திருந்திழாய் காதலர் தீர்குவர் அல்லர் - கார் நாற்பது 15
இன்னிசை வெண்பா
திருந்திழாய்! காதலர் தீர்குவர் அல்லர்-
குருந்தின் குவியிணர் உள்ளுறை ஆகத்
திருந்தின் இளிவண்டு பாட, இருந்தும்பி
இன்குழல் ஊதும் பொழுது! 15
- கார் நாற்பது
பொருளுரை:
திருந்திய அணிகளையுடையாய்! குருந்த மரத்தின் குவிந்த பூங்கொத்துக்களின் உள்ளிடமே தமக்கு உறைவிடமாக இருந்து திருந்திய இனிய இளியென்னும் பண்ணை வண்டுகள் பாட கரிய தும்பிகள் இனிய குழலை ஊதாநிற்கும் இக்காலத்தில் நம் தலைவர் நம்மை நீங்கியிருப்பாரல்லர்!
விளியேற்றுத் திருந்திழாய் என்றாயது; வயங்கிழாய் போல்வனவும் இன்ன. உறை என்னும் முதனிலைத் தொழிற் பெயர் உறையும் கடத்திற்காயிற்று; உள்ளுறை என்பதனை உறையுள் என மாறுதலும் ஆம்.