மீனாக்ஷிவேதநாயகமாகிய நான்....,


கோவிலுக்கு புறப்படுவிட்டாயா என கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தார் வேதநாயகம். அப்பப்பா வந்ததும் வராததுமா ஏன் இவ்வளவு ஆர்பாட்டம் என கேட்டவாறு சமையலறையில் இருந்து வெளி வந்தாள் மீனாக்ஷி.இன்னைக்கு சனிக்கிழமை என்பதை நான் மறக்கலங்க கோவிலுக்கு வேண்டிய எல்லாம் எடுத்து தயார வைச்சிட்டேன் நீங்க கிளம்ப வேண்டியது தான் பாக்கி.

இதோ கிளம்பிட்டேன் என முகம் கழுவ சென்றார் வேதநாயகம். சூடாக தன் கணவருக்கு காபி போட்டு எடுத்து வந்தாள் மீனாக்ஷி. என்னமா நேரம் போயிட்டே இருக்கு நீ இன்னும் புறப்படாம ஒவ்வொரு வேலையா செஞ்சிட்டு இருக்க,கிளம்பு கிளம்பு என அவசரப்படுத்தினார். இன்று கோவிலில் பூஜை என்பதை அவள் மறந்து விடவில்லை ஒவ்வொரு சனிக்கிழமையும் கணவனும் மனைவியும் காரமடை பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கமான ஒன்று.

ஏழு வருட தாம்பத்திய வாழ்கையில், குழந்தை இல்லா வேதநாயகம் மீனாக்ஷி தம்பதியினர் தங்கள் குறைகளையும் நிறைகளையும் பெருமாளிடம் கூறி அவனை தரிசிக்க செல்வதோடு மட்டும் அல்லாமல், அவனையே தங்கள் குழந்தையாக நினைத்து, விடுதியில் தங்கி இருக்கும் மகனை பார்க்க வார கடைசியில் பெற்றோர்கள் செல்வதுபோல சக்கரைபொங்கல், புளியோதரை போன்றவற்றை நிவேதானம் செய்திட கொண்டு செல்வர். அன்றும் அதற்காக தான் கிளம்பி கொண்டிருந்தனர்.

பேருந்து நிறுத்தத்தில் வண்டிக்காக காத்திருந்தனர். அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த காட்சியை கண்டு அதிர்ந்தே விட்டார் வேதநாயகம். ரோடோரமாய் சாக கிடக்கும் தாய், பிசியின் கொடுமையில் சிறுமி செய்வதறியாது கீழே கிடந்த வாழை மட்டையால் தன்னை தானே அடித்து கொண்டு வயிரை தொட்டு காட்டி யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள் அங்கிருந்த கடைகளில் எல்லாம்.

யாசகம் பெற்ற காசில் அச்சிறுமி நோய்வாய் பட்டு சாக கிடக்கும் தன் தாய்க்கு ரொட்டியும் பாலும் வங்கி வந்து ஊட்ட ஆரம்பித்தாள். அம்மா உனக்கு பால் கொண்டுவந்திருக்கேன் குடிம்மா குடிம்மா எந்திரிம்மா என்று பிஞ்சுக கையால் தாய் முகத்தை தடவினால் சிறியவள் தன் தாய் இறந்துவிட்டால் என்பது அறியாமல்.

அந்நேரம் கோவிலுக்கு செல்ல பேருந்தும் வந்தது, தம்பதியினர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பேருந்தில் ஏறினர். எப்போதும் பேசிகொண்டே இருவரும் பயணிப்பார்கள் இன்று மௌனமாய் நகர்ந்தது நேரம். கோவில் முன் பேருந்து நின்றது, அவர்கள் மனமோ நிற்காமல் அலைபாய்ந்தது அச்சிறுமியை சுற்றி.

கோவிலுக்குள் செல்ல மீனாக்ஷிக்கு மனம் வரவில்லை. இறங்கிய இடத்தை விட்டு அசையாமல் நின்று விட்டாள். சன்னதிக்கு போலாம் வா என் அழைத்திட அவரிடமும் வார்த்தை இல்லாமல் இருந்தது. ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு சன்னதிக்குள் நுழைந்தனர் தம்பதிகள்.

அன்றைய தினம் இறைவனை குழந்தையாய் பாவித்து பாமாலை பாடியவாறு இருந்தனர் கோவிலுக்கு வருவோர்கள். அதை கேட்க கேட்க மீனாக்ஷிக்கு மனதிற்குள் ஏதோ பிசைய தொடங்கியது. பாதியிலே பூஜையில் இருந்து எழுந்து போலாமாங்க என்றால் கணவனை நோக்கி. என்ன இது பாதிலேயே என்று கேட்க மனமில்லாமல் தானும் உடனே புறப்பட்டுவிட்டார்.

அவர்கள் வெளியே செல்லவும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. சிறிது நேர பயணத்தின் பின் இருவரும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார்கள். இருவரின் கண்களும் அச்சிறுமிக்காக பேருந்து நிறுத்தத்தை சல்லடையாக அலசியது. அவர்களுக்கு காட்சி தந்தது அவள் கீழே போட்ட வாழ மட்டை மட்டுமே.

அந்த நொடி மீனாக்ஷி குழந்தை போல அழ தொடங்கிவிட்டால் அந்த குழந்தையை நினைத்து. அப்போது அமரர் ஊர்தி ஒன்று அவர்களை கடந்து சென்று ஓரிடத்தில் நின்றது, அவ்வண்டியில் இருந்து அச்சிறுமி இறக்கிவிடப்படாள்.

எங்கே போவது, என்ன செய்வது என தெரியாமல் சிறுமி அழுது கொண்டே தாய் படுத்து கிடந்த இடம் நோக்கி நடக்கலானாள் எல்லோரும் வேடிக்கை பார்க்க, தன்னை மறந்த மீனாக்ஷி ஓடி சென்று அக்குழந்தையை வாரி அனைத்தாள். தன் சேலை நுனியால் சிறுமியின் கண்ணீரை துடைத்து மீண்டும் அவளை கட்டி அனைத்தாள் பெரியவள்.

தாயின் அன்புக்கு ஏங்கிய பிஞ்சு, அவளை அன்னையாக நினைத்து மீனாக்ஷி சிந்திய அன்பில் தன்னை மறந்தாள். அம்மா அம்மா என்று கதறிவிட்டாள் சிறியவள். பிள்ளை செல்வத்திற்காக ஏங்கிய பெரியவள் குழந்தை முன் குழந்தையாக மாறி சிறியவளை தேற்ற தொடங்கினால்.

வேதநாயகம் எதுவும் கூறாமல் இவை அனைத்தையும் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தார். தாய்மையின் ஏக்கத்தை, தன் மனைவி என்னும் மூத்த குழந்தையிடம் கண்கூடாக இன்று தான் கண்டார் வேதநாயகம். வா போகலாம் நேரமாச்சி என்று மீனாட்சியை கணவன் அழைக்க அப்போது தான் நினைவு வந்தது அவளுக்கு செய்வதறியாது கலங்கியவள் கண்களில் வெள்ளம் பெருக்கெடுக்க அவள் மெல்ல திரும்பிய போது, நம் குழந்தையை அழைத்து கொண்டு என்ற கணவனின் வார்த்தை தேனாய் இனிக்க, பெருக்கெடுத்த வெள்ளம் - ஆனந்த அலையாய் மாறியது!!!

குழந்தைக்கு தாய் ஆக இயலாதவளை ஏற்க மறுக்கும் சில மனிதர்கள் உள்ள சமுதாயத்தில் தன்னை குழந்தையாக பாவித்து, இன்று மற்றொரு குழந்தையையும் தனக்காக ஏற்கும் தன் கணவனின் தூய உள்ளத்தை விட இமயமலை உயரம் சிறிதாக தோன்றியது மீனாக்ஷிக்கு. இறைவனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிகொண்டே வீடிற்கு நடக்கலானாள் மீனாக்ஷி.

எழுதியவர் : Meenakshikannan (17-Nov-11, 5:05 pm)
பார்வை : 1123

மேலே