அவள் உயர் நீதி மன்றம் செல்கிறாள்...
கிண்டி பேருந்து நிலையம். மதிய நேரம் சுமாராக 2:15. அலுவலகத்திருக்க செல்லும் வழியில் நான். என் பெயர்... அது இதற்க்கு இங்கு. கதைக்குச் செல்வோம். பேருந்து வந்தது. அமர இருக்கை கிடைத்தது. டிவிஎஸ் செல்ல டிக்கெட் விலை 7 ரூபாய். ஏனென்றால் அது சொகுசுப் பேருந்து. ஆமாம். முன் பக்கக் கண்ணாடியில் எழுதியிருந்தது.
அனேகமாக அங்கிருந்து இரண்டாவது நிறுத்தம் என்று நினைக்கிறேன். சிலர் இறங்க சிலர் ஏற பேருந்து புறப்பட்டது. அவர்களில் ஒருத்தி நான் அமர்ந்திருந்த முன் இருக்கையில் அமர்ந்தாள். சுமார் என்ற அளவீட்டைக் காட்டிலும் குறைவான மற்றும் ஓரளவு கந்தலான சுடிதார். வேறு ஏதோ அணிகலன்கள் இருந்ததாக நினைவு இல்லை. அதையெல்லாம் கவனித்ததாக ஞாபகமும் இல்லை. ஏதோ கலக்கமாக, சோர்வாக, ஓரளவுக்கு களைந்த கூந்தல் தலையுடன் இருந்தாள்.
கனமான நடத்துனர். கனிவான குரலில் அங்கும் இங்கும் சென்று, டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். இவளிடமும் கேட்டார் "எங்கம்மா போகணும்?". அவள் உயர் நீதி மன்றம் என்றாள். டிக்கெட் 7 ரூபாய் என்றார். காசு இல்லை என்று சொல்லி விட்டு மெதுவாக ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டால் சிறு தயக்க பாவனையுடன். "என்னம்மா நீ. டிவிஎஸ்ல செக்கருங்க நிப்பாங்க. நீ அடுத்த ஸ்டாப்பிங்கிலேயே எரங்கிடும்மா" என்றார் நடத்துனர். இறக்க குணம் எனக்கு எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. பத்து ரூபாயை நீட்டி, "அவங்களுக்கு டிக்கெட் கொடுத்துடுங்க" என்றேன். டிக்கெட்டை அவள்ளுக்கும் மீதி சில்லரையும் கண்களின் வழி நன்றி போல ஏதோ ஒன்றை எனக்கும் கொடுத்துச் சென்றார் தன் இருக்கைக்கு.
அவள் ஏன் உயர் நீதி மன்றம் செல்ல வேண்டும். ஒரு வேலை மாமியார் கொடுமையால் புகார் கொடுக்கச் செல்கிறாளோ... அல்லது எங்கோ வேலை முடித்து விட்டு வீடு செல்கிறளோ... அல்லது ஏதோ குற்றம் செய்து பிடிபட்டு காவலில் இருந்து தப்பித்தவளோ... அல்லது அந்த மாதிரிப் பெண்ணோ... அந்தக் கற்பனைகள் எல்லாம் எனக்கெதற்கு. எப்படி இருந்தால் என்ன. ஏதோ பாவ தோரணை தெரிந்தது. எனக்கு ஏன் அந்த இறக்கம் என்றிருக்க நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. இறங்கிவிட்டேன் நான். இறங்கவில்லை சிந்தனையில் அவளுக்கான கற்பனைகள்.