ஒரு மரணம்

ஒரு மரணம்
அலுவலகத்தில் கம்யூட்டர் முன்னால் உட்கார்ந்து பணி செய்து கொண்டிருந்தவனின் செல்போன் சத்தம் எழுப்ப எடுத்து காதில் வாங்கிய செய்தியை கேட்டு கால்கள் தானாக நடுங்கின. எப்படி? கிளம்பும்போது நன்றாகத்தானே இருந்தார். பத்து மணிக்கு இப்படி செய்தி வருகிறதே…
எழுந்தவன் கால்கள் தள்ளாட அங்கிருந்த மேசையை பிடித்து சமாளித்து கொள்கிறான். என்ன செயவது? ஒன்றும் புரியவில்லை. மெல்ல நடந்து மேல் அதிகாரி அறை முன் நிற்கிறான். கதவை தட்டி போகலாமா? மனம் தடுமாற்றத்தில் நிற்க அவரே கதவை திறந்து வெளியில் வந்தவர் இவன் எதிரில் கண்கள் கலங்கிய நிலையில் நிற்பதை பார்த்தவர் “வாட்ஸ் ராங் ரகு? அவனின் தோளை தொடுகிறார்.
மனதின் சோகம் சட்டென தோளை தொடுதலில் இருந்த ஸ்பரிசத்தால் கட கடவென கண்ணீர் வர “சார் அப்பா தவறிட்டாராம்” லீவு வேணும் சார்.
“கர்த்தரே’ சட்டென தோளின் இரு பக்கமும் தொட்டு நெற்றியில் வைத்து கொண்டவர் நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கறேன், சொல்லி அவனை அலுவலக வாசல் வரை கொண்டு வந்து விட்டவர், “ஓரு நிமிசம், நீங்க தனியா டூ வீலர் ஓட்ட வேண்டாம், ஒரு ஸ்டாப்பை அனுப்பறேன், அவரு உங்களை வீட்டுல கொண்டு வந்து விட்டுடுவாரு. “சந்திரா” உள்புறம் திரும்பி அழைக்க வாலிபன் ஒருவன் ஓடி வந்தான், சாரை அவர் வண்டியிலயே கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு நீ ஆட்டோ பிடிச்சு வந்துடு, கையில் கொஞ்சம் பணம் கொடுத்தார். திரும்பி ரகு பணம் செலவுக்கு தேவைப்பட்டா எனக்கு போன் பண்ணூங்க, சொல்லி விட்டு உள்புறமாக சென்றார்.
வீடு கொஞ்சம் பரபரப்பாக இருந்தது, அக்கம் பக்கத்து பெண்கள் வாசலில் நின்று கொண்டிருந்தனர். இவன் மெல்ல உள்ளே நுழைந்தான். அப்பா கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அம்மா அருகில் நின்று இவனை அழுதபடி பார்த்தாள். அருகில் சென்று பார்த்தான், தூங்குவது போலத்தான் இருந்தார்.
அருகில் வந்த இவன் மனைவி ஏங்க? உங்க அண்ணனுக்கு போன் போட்டு சொல்லிட்டேன். அவரையே எல்லாத்துக்கும் தகவல் தர சொல்லிட்டேன். பாவம் இந்த வீட்டுக்கு மருமகளாய் வந்து ஆறு மாதம்தாம் ஆகிறது, அதற்குள் இப்படி ஒரு அனுபவம்.
‘ரகு’ குரல் கேட்க வாசலில் மூன்று இளைஞர்கள், இவன் தலையசைத்து வாங்க உள்ளே சைகை காட்டினான். அவர்களின் வருகை உண்மையில் மனதுக்கு ஒரு தைரியத்தை தந்தது.
எப்பட்றா?
தெரியலை காலையில கிளம்பும்போது நல்லாத்தான் இருந்தாரு, ஒரு மணி நேரத்துல போன் வருது, என்ன பண்னறதூன்னு தெரியலை, குரல் உடைந்தது.
டேய், மனசை தளர விடாதே, நாங்க இருக்கறோம், நடக்க வேண்டியதை பார்க்கலாம், அவர்களுக்குள் சின்ன கலந்தாலோசனை, சரி நான் முன்னாடி ‘சாமியானா, சேர்’ எல்லாத்தையும் ரெடி பண்ண்றேன், நீ கிரிமிட்டோரியம், அப்ளிகேசனை வாங்கி பில் பண்ணி டாக்டர்கிட்ட காண்பிச்சு கையெழுத்து வாங்கி அங்க கொடுத்துட்டு டைம் வாங்கிக்க, ரகுகிட்ட டைம் கேட்டு வாங்கிட்டு போயிடு.
அவர்களுக்குள்ளாகவே திட்டங்கள் போடப்பட்டு வேலைகள் பிரித்து கொள்ளப்பட்டது. ஒருவன் மட்டும் ரகுவுடன் இருக்க வேண்டும், அப்படியே அருகில் இருக்கும் ஹோட்டலில் வருபவர்களுக்கு டீ காப்பி சப்ளை செய்து கொள்ளவும், உணவளிக்கும் ஏற்பாட்டையும் அவனை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
ரகு அவர்களை நிறுத்தி கொஞ்சம் இருங்க கையில் எவ்வளவு இருக்கும்? யோசனையாய் மனைவி முகம் பார்க்க அவள் உள்ளே சென்றவள் இப்ப அஞ்சாயிரம் இருக்கு, கையில் கொண்டு வந்து கொடுத்தாள். மீண்டும் ஒரு ஆலோசனை, மூவரும் கூடி பேசி ரகு பணத்துக்கு நம்ம பரமேஸ்கிட்ட கேட்டோம், இப்ப வந்தா இருபது தர்றேன்னான், போய் வாங்கிக்கறோம், நீ இந்த அஞ்ச வச்சு இங்க சமாளி…
ரகு அப்பாவின் முகத்தையே பார்த்தான், அப்பா இப்ப பார்த்தியா இவனுங்க என்னை பார்க்க வரும் போதெல்லாம் எங்கிட்டே சொல்லுவியே, “ரகு” பிரண்ட்ஷிப் முக்கியம்தான், ஆனா அது ஒரு கட்டம் வரைக்கும்தான், உனக்குன்னு ஒரு வேலை கிடைச்சாச்சு, முதல்ல செட்டில் ஆகற வழியை பாருன்னு.
இருபத்து ஆறு வருட வாழ்க்கையில் இவர்களின் நட்பு பதினைந்து பதினாறு வருடங்களாவது இருக்கவேண்டும். பக்கத்திலிருந்த கார்ப்பரேசன் ஸ்கூலில் ஆரம்பித்த நெருக்கம் இதுவரை வந்திருக்கிறது..
உறவுகள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விட்டனர். வரும்போது கண்கள் துடிக்க உதடு அழுவது போல் வந்தவர்கள், ஐந்து நிமிடம் பார்த்து விட்டு வெளியே வந்து சகஜமாகி வந்தனர். ரகு ‘மாமாவுக்கு’ சுகர் இருக்குடா அதனால நேரத்துக்கு சாப்பிட்றனும், இவன் காதில் ஓதினாள் அக்கா. கல்யாணம் செய்து கொடுத்து ஏழு வருடங்களாகிறது.
பெரியப்பாவை மெல்ல கூட்டி வந்தார்கள், தடுமாறி வந்தவர் போய் பார்த்து விட்டு என்னிய விட நாலு வருசம் சின்னவன் அதுக்குள்ள போயிட்டான் ! போனதற்கு கவலைப்பட்டாரா, இல்லை அடுத்து நமக்கா என்று கவலைப்பட்டாரா? தெரியவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் அதிகமாகி ரகு சாப்பாடு இன்னும் வரலை?, காப்பி இன்னும் கொஞ்சம் சொல்லு, நல்லா டிகாசன் போட்டு தர சொல்லு, இப்படி ஏராளமான கோரிக்கைகள் வர ஆரம்பித்திருந்தது. அங்கு வந்திருப்பது ஒரு மரணத்திற்கு என்பது கூட அவர்களின் கோரிக்கை வைத்த தொனியில் தென்படவில்லை. பாவம் ரகுவின் கூட இருந்த நண்பன் எல்லாவற்றையும் சமாளித்தான்.
பரவாயில்லை ‘ரகுவோட பிரண்ட்’ எல்லாத்தையும் எடுத்து கட்டி செய்யறான், நம்ம ஆளா? இப்படி இரகசிய விசாரணைகள் வேறு. பையன் நல்லாயிருப்பதால் பெண் வைத்திருப்பவர்களுக்கு வளைத்து கொள்ளும் எண்ணம்.
ரகுவின் நண்பன்தான், வீட்டுக்குள் போய் ரகுவின் அம்மாவையும், இவன் மனைவியையும் நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் சாப்பிட்டுடுங்க, இல்லையின்னா சமாளிக்கறது சிரமம் என்று அனுப்பி வைத்தான்.
இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்க எந்த அசைவும் இல்லாமல் அமைதியாய் படுத்திருந்தது அப்பாவின் உடல். திடீரென எழுந்து இங்கென்ன கலாட்டா? என்று கேட்டு விடுவாரோ என்று கூட நினைத்தான் ரகு.
அலுவலகத்தில் இருந்து ஒரு சிலர் வந்திருந்தனர். இவன் அதிகாரியும் வந்து பார்த்து விட்டு கையில் ஐந்தாயிரம் கொடுத்து விட்டு போனார். இவனுக்கு மனசு பாரமாகிக்கொண்டே போனது.
அப்பாவை கொண்டு போய் எரித்து முடித்து விட்டு வீடு வரும்பொழுது மணி நாலாகியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கரைந்து வீட்டில் அக்கா, அவள் குழந்தைகள், கணவருக்கு லீவு கிடையாது என்று அவளே அனுப்பி வைத்து விட்டாள். இவனும் அம்மா மனைவி இவர்கள் மட்டுமே இருந்தனர்.
வந்த கூட்டம் குடித்து வீசிய டம்ளர், சாப்பிட்டு போட்ட தட்டுக்கள், அதுபோக விசிறி எறிந்திருந்த குப்பைகள் இவற்றை ரகுவும் அவன் மனைவியும் கூட்டி சரி செய்தபோது மணி ஆறு மணிக்கு மேல் ஆகி விட்டது.
நண்பர்களை இவன்தான் கட்டாயப்படுத்தி நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். பாவம் அவர்கள் மதியம் தாங்கள் கூட சாப்பிடாமல் இந்த கூட்டத்திற்கு சேவைகள் செய்து கொண்டு..! இவன் மீதிருந்த நட்பால். இதற்கெல்லாம் இவன் எப்படி அவர்களுக்கு ஈடு கட்டப்போகிறான்?
கிட்டதட்ட ஒரு வாரம் ஓடியிருக்க, செலவுகளை கணக்கு போட்டு பார்த்தவன் மலைத்து போனான். ஐம்பதாயிரம் பக்கம் ஆகியிருந்தது.
தடுக்கமுடியாத செலவு, சமாளித்து கொள்ளலாம், மனசு தயாரானாலும், நல்ல வேளை அப்பா சட்டென தன்னை இந்த உலகில் இருந்து முடித்து கொண்டார். இல்லையென்றால் மருத்துவமனையில் சேர்த்து, போராடி ஏராளமான செலவுகள் செய்து அதன் பின் பிரயோசனமில்லாமல்.. அப்பா தன்னை காப்பாறிவிட்டார் என்று கூட ஒரு பக்கம் மனசு சந்தோசப்பட்டது, இந்த எண்ணம் தவறோ? என்னும் சந்தேகம் கூடவே வந்தாலும்..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (18-Oct-23, 10:40 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : oru maranam
பார்வை : 144

மேலே