"மகாகவியை நோக்கி பயணிக்கும் பாப்பா"


===================================
{காதலும் ஜாதியும்} {பாப்பாவாக நான்}
===================================

தேடலில் கிடைத்த சொந்தம்,
கூடலில் விளைந்த இன்பம்....

ஐயிரண்டு மாதம் அடங்கி கிடந்து,
அதன்பின்னே பிறந்து வளர்ந்து...!

கண் திறந்த வேளையிலே கனிவான
வார்த்தை காதில் விழவில்லை,
சாதி மிதிப்பட்டு வீழ்ந்த மானிடப்பதர்
இன்னும் மீண்டு எழவில்லை.....!

இனம் புரியாமல் தானே காதலும் வந்தது,
எந்த இனம் என்று கேட்டதும்
காதல் மனம் நொந்தது..,
காதலித்த இருவர் உள்ளம்
தீயினிலே வெந்தது.....!

"சாதிகள் இல்லையடி பாப்பா"
என்று சொன்ன ஐயா "பாரதியே"
சாதி எனும் சாக்கடையில் தவிக்கும்
பார் நீயும் என் கதியே....!

என்ன சாதிக்க பிறந்தாய் நீ
என கேட்க யாரும் முன்வரவில்லை....
என்ன சாதிக்கு பிறந்தாய் நீ
என கேட்பவர்களின் நீளம்
இன்னும் முடிவுறவில்லை....

அவர்கள் கொண்டாடும் சாதி,மத,பேதம்
நாகரீக மாற்றத்தாள் வந்தது..,
நாங்கள் கொண்டாடும் காதலால்
தான் நாகரீக மாற்றமே வந்தது....!

ஐயர் ஆனால் என்ன
அபு சலீம் ஆனால் என்ன...
மனிதன் வளர்ச்சிக்கு அஸ்திவாரமே
ஆதிமனிதன் தானே.....!

குழந்தை, குமரன், வாலிபன்,
இளைஞன், குடிமகன், வயோதிகன்.....
என படைக்கப்பட்ட பருவம்
பாடைவரை செல்ல,
இடைப்பட்ட வாழ்க்கையில்
ஜாதி எனை கொல்ல,

ஏட்டில் உள்ள ஜாதியானாலும்
ரோட்டில் வாழும் மீதியானாலும்

வாழ்வியல் இறுதியில்
இழைக்கப்படும் பெயர் "பிணம்"

யானைக்கும் சரி..., மனிதனுக்கும் சரி..,
மதம் பிடித்துபோனால் தொல்லை தான்...!

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (6-Dec-11, 5:44 pm)
பார்வை : 370

மேலே