மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள் – நாலடியார் 393

இன்னிசை வெண்பா
(‘கை’ க’ய்’ க மோனை, ய் இடையின ஆசு)

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்(கு)
இம்மாலை என்செய்வ தென்று 393

- காமநுதலியல், நாலடியார்

பொருளுரை:

கம்மத்தொழில் செய்கின்ற மக்கள், தொழிலை நிறுத்தித் தம் கருவிகளை ஏறக்கட்டிச் சென்ற மயங்கஞ் செய்யும் இம் மாலைப் போதில் மலர்களை ஆராய்ந்து மாலை தொடுப்பவள் நின் பிரிவு கேட்டுத் தனது கையிலிருந்த மாலையை நழுவவிட்டுத் தலைவராகிய துணையைப் பிரிந்த மகளிர்க்கு இந்த மலர்மாலை என்ன பயன் தருவதென்று சொல்லி அழுவாளாயினள்.

கருத்து:

பிரிவினாற் காதலருள்ளம் மென்மையடையும்.

விளக்கம்:

கம்மமென்பது தொழில். வேலை நிறுத்தினார் என்றற்குக் கருவி ஒடுக்கினார் என்றார்;

கம்மியருந் தந்தொழில் விடுத்துத் தம் இல்லஞ் செல்லும் மாலையென்றமையால், தலைவனுந் தான் வினைமேற் சேறலை விடுத்து இல்லந் தங்குதல் வேண்டுமென்னுங் குறிப்புப் பெறப்பட்டது.

காதலர்க்கு மயக்கஞ் செய்யும் மாலையாகலின்1 ‘மம்மர்கொள் மாலை' யெனப்பட்டது;

இது தலைமகள் செலவு உடன்படாமையைத் தலைமகற்குத் தோழி கூறியது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Mar-23, 6:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே