நெஞ்சம் சங்கமித்த நேரம்
நெஞ்சம் சங்கமித்த நேரம்
ஹரிஹரனும் தமிரரசனும் வசித்து வாழ்ந்தது புளியங்குடி என்ற ஒரு சிறிய ஊரில். இருவரும் ஒரே தெருவில் சில அடிகள் வித்தியாசத்தில் உள்ள வீடுகளில். இருவரின் குடும்பமும் நெருக்கம் அடைத்தது இவர்களால் தான்.
அரசியின் மடியில் கிடைக்கும் ஹரியை பார்க்க முடியாமல் கண்களை மூடிய பொழுது கண்களுக்குள் பழைய ஞாபகங்கள் திரைப்படம் போல் ஓடின.
"நான் போக மாட்டேன். நான் போக மாட்டேன்." பள்ளிக்கூட வாசலில் தந்தையின் காலைக் கட்டிக் கொண்டு அழுத அந்த சின்னப் பிள்ளை ஹரியின் நினைவு பொங்கிவர துக்கமான அந்த வேளையிலும் அரசியின் இதழ்களில் புன்னகை வந்தது . அது தான் அரசிக்கும் ஹரிக்குமான முதல் சந்திப்பு.அப்பொழுது அரசியின் பெயர் தமிழரசன் . அழுது கொண்டிருந்த ஹரியின் தோளில் கைபோட்டு தன்னிடமிருந்த மிட்டாயைக் கொடுத்து அவன் அழுகையை நிறுத்தினான் தமிழரசன் . ஐந்து வயதில் தொடங்கிய அவர்களது நட்பு அவர்களது பதினான்காவது வயது வரை தொடர்ந்து பிரிவை சந்தித்தது.
தனக்குள் மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக வந்து பெருகி கொண்டிருந்த மாற்றங்களை வாய்திறந்து யாரிடமும் சொல்லமுடியவில்லை தமிழரசனால். எல்லாவற்றையும் பங்கு வைக்கும் நெருங்கிய நண்பனான ஹரியிடமும் கூட அவனுக்கு இதை பற்றி கூற முடியாமல் தனிமையில் தவித்து அதன் விளைவாக தன் குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிலை வந்தது. ஒரு நாள் இரவு நேரத்தில் யாருக்கும் சொல்லாமல் ஊரை விட்டே ஓடினான்.தமிழரசன் என்ற பெயரை அரசி என மாற்றிக் கொண்டான். கால்களுக்கு பாண்டு மேலே சட்டை அணிந்தவன், பாவாடைக்கும் ஜாக்கெட்டுக்கும் மாறினான். தலையைப் படிய வாரி மேலே தூக்கி வைப்பதை விட்டு , சடை பின்னல் வைக்க ஆரம்பித்தான். மொத்தத்தில் அவன் அவளானாள்.
இத்தனை மாற்றங்களோடு கூடவே இன்னொரு மாற்றமும் உண்டானது. ஹரியுடனான நட்பு காதலாக மாறியது. காதலும் பெற்றோர் பாசமும் தூண்ட எட்டு வருடங்களின் பின் மீண்டும் தன் சொந்த ஊருக்குப் போனாள். போனவளை வீட்டு வாசலில் வைத்தே அடித்து துரத்தினார்கள் அவள் பெற்றோர். இத்தனை நாட்களில் பல அவமானங்களை சந்தித்தவள் தான் என்றாலும் பெற்றோரின் இந்த புறக்கணிப்பு செத்துவிடத் தூண்டியது. ஆனால் ஹரி மீதிருந்த காதல் அந்த எண்ணத்தை செயல்படுத்த விடவில்லை. அவனைத் தேடிப் போனாள். ஹரி அவளது பெற்றோரைப் போல் அவளைத் துரத்தவில்லை எனினும் அவள் காதலை சொன்ன போது அவனுடைய முகத்தில் தோன்றிய பாவமே அவளைக் கொன்று போட்டது. கேவலமான ஒரு பார்வையை அவள் மீது வீசி விட்டு எதுவும் பேசாமலேயே போய் விட்டான். அதற்கு மேல் அந்த ஊரில் இருக்க முடியாமல் திரும்பி விட்டாள். அன்றைய இரவு தலைவலி மாத்திரைகளை விழுங்கி உலக வாழ்விலிருந்து விடுபட முயன்றவளை எப்படியோ காப்பாற்றி விட்டார்கள் கூட இருந்தவர்கள்.
