492 எல்லாம் பறித்துப் பிச்சை எடுக்கவைப்பாள் பொதுமகள் – கணிகையரியல்பு 19

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

பொருளின்சே டத்தையிவட் களித்தோம்வாய்ச் சேடமெனும்
..பொருள ளித்தாள்
தருமமெனத் தனமளித்தோ மெமக்கிவளுந் தருமமெனத்
..தனம ளித்தாள்
அருமையாம் பலியளித்தோ மிவளெமக்குப் பலியளித்தாள்
..ஆழி சூழ்ந்த
இருநிலத்தி னீதன்றி யின்னுமிவ ளென்செய்வாள்
..எமக்குத் தானே.. 19

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மிக்க பொருள் முழுவதும் பொதுமகளுக்கு அளித்தோம். அவளும் அருட்கொடை என்று சொல்லத் தகுந்த வாய்எச்சிற் பொருளை எமக்கு நல்கினாள்.

கற்பக மரமும் அரசும் போன்று பொன் மணி முதலியவற்றை அவள் நினைத்தவாறெல்லாம் கொடுத்தோம். அவளும் அறக்கடவுள் தரும் புண்ணியப் பயனெனக் கொங்கைப் பொன் அளித்தாள்.

சிறப்புமிக்க பூ நீர் பால் பழம் முதலியவற்றால் வழிபாடு செய்வதாகிய பலிகொடுத்தோம். அவளும் திருவோடும் அதன்கண் இடும் பிச்சைச்சோறும் நல்கினாள்.

கடல்சூழ் உலகில், நாம் செய்வதற்கெல்லாம் சிறந்த ஈடு செய்தனள். இவையன்றி வேறென் செய்வாள்?

சேடம் - உயர்வு. சேடம், மிச்சம் - எச்சில். பலி - பூசை. பிச்சை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jan-23, 9:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே