நன்புலத்து வையடக்கி நாளுமா டோபோற்றி - சிறுபஞ்ச மூலம் 59
நேரிசை வெண்பா
நன்புலத்து வையடக்கி நாளுமா டோபோற்றிப்
புன்புலத்தைச் செய்தெருப் போற்றியபி-னின்புலத்தின்
பண்கலப்பை யென்றிவை பாற்படுப் பானுழவோன்
நுண்கலப்பை நூலோது வார்! 59
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
விளைநிலத்திலுள்ள வைக்கோலை (தன்னிடத்துள்ளதாகத்) திரட்டி நாடோறும் உழுமாடுகளைக் காப்பாற்றி புல்லிய நிலத்தை நன்செய்யாகத் திருத்தி எருவினால் அதனைப் போற்றிய பின்பு பண்படுத்தல், கலப்பையால் உழுதல் என்ற இவைகளை (உரமேற்றிய அந்த) நிலத்தினிடத்தே செய்பவன் உழுதொழிலிற் சிறந்தவனாவான், இங்ஙனம் பெரியோர் நுட்பமாகிய உழவு நூலை சொல்லுவார்கள்;
கருத்துரை:
வைக்கோலைச் சேர்த்து, அதனால் உழவெருதுகளைப் போற்றிப் புன்செய்யை எருவிட்டு நன்செய்யாகத் திருத்திப்பின், அந்த நன்செய்யைப் பண்படுத்தல் உழுதல் முதலியவற்றைச் செய்பவனே உழுதொழிலாளன் என்று சொல்லுவர் உழவு நூலோதி யுணர்ந்தோர்.
புலம் - இடம், வயல். அடக்கல் - தன்னிடத்திற் சேர்த்தல், இன்புலம் – நன்செய்;
எருவில்லாமையால் வன்மையற்றிருக்கும் நிலம் புன்புலம் எனப்படும்;.
கலப்பை - கருவியாகு பெயராய் அதன் காரியமாகிய உழவை யுணர்த்தியது.

