நூலின் பெயர் திரும்பிப் பார்க்கிறேன் நூலாசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் முனைவர் ஞா சந்திரன்
நூலின் பெயர் : திரும்பிப் பார்க்கிறேன்
நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : முனைவர் ஞா. சந்திரன்
வானதி பதிப்பகம் 21, தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை 17. தொலைபேசி 044 24342810. / 24310769 பக்கங்கள் 78 விலை ரூபாய் 70
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு (குறள் / 718)
“முகத்தில் மட்டுமே மகிழ்ச்சி காட்டிக்கொள்வது நட்பு அல்ல. உள்ளத்தில் இருந்து மகிழ்ச்சி பிறப்பதே உண்மையான நட்பு” என்ற வள்ளுவரின் கருத்துக்கு இலக்கணமாய் வாழ்ந்து வருபவர் நண்பர் இரா. இரவி அவர்கள்.
தனக்கென அழகான நட்புவட்டத்தை வைத்திருப்பவர். அனைத்து வகை நட்புகளிடமும் சரிநிகர் சமமாகப் பழகக் கூடியவர். நண்பர்களின் சாதனைகளை உடனே பாராட்டும் மனம் பெற்றவர். அதே போல் தவறு செய்தால் உடனடியாக சுட்டிக்காட்டவும் தவறியதில்லை.
தனது நட்புவட்டம் மூலம் தனக்கென எந்த உதவியும் பெற்றதில்லை. ஆனால் அந்த நட்புவட்டம் மூலம் இயலாதோருக்கும் எளியோருக்கும் பல உதவிகளை செய்துள்ளார்.
இலக்கிய கூட்டங்களில் இன்முகத்தோடு கலந்துகொண்டு தம் கருத்துக்களை இயல்பாக எடுத்தியம்புவார். மதுரையில் எங்கு இலக்கிய கூட்டங்கள் நடந்தாலும் அங்கு இருக்கும் முதல் நபர் இவரே. என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் நண்பர் இரவி.
46 ஆளுமைகளோடு தான் நட்புகொண்ட அனுபவங்களை ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற நூலின் மூலம் வெளியிட்டிருக்கிறார். இந்நூலை எழுதுகிற போதே இந்நூல் குறித்து என்னிடம் பேசினார். மேலும் இந்நூலுக்கு என்ன தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று இருவரும் கலந்துரையாடினோம். ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பை வையுங்கள், மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றேன்.
நமது நூலுக்கு இவர் சொன்ன தலைப்பை ஏன் வைக்க வேண்டும்? என்று யோசிப்பார் மத்தியில் நண்பர் இரவி அவர்கள், தலைப்பைக் கேட்டதும் ‘மிகவும் அருமையாக உள்ளது’, இதையே எனது நூலுக்கு தலைப்பாக வைக்கிறேன், என்று பாராட்டினார். இந்த எதார்த்த மனசு தான் ‘இரவி’. நல்லவற்றை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்வார். அல்லவற்றை நெருங்கிய நண்பரே சொன்னாலும் நிராகரித்து விடுவார். அந்த அளவிற்கு நேர்மையான மனிதர்.
இவரின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர வைத்திருக்கும்
46 பெரிய ஆளுமைகளோடு , நண்பர்களோடு தான் பெற்ற அனுபவங்களை நூலாகத் தந்துள்ளார்.
‘திரும்பிப் பார்க்கிறேன்’ நூலை வாசித்துப்பாருங்கள்.
திரும்பிப் பார்ப்பீர்கள் இரவியை
திரும்பிப் பார்ப்பீர்கள் நட்போடு…