யாங்குடுமி நேர்மயிரும் உய்த லொருதிங்கள் - சிறுபஞ்ச மூலம் 29

நேரிசை வெண்பா

நெய்தன் முகிழ்த்துணை யாங்குடுமி நேர்மயிரும்
உய்த லொருதிங்கள் நாளாகுஞ் - செய்த
னுணங்குநூல் ஓதுதல் கேட்டல்மா ணாக்கர்
வணங்கி வலங்கொண்டு வந்து! 29

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

மாணாக்கருடைய சிகையானது கருநெய்தலின் அரும்பினளவாயிருத்தல் ஆகும்; பொருந்திய மயிர் கழுவாது ஒழிதலும் ஒருமாத தினங்கள் ஆகும்; அவர்கள் செய்தலும் (ஆசிரியனிடத்தே) வந்து (அவனைத்) தொழுது வலப்புறமாகச் சுற்றிவந்து நுட்பமாகிய நூல்களைப் படித்தலும், கேட்டலும் ஆகும்.

பொழிப்புரை:

நெய்தல் மொட்டினளவினதாம் மாணாக்கர்க்குக் குடுமி, தலையின்கண் நீண்டமயிரு மண்ணாதொழிவது ஒருதிங்கணாளாகும், இனி அவர்கள் செய்கை ஆசானை வலங்கொண்டுவந்து வணங்குதலும், நூல்களைப் பாடமோதலும், ஓதியவற்றின் பொருள் கேட்டலுமாக மூன்று.

கருத்துரை:

மாணாக்கன் குடுமி நெய்தல் மொட்டளவாக இருக்க வேண்டும், அவன் மாதம் ஒருமுறை தலை முழுகலாம்; ஆசிரியரை வணங்குதல் ஓதுதல் கேட்டல் அவனுக்குரிய கடமையாம்.

நெய்தல் - கருநெய்தல், முகிழ் - மொட்டு, மொக்கு, உய்தல் - ஒழிதல் (கழுவா தொழிதல்) அதாவது தலை முழுகாதொழிதல்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-25, 8:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே