துக்கொண்டே கிணற்றடி கால் மிதிக்கும் கல்லில், தண்ணியள்ளும் வாளியினுள் ஊற வைத்திருக்கும் மூங்கிலாலான புட்டுக்குழலைக் கழுவுவேன் மூங்கில் குழலுக்குள் என் கைஉட்புகும் தண்ணீருடன். குளிரும் இருட்டும் நித்திய கல்யாணியும் கழுவும் போது உண்டாகும் தண்ணீர் சலசலப்பும் இன்று நினைத்தாலும் சந்தோசத்தைத் தருபவை எனக்கு!

இந்த வேலையை மட்டும் எனக்கே எனக்காக வைத்திருப்பார் என் அம்மம்மா. ஏனென்றால் வீட்டிலுள்ள வேறு எவர் கையும் மூங்கில் குழலினுள் உட்புகாது.

😊

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (7-May-25, 1:47 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 68

மேலே