தனிமனித ஒழுக்கம் - ஒழித்திடுவோம் ஊழலை
தனிமனித ஒழுக்கமே என்றும்
தேசத்தில் தவறுகளை தீர்மானிக்கும்,
ஊழல் ஊழல் என்று மக்கள்
அரசியல்வாதிகளையும்
அரசாங்க ஊழியர்களையும்
ஆங்காங்கே கண்டறிந்து
ஆர்பாட்டம் நடத்தினாலும்,
தான் செய்யும் தனிமனித ஊழலை
தரம் கண்டு திருத்துகின்றனரோ ?
எங்கும் ஊழல் எதிலும் ஊழல்
என்று ஊழலை பற்றி
ஒருவாறாய் பேசும் மனிதா
நீ செய்யும் ஊழல் அதை
என்ன செய்து திருத்திகொள்வாய்.
ஊழல் என்ற சொல்
அரசியலிலும் ஆட்சியிலும்
மக்கள் அலுவலகங்களிலும் மட்டுமல்லவே
உன்னையே நீ ஒருமுறை கேட்டுவிடு
உண்மையான ஊழல் நம்
ஒவ்வருவரிடத்தும் தான் உள்ளது.
நம்மில் எத்தனை மனிதர்கள்
ஓட்டுனர் உரிமம் வைத்து
உண்மையாக வாழ்கிறோம் ,
பதினெட்டு வயதிற்க்குமுன்
பையனுக்கு இருசக்கரவாகனம்
வாங்கித்தந்தால் மட்டும்போதுமா ?
உரிமம் வேண்டாமா அது ஊழல் இல்லையா ?
வாகன பதிவீட்டு புத்தகம்கூட
புதுப்பிப்பதில் ஊழல்.
வீட்டுவரி கட்டுவதில் ஊழல் ,
சொத்து வரிகளில் ஊழல் ,
நம்மை நம்பும் நண்பர்களிடமே
நாசுக்காய் ஊழல் செய்கிறோம் !
லஞ்சம் லஞ்சம் என்று
லாவகமாக பேசும் நாம் தானே
அதன் அஸ்திவாரமும் ஆணிவேரும்,
தகுதி இல்லாத ஒருவன்
தன் வேலைக்காக லஞ்சம் தருகிறான்,
தவறு தன் பக்கம் இருக்க
அதிகாரிகளின் மேல் மட்டும் அவதூறா ?
தன் தவறை மறைக்க
தன் காரியம் கைகூட
தகுதிக்குமேல் லஞ்சம் தருகிறோம் நம்
தனிப்பட்ட தேவைகளுக்காக
தவறின் ஆரம்பமே இங்குதானே ...
உரியதை செய்ய அவன் லஞ்சம் கேட்டால்
உன் உரிமை அங்கு மறுக்கபடுகிறது,
உரிமை அல்லா ஒன்றிற்கு நாம் தரும் விலை
ஊழலை அங்கே உரித்துக்காட்டுகிறது.
வாங்குபவன் நல்லவன் என்று அர்த்தமல்ல .
தவறு என்பது நம் பக்கமும் தானே ?
எத்தனைபேர் சாலைவிதியை
சரியாய் பின்பற்றுகிறோம்
மருத்துவ ஊர்திக்கு (ஆம்புலன்ஸ்)
மனதார வழிவிடும் எண்ணம்
மனிதனில் எத்தனைபேருக்கு உள்ளதோ ?
சட்ட திட்டத்தை சகட்டுமேனிக்கு தாண்டுகிறோம்
விதிகளையும் கண்டபடி மீறுகிறோம் .
சாலைவிதியும் மீறிவிட்டால்
காவலர் கேக்கும் முதல் கேள்வி
இங்கு கொடுத்தால் இத்தனை
நீதிமன்றம் சென்றால் இத்தனை
சட்டென்று நம் கை சரளமாக கொடுக்கிறதே..
இதுதானே ஊழல்
இதன் பெயர்தானே லஞ்சம்
ஊழல் லஞ்சம் என உணர்வில்லாது வாழும்
ஒவ்வொருவருக்கும் உயர்வான தண்டனை
உடனடியாக தரவேண்டும் ...
தன்னுரிமை ஒவ்வொன்றும்
தரப்படாமல் மறுக்கும் நேரம்
தளராமல் போராடி
தகுதிகளை பெற்றிடுவோம்.
இன்று உனக்கு நேர்ந்த மறுப்பு
நாளை எனக்கு நேரும் மறுப்பு...
தன்கடமை மீறி
தனித்துவத்தை இழந்து
தரணியிலே வாழ்ந்து
தவறு தவறு என பேசி
தன் தவறை மறந்துவிட்டால்
ஒழிந்திடுமா ஊழலும் லஞ்சமும் ...
ஒவ்வொரு குடிமகனும்
தன்கடமை இன்னதென
தானறிந்து நடந்துகொண்டால்
தவறுகளை திருத்திடலாம்
தன்னுரிமை பெற்றிடலாம்
ஊழல்களை ஒழித்திடலாம்
உண்மையாக வாழ்ந்திடலாம்...