வாழ்க்கைத் தத்துவம்
"நான், இழந்ததை எண்ணி வருந்துகையில், இருப்பதை இழந்து விடுகிறேன்" என்ன ஒரு அற்புதமான வாசகம். இந்த வாசகத்தை மதுரைக்கு சென்றிருந்தபோது ஒரு ஆட்டோவின் உள்ளே எழுதப்பட்டிருந்ததைப்பார்த்தேன். எவ்வளவு உண்மையான மறுக்கமுடியாத ஒதுக்கமுடியாத மறக்கவும் முடியாத மணிவாசகம்.
விதி என்பது நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மாபெரும் பிரபஞ்ச சக்தியாகும். அப்படி இருக்கையில் நான் விதியை எதிர்க்க நினைப்பது அல்லது அதை வெல்ல நினைப்பது, சிங்கப்பூர் நாடு தனியாக நின்று, இதர அனைத்து உலக நாடுகளுடன் போர் செய்வது போல.
பிறரின் சிண்டை முடிக்காமல், பிறரிடம் சண்டை வளர்க்காமல் , முடிந்த வரை உன்னால் முடிந்ததைச் செய், நீயே போட்டுக் கொண்டுள்ள தொடர்ச்சியான மனச் சங்கிலிப் பிணைப்புகள் தான், நீ நினைப்பதை சாதிக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணம் என்பதைப் புரிந்து கொள்.
இதைத் தவிர, விதி என்ற புரியாத புதிர், நம் கண் கூடாக நமக்கு ஏற்படுத்திய, ஏற்படுத்தி வரும், நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத நன்மை மற்றும் தீமைகளை கணக்கில் கொண்டு பார்க்கையில், வாழ்வில் உனக்கு நடக்கும் ஒவ்வொரு செயலையும் , நீ ஒரு பார்வையாளர் போல கவனித்துக் கொண்டு சென்று கொண்டே இருக்க வேண்டும். அதாவது உன்னையும் உன் செயல்களையும், ஏன் எண்ணங்களையும் கூட நீ ஒரு பார்வையாளனாகப்பார்க்கவேண்டும். இப்படிச்செய்துவர உன்னுடைய துன்பங்களும் கவலைகளும் உன்னை பாதிக்கும் தன்மை வெகுவாகக்குறைந்துவிடும். இது உனது நல்லதுக்குதான் என்று நீ கருதினால், இப்போதிலிருந்து நீ உன்னை ஒரு பார்வையாளரின் நோக்கிலிருந்து கவனித்து வா.
இதுதான் நான் வாழ்வில் புரிந்து கொண்ட பேருண்மை.