யாப்பினுள் அட்டிய நீர் - பழமொழி நானூறு 296

நேரிசை வெண்பா

நூக்கி அவர்வெலினும் தாம்வெலினும் வெஞ்சமத்துள்
தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர்; - அஃதன்றிக்
காப்பி னகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர். 296

- பழமொழி நானூறு

பொருளுரை:

வீரத்திற்குத் தகுதியுடையவர்கள் எனப்படுவார் கொடிய போர்க்களத்துள் அவர் வென்றாலும் தாம் வென்றாலும் அடர்த்துத் தள்ளி வெற்றியைக் காண்பவரே யாவர்; அது செய்தலின்றி, அரணகத்தே இருந்து வெகுள்வாராய் மிகவும் வீரங் கூறுதல் செய்யினுள் விட்ட நீரை ஒக்கும்.

கருத்து:

வீரர் எனப்படுவார் மனத்திண்மையையும் பிறவற்றையும் பெற்று வெற்றியை எதிர்நோக்குபவரே யாவர்.

விளக்கம்:

வயலுள் விட்ட நீர் பயிர்கள் வளர ஏதுவாயினாற் போல, காப்பகத்து இருந்து மிகவுரைத்தல் பகைப் பயிர் வளர்தற்கு ஏதுவாயிற்று. இதனுள் வீரருக்குரிய இலக்கணமும், அவரல்லாரை யறியுமாறும், அவர் தேடிக்கொள்வதும் கூறப்பட்டன.

'யாப்பினுள் அட்டிய நீர்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-23, 11:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே