128 பொருள் தேடப் போகும் கணவனுடன் போகும் நெஞ்சுயிர் - கணவன் மனைவியர் இயல்பு 20
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
இங்கிரு பொருள்வயின் ஏகு வேனென்றீர்
தங்குவ துடலொன்றே தளர்நெஞ் சோடுயிர்
அங்குறு நாசமே யபல மெய்யிதன்
பங்கதாம் அழிவுநும் பங்க தாகுமே. 20
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”தலைவ! என்னை இங்கு இரு! பொருள் தேடச் செல்கிறேன் என நீர் சொல்கின்றீர். இங்குத் தங்குவது என் உடல் ஒன்றுதான்.
என் மனதால் தளர்ந்த நெஞ்சும், எனது உயிரும் உம்முடன் அங்கு வரும். வலுவில்லாத வெற்றுடல் இங்கு அழியும். அத்தகைய அழிவும் உம்மைச் சார்ந்ததேயாகும்” என்று தலைவனைப் பிரிய மனமின்றி, தலைவி சொல்வதாக இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
நாசம் - அழிவு. பங்கு - சார்பு.