அதற்கு பிறகு மூன்று வருடங்களின் பின் இன்றுதான் ஹரியை பார்த்தாள். ஆனால் இந்த நிலையில் அவனைப் பார்க்க நேரும் என்று கனவிலும் கூட அவள் நினைத்துப் பார்த்ததில்லை. நினைவற்று மடியில் மயங்கிக் கிடக்கும் தோழனின் கோலத்தை பார்க்க தாங்காமல் கண்களை மூடிக் கொண்டாள்.
வண்டி வைத்தியசாலையை அடைந்ததும் அவசர அவசரமாக ஹரியைத் தூக்கிக் கொண்டு போனார்கள். விபத்தில் பலமாக அடிபட்டதில் நிறைய இரத்தம் வெளியேறியிருந்தது. நல்லவேளையாக அரசியும் ஹரியும் ஒரே வகை ரத்த குரூப் ஆனதால் அவளது இரத்தம் அவனுக்கு ஏற்றப்பட்டது. நான்கு நாட்களுக்கு பின் தான் ஹரிதனது சுயநினைவுக்கு வந்தான். அந்த நான்கு நாட்களும் ஒரு தாயைப் போல ஹரியை அரசி கவனித்து வந்தாள். ஆனால் அவன் கண்முழிக்கும் போது அங்கு இருக்க விரும்பாமல் ஹரியின் வீட்டாருக்கு தகவல் சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.
ஒரு மாதம் கடந்த பின்னர் அவளது வீட்டு வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது. வண்டியிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்து அரசி வியந்து நின்றாள். ஹரியும் அவனது பெற்றோரும் கையில் தட்டோடு நின்றிருந்தனர். பெற்றோரை வீட்டின் உள்ளே போக சொல்லி விட்டு சிலையென நின்றவளின் கைகளை பிடித்து, "என்னை மன்னித்து ஏற்றுக்கொள்வாயா அரசி" என்று முகம் நோக்கி கண்ணோடு கண் பார்த்து கேட்டான். மகிழ்ச்சியில் உள்ளம் துள்ளிக் குதித்தது அவள் கண்களில் நீர் வழிந்தது . கைகளை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
"ஹரி நான் இப்படி ஆனது என்னோட தப்பாடா? என்னைப் பெத்த அம்மா கூட என்னை வேணாம்னு தூக்கி எறிஞ்சுட்டாங்க. ஏன் நீயே கூட நான் உன்னைக் காதலிக்கிறேன்னு சொன்னப்ப என்னை அசிங்கமாக தானே பார்த்தாய். ஏன்டா இதுபோல வாழும் நாங்க எல்லாம் காதலிக்கக் கூடாதா? எங்களுக்கும் மனசு இருக்குடா. அதில் பாசத்துக்கான ஏக்கம் தான்டா அதிகமா இருக்கு. ஆனா அது எங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கிறதே இல்லை."
அரசியின் கதறல் ஹரியின் கண்களையும் வெகுவாக கலங்க வைத்தது. "அழாதே அரசி . என் தப்பை இப்ப நான் உணர்ந்து விட்டேன் .என் மனசு முழுக்க உன் மேல் அன்பும் அதனால் ஏற்படும் நெருக்கமும் தான் இருக்கு. நான் விபத்தில் அடிபட்டு நினைவில்லாமல் கிடந்த வேளையில் இரத்தம் வேண்டி வைத்தியர்கள் வந்து கேட்டபொழுது அதையும் எனக்களித்து ஒரு அம்மாவைப் போல என்னைப் பார்த்துக்கிட்டது நீ தான்.என்மனதில் நீ எனக்கு கடைசிவரைக்கும் மனைவியாகவும் இன்னொரு தாயாகவும் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். யார் உன்னை வெறுத்தாலும் இனி ஒரு பொழுதும் நான் உன்னை வெறுக்க மாட்டேன் . என்னை நம்பி நீ என்னோட வாழ்க்கைத் துணையா வருவியா?"
அவனது கேள்விக்கான பதிலை ஒன்றும் கூறாமல் புன்னகையுடன் ஒரு அணைப்பில் தெரியப்படுத்தினாள் அரசி .
அவள் ஒரு மாதம் முன்பு மருத்துவ ஆஸ்பத்திரியில் அன்று அவன் இரத்தமும் அவள் இரத்தமும் ஒன்றாக சங்கமித்தது போல இன்று அவர்கள் இருவரது நெஞ்சங்களும் சங்கமித்தன.
அந்த நேரத்தில் அருகில் இருக்கும் ஒரு வானொலியில் இருந்து வந்த பாடல் இருவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
கோடையில் மழை வரும்
வசந்தக் காலம் மாறலாம்
எழுதிச் செல்லும்
விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும்
பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ
யார் சேர்த்ததோ