நூலின் பெயர் திரும்பிப்பார்க்கிறேன் நூலாசிரியர் கவிஞர் இராஇரவி மதிப்புரை முனைவர் ச சந்திரா

நூலின் பெயர் : திரும்பிப்பார்க்கிறேன் !

நூலாசிரியர் :கவிஞர் இரா.இரவி !

மதிப்புரை :முனைவர் ச. சந்திரா!

நூல் வகை :கட்டுரைகள்

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017. பக்கங்கள் :78 விலை : ரூ70
தொலைபேசி எண்கள் 044 24342810 - 24310769.


தோரண வாயில் :
மதிப்புறு முனைவர் இரா.இரவி படைத்துள்ள "திரும்பிப்பார்க்கிறேன்" என்ற நூல்
வாசிக்கின்ற அனைவரையும் திருப்பி ஒருமுறை வாசிக்க வைக்கும் அளவிற்கு சிறப்பாக
எழுதப்பட்டுள்ளது. எண் கணிதத்தின் முதன்மை எண் 33.இயேசு பெருமானின்
உயிர்த்தெழுதலின் வயது 33.பாரதத்தில் மகளிர்க்கென ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டின்
சதவீதம் 33. வரலாறு,சமூகம்,அரசியல்,விளையாட்டு,திரைப்படம் என எத்துறையை
எடுத்துக்கொண்டாலும் பிரபலமானவர் அனைவரது வாழ்விலும் ஓர் திருப்புமுனை நிகழ்ந்த
வயது 33.இரா.இரவியின் இந்நூலும் அவரது 33-வது படைப்பாகும் என்பது ஒரு
தனிச்சிறப்பாகும்.நவரசம் பொதிந்த "திரும்பிப்பார்க்கிறேன்" என்ற நூல் 46
பல்துறையினரோடு நூலாசிரியர் கொண்ட நட்புறவினை 78 பக்கங்களில் எளிய தமிழில்
நகர்த்திச்செல்கின்றது.
எது முதல் எது வரை ?
தேநீர் விருந்து முதல் அறுசுவை விருந்து வரை,குருதிக்கொடை முதல் புத்தக கொடை
வரை,ஆத்திகன் முதல் நாத்திகன் வரை,அரண்மனை முதல் அகவிழி பார்வையற்றோர்
விடுதி வரை,மடல் முதல் முகநூல் வரை,வாகனக் காப்பகம் முதல் விமான தளம்
வரை,உன்னத நாயகன் கலாம் முதல் உலக நாயகன் கமல் வரை என எல்லாத் தளத்திலும்
நூலாசிரியர் நின்று ஆளுமை நிறைந்த அனைவரையும் திரும்பிப் பார்க்கின்றார்.
ஆசிரியர் கைவண்ணத்தில்...
நூலின் பக்கத்திற்குப் பக்கம் திரு வள்ளுவர் வருகை...நூலில் மயில் விமானத்தில்
பறக்கின்றது.வந்த வருமானம் போகின்றது ;போன வருமானம் வருகின்றது.மூடிய கதவு
திறக்கின்றது ;திறந்த கதவு மூடுகின்றது.பிறந்த வீடு புகுந்த வீடாகின்றது.புத்தகங்கள்
இறக்கை கட்டிக்கொண்டு தன்னிடம் விட்டு வேறிடம் மாறுகின்றது.சொர்க்கமே என்றாலும்
சொந்த ஊரைவிட்டு மாமதுரைக்கு வா!வா! என்கின்றது.புனித தீர்த்தம் திசை மாறி
திக்கெல்லாம் பயணிக்கின்றது..சிலைகள் உயிர் பெற்று தமிழைப் போதிக்கின்றன.
அதிசயமும் ஆச்சரியமும் :
முது முனைவர் இறையன்புவின் இலவச உரை,பத்மஸ்ரீ சாலமன் ஐயாவின் இலவச
அணிந்துரை,கலாமின் பெருந்தன்மை,விளம்பரம் தேடாத ஷிவ் நாடாரின்
மனப்பாங்கு,இரும்புப்பெண்மணியாம் நிர்மலா மோகனின் மன உறுதி,'திருநெல்வேலிக்கே
அல்வாவா?' எனும்படியாக நூலாசிரியரின் வரலாற்றை வடிவமாக்கிய இளம் எழுத்தாளர்
சங்கீத் ராதா,நா.பார்த்த சாரதியின் பிரதிபலன் பாராத சமூக சேவை,பெருங்கூட்டத்திலும்
நூலாசிரியரை உபசரித்த இனமுரசு சத்யராஜின் நினைவுப்பாங்கு,துன்பத்தை மனதில்
புதைத்து விட்டு புன்னகையைப் பரிசளிக்கும் பொறியாளர் சுரேஸ்,திருநாவுக்கரசு
இ.கா.ப.வின் திருவள்ளுவப்பற்று,எம்.ஜி.ஆர் பொதுநலத்துடன் மடைமாற்றம் செய்ததைப்
புரிந்து கொண்டு மனமார ஏற்றுக்கொண்ட நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின்

பெரியோரை மதிக்கும் தன்மை,நீதியரசர் மகாதேவனின் தந்தைப் பற்றும் தமிழ்ப்பற்றும்
இணைந்த-இணைத்த விதம்,புரட்சித்தலைவி அவர்களின் உடனடியாக பாராட்டும்
திறன்,வீரபாண்டியத் தென்னவனின் தன்னலமற்ற இலக்கிய ஈடுபாடு,பழனியப்பன்_கோபி
சகோதரர்களின் ஈடுஇணையற்ற சமூக அக்கறை,நேயர்களை வாசிப்புத் திறனால் ஈர்க்கும்
பண்பலை செல்வ கீதா,எழுத்து வேந்தரின் எளிமை,ஏர்வாடியாரின் , "நண்பர்களால்
நண்பர்களைப் பெறுவோம் "என்ற கோட்பாடு,தந்தை வழி நடக்கும்
கார்த்திகேயன்,தொ.பரமசிவம் அவர்களின் புதல்வியிடம் குடிகொண்டிருக்கும் நெகிழ்ச்சி,
பேரா.ஏ.எட்றேம்ஸ் அவர்களின் மனிதநேயப்பாங்கு, என இனியும் சொல்லிக்கொண்டே
போகலாம் "திரும்பிப்பார்க்கிறேன்"-நூலில் பொதிந்து கிடக்கும் அதிசயத்தையும்
ஆச்சரியத்தையும்.
மனமார...
தன் குறைகளை மனதில் புதைக்காமல் எழுத்துகளில் வெளிப்படுத்தும் நூலாசிரியரின்
பண்பு,ஒடி ஒடி பிறர்க்கு உதவும் உண்மையும் நேர்மையும் மிக்க சுயநலமற்ற
தன்மை,சொல்லில் மட்டும் காட்டாமல் செயலிலும் காட்டும் சமூக சேவகத் திறம்.இதன்வழி
இலக்கியத்துறை மூலம் தான் பெற்ற நட்புத் துணைகளை செய்ந்நன்றியுணர்வோடு
திரும்பிப்பார்த்த நூலாசிரியர் எண்ணிலடங்கா படைப்புக்களை வெளியிட இணையதள
வாசகியர் சார்பாக வாழ்த்துகின்றேன்.

.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (3-May-25, 2:01 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 9

மேலே