கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென - முத்தொள்ளாயிரம் 59
நேரிசை வெண்பா
கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள்! 59
- முத்தொள்ளாயிரம்
பொருளுரை
கொழுத்த தென்னைமரம் சூழ்ந்திருக்கும் ஊர் கூடல் நகரம்; அவன் இந்தக் கூடல் அரசன்; அவனை விரும்பி என் நெஞ்சு சென்றுவிட்டது. இது அன்னைக்குத் தெரியவில்லை. வெறும் உடம்புக் கூட்டுக்குக் காவல் போட்டிருக்கிறாள்!
குறும்பூழ் = காடை என்னும் பறவை; காடை பிடிக்கும் வேடன் வலையை விரித்து வைப்பான். அதன் அருகில் தான் பழக்கி வைத்திருக்கும் பெண்-காடையைப் பறக்க விடுவான். அது ஆண்-காடையை அழைத்துவந்து கூட்டில் விழச் செய்யும். அன்னை அப்படிச் செய்கிறாளே!

