நெகிழ்ந்த அருளினால் ஆகும் அறம் - சிறுபஞ்ச மூலம் 34
நேரிசை வெண்பா
வைததனா னாகும் வசைவணக்க நன்றாகச்
செய்ததனா னாகுஞ் செழுங்குலமுற் - செய்த
பொருளினா னாகுமாம் போக நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம்! 34
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை: ஒருவன் பிறனை வைததனால் (அவனுக்கு) வசையுண்டாகும், நன்மை வணக்கம் என்பனவற்றைப் பிறர்க்கும் செய்ததனால் வளமையாகிய குடிப்பிறப்புமாகும், ஈட்டிய பொருளினால் இன்பம் உண்டாகும். (பிறர் பொருட்டுத்) தன் மனம் நெகிழ்ந்த அருள் காரணமாக தருமம் உண்டாகும்;
பொழிப்புரை:
பிறனையொருவன் வைததனால் வசையாகும்; பிறர்க்கு வணக்கத்தையும், நன்மையையும் உளவாகச் செய்ததனால் வளமையுடைய குடிப்பிறப்பாம்; காலத்திலே முந்துறச் செய்த பொருளானின்ப மாகும்; பிறர்க்குத் தன்மனம் நெகிழ்ந்த அருளினான் அறமாகும்.
கருத்துரை:
பிறரைத் திட்டுதலாற் பழியும், வணக்கமும் நன்மையும் மேற்கொண்டிருத்தலாற் குலமேன்மையும், பொருளாற் போகமும், அருளால் அறமும் உண்டாகும்.
வணக்கம் என்பதை ஒரு பொருளாகவும் நன்று என்பதை ஒரு பொருளாகவுங் கொள்க; நன்று - பெயர், செய்தல் ஈண்டுப் பெருக்குதல் என்க!
போகம் - நுகர்ச்சி இன்பம், அருள் - காரணங் கருதாது ஒரு தன்மைத்தாய் எல்லார் மேலுஞ் செல்லுமிரக்கப் பெருக்கு!