காகிதம்
(புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லையில் வறுமையும் வளமையும் கைசேர்த்து நிற்கும் ஒரு கிராமத்தில் வாழப்பட்ட ஒரு சொசைட்டி (ரேசன் கடை ) கணக்கரின் வாழ்க்கையின் பதிவு இந்த காகிதம் சிறுகதை)
----காகிதம்------
“யே,,,,செவத்தாயி பணமரத்தடியில ஒம்மவன் பாண்டிப்பய பால்டாயில குடிச்சுப்புட்டு மசங்கி கெடக்குரானாமுடியோ, ஊரு ஆளுவ எல்லாம் ஞ்சேந்து பெரியாஸ்ப்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்கானுவடி”,,,
என்ற தங்காயியின் அவலச்செய்தி அரிவாள் மனையாய் சிவத்தாயியை பிளந்துபோட்டது.....
சீமைப்பசுவிற்கு தவிடுதண்ணீர் காட்டிக்கொண்டிருப்பதை நிறுத்தும் பொருட்டு கையிலிருந்த மாட்டு கயிற்றை தூக்கி எரிந்து பின் அவளிட்ட கூச்சலில் தெருவிற்குள் மிரண்டு ஓடியது பசு.
சீலையை அள்ளிச்சொருகி அண்டமே சிதற அழுதலும்,விழுதலும்,எழுதலுமாய் பெரியாஸ்பத்திரி நோக்கி ஓடலாயினாள் சிவத்தாயி...
பெரியாஸ்பத்திரியில் அன்றைக்கு தக்க நேரத்தில் மருத்துவர் இருந்தும் பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது..அவன் கண்களையும் நாடித்துடிப்பையும் உற்று பார்த்துவிட்டு,,யப்பா இவனுக்கெல்லாம் சாவர வயசாட சத்தம் போடாம தூக்கிட்டு போங்கப்பா என்று மருத்துவர் சொல்லி முடிப்பதற்குள் அய்யய்யோ எம்புள்ளைய கொண்ணுபுட்டேனே என்று மயங்கி விழுந்தாள் சிவத்தாயி...பாண்டியின் சடலத்தோடு அவள் சரீரத்தையும் வீட்டிற்கு தூக்கி சென்றனர் உடன் வந்தவர்கள்.....
பொறந்தவன் மருந்து குடிச்ச செய்திக்கேட்டு, செம்மண் கரடு முள்ளுக்காடுனு கடந்து கால்சிவந்து ஓடி வந்தாள் சிவத்தாயியின் சக்களத்தி மகள் ரெத்தினம்.. என்னபெத்த அய்யாரே ,நீ பால்டாயில் குடிச்சு போறதுக்கு என்னன்டி செஞ்சாளுவ என்று ரெத்தினம் கூவியதில் நிறையவே அர்த்தம் இருந்தது....
சிவத்தாயி.. கந்தசாமிக்கு இரண்டாந்தாரத்து பெண்டாட்டி.
முதத்தாரம் காசியம்மாள் பிரசவத்தில் ரெத்தினத்தை பெத்து எடுத்து விட்டு மரணித்துப்போனாள்..
கந்தசாமியின் காடு கழனியை பார்க்க பொம்புளை துணை தேவையுன்னு அங்காளி பங்காளி எல்லாம் சேந்து வயசுக்கு வராத செவத்தாயியை இரண்டாந்தாரமா கட்டிவச்சதா ஊருக்குள் பேச்சு..
கந்தசாமியின் மௌசுல கல்யாணம் முடிஞ்ச ரெண்டாவது மாசத்துலயே குத்த வச்சு உக்காந்தா சிவத்தாயினும், அவ மொறைமாமன் கண்ணப்பன்,அவக்கட்டிக்கிட்ட வீட்டுக்கே வந்து இருமனசோடு குச்சிகட்டிபோனானும் அப்பப சொல்லி பெரியக்கெளவி பெருமைப்பட்டதும் உண்டு..
அதற்கு பிறகு ,சிவத்தாயிக்கு நாலு ஆணு ரெண்டு பொண்ணு போறந்ததுனும் அதுல ஒரு ஆணும் ஒரு பொன்னும் கணக்கா அம்மைக்கு அடிப்பட்டு போக அதுக்கு சாட்சியா இன்னைக்கும் சிவத்தாயியின் வீட்டு மாடத்தில் வெள்ளி செவ்வாய் தவறாமல் அகல்விளக்கு கண்சிமிட்டும்...என்பது அந்த ஊரே அறிந்த செய்தி..
கந்தசாமி வீட்டை பற்றி ஊருக்குள் விசாரித்ததில் தெரிந்தது கந்தசாமி வீட்டினை சோறூட்டி வீடுன்னு பேருவிட்டு கூப்பிடுகிற அளவிற்கு.அரிசிசோற்றினை தான் திங்க மட்டுமின்றி வாரவுக போரவுகளுக்கெல்லாம் பந்திவச்சு மகிழ்வதால் இந்த சோறூட்டி பட்டமாம்....
சோளக்கொல்லையில் ராத்திரி காவலுக்கு சென்ற பொது ஒருமுறை கண்டங்கருவளை தீண்டியதில் தெண்டமாய் சரிந்தது கந்தசாமியின் உயிர்..
ஒத்தைபொம்பளையா சக்களத்தி மகளோடு மொத்தம் அஞ்சு பொடுசுகளை ஆளாக்கி வளக்க சிவத்தாயி பட்டசிரமங்கள் மனிதர்களை மீறி சந்திர சூரியனுக்கும் தெரியும் காரணம் இரவு பகல் பாராத அவளின் உழைப்பு என்று தான் சொல்லவேண்டும்..
முதல்த்தாரத்தின் மகள் ரெத்தினம் தன் சின்னாயி சிவத்தாயிக்கு ஈடாய் உழைப்பதில் கெட்டிக்காரி..இன்னும் சொல்லப்போனால் உழைப்புக்கென்றே தன்னை எழுதி தந்த பிரஜை..
சிவத்தாயியின் மூத்தமகன் தர்மராசு அப்பன் கந்தசாமியின் கச்சித வார்ப்பு,காடு கழனியில் அவன் கால்தடம் படாத மண் உண்டென்றால் அது கரையான் களவாண்ட கள்ளிப்பத்தை புதருக்குள் ஒளிந்துள்ள புத்து மட்டுமே..
சிவத்தாயியின் இரண்டாவது பேறு அவளோட சொந்த மகள் சாவித்திரி தங்கதண்டை அகலாமாகி காலை விட்டு நகர்வது தெரிந்தாலும் குனிந்து அதை முறுக்கிவிட்டால்..முதுகெலும்பு முறிஞ்சிடுமோ என்று ஆக்கி தந்ததை தூக்கி திங்க மட்டும் அலுப்பு பாக்காத பாதகத்தி..உழைப்பு ரெண்டு கிலோ எத்தன காசுன்னு கேட்ககூட தயங்காத மகராசி அவள்..
மூன்றாவதாக சிவத்தாயிக்கு பிறந்தவன் தான் பாண்டிப்பய அவன் லேசுபாசா படிக்கபோவ சர்க்கார் சொசைட்டில(ரேசன் கடை) கணக்கர் வேலை செய்ய ஆளாகினான்..
கடைக்குட்டி கிக்லி(எ) ஞ்சுப்புரமணி. சிறு வயதில் தவழும் காலத்தில் ஆட்டு புளுக்கையை அள்ளி வாய்க்குள் போட்டு மெல்லுவதில் லயித்திருந்தான்..அவன் மென்று கொண்டிருக்கும் வேளையில் அவன் கொமுட்டில் குத்தி துப்பச்செய்வாள் சிவத்தாயி...ஞ்சுப்புரமணியும் புளுக்கையை குதப்பி சானியாக துப்புவான்..இது குழந்தை பிராயத்தில் நடந்த கூத்து.. இப்போது அவன் கொண்டை வைத்த குமரிபெண்களையும் நங்கைகளையும் நாடிச்செல்லும் மைனராக உரிமாரியுள்ள விடலை பருவம்..
இப்படி சிவத்தாயியின் பிள்ளைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..
சாவித்திரி,,தன் தாய் சிவத்தாயினை போல் உழைக்காவிட்டாலும் ஊரை தெட்டி தின்னும் குறுக்குவழிகளில் அவள் ஒரு வித்தகி..சிவத்தாயிக்கும் உழைத்து உழைத்து சலித்து போனதால் மகளின் குறுக்கு வழி சிந்தனைகளை நம்பி அதில் இயங்க ஆரம்பித்தாள்...
தன் சக்களத்தி மகள் ரத்தினத்தை பக்கத்து ஊர் குடிகாரன் வீரையனுக்கு நாலாவது தாரமா கட்டிவச்சா சிவத்தாயி..
ஊருக்கே சோறு போடுற மட்டுக்கு சொத்தை வச்சுக்கிட்டு கால்கிராம் கடுக்கன் கூட செய்யாம உன்ன வெருசா என்தலையில சொமத்திட்டாளே உன்சின்னாயின்னு அடிக்கடி ரெத்தினத்த அடித்து துவைப்பான் வீரையன்..முதலில் கட்டிய மூனும் வாழாமல் ஓடிப்போக ரத்தினத்துக்கு மூணு பொண்ணும் கடைசியா ஒரு ஆணும் உண்டாக,புத்திர பாசத்துல குடிய நிறுத்தி உழைக்க ஆரம்பிச்சான் வீரையன்..இடையில் இரண்டாவது பொன்னு மணியரசி பேர்சொல்லா நோயில செத்ததும் சித்தம் கெட்டு போன வீரையன் பழைய நிலை திரும்ப ஐந்தாறு வருஷங்கள் ஆச்சு..இடையில் இடையில் தென்னைமரத்தில் விழுந்த இடிபோல குடும்பச்சுமை முழுவதும் ரத்தினத்தில் மீது விடிய..இட்லி கூடை தூக்கி தெருவெல்லாம் இட்லி விற்று காசு பண்ண துவங்கினாள் அவள்...
மாமன் சித்தங்கெட்டு திரியப்போக, பாதசாரிக்கெல்லாம் சோறு போடுற குடும்பத்துல பொறந்த நீ,இன்னைக்கு கட்டிக்கிட்ட ஊருக்குள்ள இட்லி கூடை தூக்கி அலையறியே அக்கா காசுகூட நாந்தாறேன் கண்ணால பாக்க சலிக்கலையக்கா..என்று தனது வேதனையை ரத்தினத்திடம் சொன்னான் பாண்டி..
இங்கபாருடா தம்பி அக்கா ஒன்னும் களவாட போகலை,தேவிடியா ஆடலைடா, ஓலைச்சுதான் எம்புள்ளயளுக்கு கஞ்சி ஊத்துறேன்..கவலைப்படாம நீ போடா யேன் மவராசா என்று அவனை சமாதானப்படுத்தினாள் ரெத்தினம்..
அக்கா நீ என்ன சொன்னாலும் எம்மனசு கேக்கல சொசைட்டியிலேர்ந்து இட்லிக்கு உளுந்தாவது வாங்கிக்கக்கா,நான் பாத்துக்குறேன்.உன்ன கட்டிகொடுக்கையில வேறுசா தான் அனுப்பினோம் அப்ப நான் சின்னபுள்ள இப்பதான் வளந்துட்டேன்ல இத நான் உனுக்கு செய்யற சீரா ஏத்துக்கடி யக்கா...
மூத்தவன் வயக்காடே சொர்கமுன்னு ஒழச்சு கொட்டுறான்,தாயிமகளுமா ஆசையில ஊரதெட்டி ஒலை எரிக்கிராளுவ..அந்த கடைசிப்பய ஞ்சுப்புரமணியும் கொண்டைவச்ச பொம்பளையா தேடி சுத்துறான்,,கட்டிகொடுத்த புள்ள நீ எப்டி இருக்கனு கேக்க ஒரு நாதியில்லாம போச்சு நான் தாரத நீ மறுக்காம வாங்கிக்க அக்கா என்று அவளை ஒருவாராக சம்மதிக்க செய்தான் பாண்டி. உளுந்தும் மாதாமாதம் ரத்தினத்திற்கு சொசைட்டியிலிருந்து சென்றது.
சொசைட்டியில மண்ணெண்ணெய் ஊத்துகிற ஒத்தமுழி முருகேசன்,சிவத்தாயி காதில் அதை ஓதிவிட,கல்கத்தா காளி,காடேறி சூரியினு சிவத்தாயியும் சாவித்திரியும் பாண்டிப்பையாள படுத்தி எடுத்துட்டாளுக..
ஏன்டா யோக்கியனே,நாங்க ஊரதெட்டி திங்கராதா சொல்லிபுட்டு உளுந்து பருப்புன்னு களவாண்டு அந்த செறுக்கிக்கு படியளக்குறியானு தொடங்கி இன்னும் என்னனமோ ஆயிமகளும் சேந்து ஏசி முடிச்சதும் நொடிஞ்சு போனான் பாண்டி..
எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு வெளில சொன்னா வெக்கமுனு வெளிய சொல்லாம உள்ளுக்குள்ளேயே போட்டு புலுங்கிக்கிட்டே வாழத்தொடங்கினான் பாண்டிப்பய..
அதுக்கும் சத்தியசோதனையா அடுத்தகட்டத்துக்கு போனாளுக சிவத்தாயியும் சாவித்திரியும்...
டேய் பாண்டிப்பயல,ரத்தினத்துக்கு மட்டும் உளுந்து பருப்புன்னு அடிச்சு கொடுக்றியே..நம்ம வயக்காட்டுக்கு ஒரம்,டமக்ரான்னு போட்டா விளைச்சல் அதிகமாகும் நாலு காசு பாக்கலாமுல. சொசைட்டியில இருந்து அந்த ஒரம்,பூச்சிமருந்த எல்லாம் நமக்கு திருப்பிவிடுடான்னு சொல்லிமுடிச்சா சாவித்திரி...
அக்கா,என்னால இத செய்ய முடியாது,தயவு செஞ்சு என்ன தொல்லைப்படுத்தாதிய சர்க்காருக்கு தெரிஞ்சா என் வேலை போயிரும்னு எவ்வளவோ கெஞ்சி பார்த்தான் பாண்டிப்பய....
ஏன்டா, ரத்தினத்துக்கு களவாண்டு கொடுத்தப்ப மட்டும் ஒனக்கு வேலை போவாது.சொந்த வயக்காட்டுக்கு மருந்தணுப்ப மட்டும் வேலை போயிடுமா போடா போ..எவ்வளவு தூரம் நீ இப்டி பண்றன்னு நானும் பாக்குறேன் என்று சபித்து முடித்தாள் சிவத்தாயி...
மனசொடிஞ்ச பாண்டிப்பய அக்கா ரத்தினத்த பார்த்த பின் பணமர காட்டிற்கு சென்று டமக்றான் குடித்து சரிந்தான் ...
இன்றைக்கு எல்லாம் முடிந்து போயிற்று. சிலமாதம் கழித்து அவன் வேலை செய்த சொசைட்டிக்கு இரண்டொரு சர்க்கார் அதிகாரிகள் பாண்டியின் காப்பீட்டு தொகையும் பிராவிடன்ட் பண்டயும் கொடுப்பதற்காக அங்கே வந்தார்கள்...அப்பொழுது அவர்கள் கணக்கு வழக்கு பார்ப்பதற்காக பாண்டி சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கு கோப்பினை எடுத்துவருமாறு அங்கே இருந்த வட்டார அதிகாரியிடம் கூறியதும்,அய்யா நீங்க இருங்க நான் எடுத்துவரேன் என்று சொசைட்டியின் உள்ளறைக்குள் சென்று பீரோவை திறந்து அந்த கோப்பினை எடுத்து அதற்குள் வெகு நேரமாய் எதையோ தேடினான் ஒத்தமுழி முருகேசன்..ஆனால் அவன் தேடியது எதுவும் சிக்கவில்லை,
ஏனப்பா அதுக்குள்ள அப்டி என்னாத்த தான் இவ்வளவு நேரமா தேடுற என்று அதிகாரி ஒருவர் கேட்க ஒண்ணுமில்லை அய்யா என்று கோப்பினை அவர்களிடம் நீட்டினான் முருகேசன்.
