வழங்கிடும் பொருட்கள் வள்ளலி னெண்ணம் வளம்பெறவே - எழுசீர் ஆசிரிய விருத்தம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் மா காய்)
(1, 3. 5 சீர்களில் மோனை)
தண்மையென் றேசொல் தகவுடன் செய்யும்
..தளர்விலாச் செயல்கள் நன்மையென்றே;
திண்மையென் றேசொல் திறமுடன் செய்தால்
..தேனென நலனை விளைக்குமென்றே!
நுண்மையென் றேசொல் நுவன்றிடுஞ் சொற்கள்
..நொய்விலா நன்மை பயக்குமென்றே;
வண்மையென் றேசொல் வழங்கிடும் பொருட்கள்
..வள்ளலி னெண்ணம் வளம்பெறவே!
- வ.க.கன்னியப்பன்
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுத விரும்பும் கவிஞர்கள் சீர் ஒழுங்கையும், எதுகை, மோனையையும் ஆழ்ந்து கவனித்துப் பொருள் சிறக்க எழுத முயலுங்கள்.
சீர் ஒழுங்கில்லாமல் இருந்தாலும் ’அவலோகிதம்’ சொல்லி விடும்.
சரியான முறையில் பயன்படுத்தினால் ’அவலோகிதம்’ ஓர் வரப்பிரசாதமே!