டமக்றான் குடிப்பதற்கு முன்னராக ஒரு கடுதாசியை வழியில வந்த ஒத்தமுழி முருகேசனிடம் கொடுத்து முக்கியமான கணக்குடா அதை கணக்குவழக்கு நோட்டுக்குள்ள சொருகிவைனு சொல்லிட்டு பணமரக்காடுபக்கம் போனான் பாண்டி..
அந்த காடுதாசியைத்தான் ஒத்த முழி முருகேசன் தேடி பார்த்தான் ஆனால் அதை காணவில்லை...
கணக்கு வழக்கு படித்த அதிகாரிகள் இந்த காலத்துல ரேசன் கடைல உள்ள அரிசி,பருப்பு,மண்ணெண்ணெய் எல்லாத்தையும் ஆந்திரா கேரளானு கடத்துற சொசைட்டி கணக்கர்களுக்கு மத்தியில இவ்வளவு சுத்தமா கணக்கு பாத்துருக்கானே பாண்டி.. அந்த புள்ளைய பெத்த மகராசியும் அவ குடும்பமும் புண்ணியந்தான் செஞ்சு இருக்கணும் என்று சொன்ன அதிகாரிகள், அந்த பிராவிடன்ட் பண்டயும் காப்பீட்டு தொகையையும் சிவத்தாயிடம் கொடுக்க சொல்லிவிட்டு கிளம்பினார்கள்..
இதையும் மண்ணெண்ணெய் ஊத்தும் ஒத்தமுழி முருகேசன்,, சிவத்தாயிகிட்டயும் சாவித்திரிகிட்டையும் போய் சொன்னதும் இரண்டு பேரும் நெக்குருகி போனார்கள்.. ஆனால் அன்றைக்கு பாண்டி கொடுத்த கடுதாசியில என்ன எழுதியிருந்ததுனு அவனுக்கு தெரியாமல் போனதும் அதை தொலைத்ததும் ஒரு மாபெரும் உறுத்தலாய் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது..
முன்பு ஆயுத பூசைக்கு சொசைட்டி சுத்தம் செய்த பொது அந்த காகிதம் கோப்பை வீட்டு தவறி விழ அதை கூட்டி குப்பையில் தள்ளினாள் சொசைட்டி கூட்டும் பாக்கியம்..
அந்த காகிதம் குப்பைமேட்டில் பாண்டி எழுதிய அந்த வார்த்தைகளை சுமந்து காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது..
அதில் இருந்த வார்த்தைகள் எல்லா தற்கொலை கடிதங்களினும் வித்தியாசப்பட்டுப்போய் இருந்ததற்கு,
இதோ இந்த எழுத்துக்கள் சாட்சி
“மதிப்பு மிக்க வட்டார கூட்டுறவு அதிகாரி அவர்களுக்கு கணக்கர் பாண்டி எழுதிக்கொள்வது
மாதாமாதம் அக்காவுக்கு கொடுத்த மூன்று கிலோ உளுந்திற்கும், கடைசியாய் என் கதை முடிப்பதற்குமாய் எடுத்த நூறு மில்லி டமக்ரானுக்கும் உரிய தொகையினை எனது கணக்கில் பற்று வைத்து இருக்கிறேன்.அதை என் பிராவிடன்ட் பண்டிலிருந்து கழித்து விட உங்களை பணிவோடு கேட்டுகொள்கிறேன் இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள பாண்டி” என்று அந்த கடுதாசியில் எழுதி வைத்திருந்தான்.
அந்த கடுதாசி இதோ இப்பொழுது பெய்கிற மழையில் நனைகிறது,அதில் எழுத்துக்களாய் இருந்த மை இதோ அதன் இயலாமையில் நீலக்கண்ணீராய் கரைகிறது.....
--முற்றும்---