கனவு மெய்ப்பட.........

(25.12.11 அன்று திருப்பூர் வேலம்பாளையம் மனமகிழ் மன்ற கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிகளும், அதில் பேசிய Dr.கிருச்ணராஜ வானவராயரின் அற்புதமான பேச்சினையும் தொகுத்து தந்திருக்கிறேன் )

நூல்...பின்னலாடை... பனியன்.. ஏற்றுமதி....என்று , எங்கு திரும்பினாலும் இந்த வார்த்தைகளைத் தவிர, திருப்பூரில் வேறு வார்த்தைகளை கேட்பதே அரிதாக இருந்தது ஒரு காலத்தில்.. இன்றோ வழக்காடு மன்றங்கள், ஆண்டு முழுதும் இசைவிழாக்கள், ஞாயிறு தோறும் நகைச்சுவை கூட்டம், பக்தி,இலக்கிய, புராண சொற்பொழிவுகள், அறிவுப்பூர்வமான ஆராய்ச்சி விழாக்கள் என ஒரு ஆரோக்கியமான வகையிலே , பன்முகத்தன்மை கொண்டதாக மாறத்தொடங்கி விட்டது திருப்பூர்.....ஒரே செயல்பாட்டை அடிப்படையாக சுற்றி சுழன்று கொண்டிருந்த காலம்போய் , பல்வேறு விசயங்களையும் உள்ளடக்கிய ஒரு மாநகராட்சிக்குரிய கெட்டப்பிலே வளர்ந்துகொண்டிருப்பது வரவேற்கத்தக்கதுதானே..!!

அந்த பட்டியலில் இப்பொழுது கடைசியாக இடம்பெற்றிருப்பது
15 வேலம்பாளையம் மனமகிழ்மன்றமும், அறிவுத் திருக்கோயிலும் இணைந்து ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று மாலை நடத்தும் மாதாந்திர சிந்தனை சத்சங்கம்..... இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலைசிறந்த, உன்னதமான பேச்சாளர்களையும் அழைத்து வைந்து பேச வைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்.. இந்த மார்கழியிலே அதன் தொடக்க நிகழ்வாக, பாரதிய வித்யாபவன் கோவைமண்டல தலைவர், தமிழிலும் ,ஆங்கிலத்திலும் தன் பேச்சு வித்தையாலே கட்டிப்போடும் வித்தகர் , டாக்டர் கிருச்ணராய வானவராயரை சிறப்புரையாற்ற அழைத்து வைந்திருந்தார்கள்....

விழா சரியாக 6 மணிக்கு துவங்கியது .. 6 மணிக்கே விழா அரங்கம் ஏறத்தாழ நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டதை காண்கிற பொழுது , கூட்டத்தை கூட்டுவதற்காய் நமது அரசியல்வாதிகள் படுகிற பாடு ஒருகணம் நினைவுக்கு வந்து போவதை தடுக்க முடியவில்லை... தரமான நிகழ்ச்சியென்றால் தமிழர்கள் தலைதாழ்த்தி வரவேற்பார்கள் என்பதை தெளிவாகவே உறுதிபடுத்தினார்கள்...

விழாவினை பரணி பெட்ரோல் பங்க் பங்குதாரர் நடராஜன் துவங்கி வைத்தார். அவரை தொடர்ந்து ராம்ராஜ் காட்டன் நிறுவன உரிமையாளர் திரு. நாகராஜன் அவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கருவம்பாளையத்தில் முதலாவது அறிவுத்திருக்கோயில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழாவிற்கு தலைமையேற்று நடத்திக்கொடுத்த வானவராயர் அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட 5 கட்டளைகளை இன்றளவும் தான் பின்பற்றி வருவதுதான் தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று தெரிவித்தார்.


மேலும் அவர் “ திருப்பூர் இன்றைய சூழலில் சிறகு ஒடிந்த பறவையாய் இருந்தாலும் , இந்த தேக்கத்தையும் நாம் , நம்முடைய வளர்ச்சிக்கு தேவையான வகையிலே , நேர்மறையான ”பாஸிடிவ்” முறையிலேயே எடுத்துக் கொள்ளவேண்டும்... ஆம் கடந்த 20,25 ஆண்டுகளாக நிற்காமல் , நம்மை சுற்றி இருக்கும் நம்முடைய பூமி மாசுபடுவதைக்கூட கவனிக்க நேரமில்லாமல், வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெகுவேகமாக சென்றுகொண்டிருந்தோம்.... இதோ ஒரு ”ஸ்பீட் பிரேக் போல கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது பனியன் தொழிலில் தேக்கம். சாயப்பட்டறை பிரச்னை நம்முடைய தொழிலுக்கு முட்டுக்கட்டையாக இருந்தாலும் கூட , நம்மைபெற்ற தாயினும் மேலான பூமித்தாயை இனியாவது களங்கப்படுத்தாமல், சரியான முறையிலே கவனிக்க வேண்டுமென்கிற ஒரு பாடத்தையும் நாம் கற்றிருக்கிறோம்.... அந்த வகையிலே சுணக்கமான இந்த சூழலிலும் கூட , வளமான எதிர்காலத்திற்கான கனவு காண்பதை விட்டுவிடக்கூடாது.... அந்த கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும், அவை நடைமுறையிலே வெற்றிபெற நாம் என்ன செய்ய வேண்டும்....சுதந்திர இந்தியாவிற்காக கனவுகண்டான் பாரதி.. கிடைத்தது இன்று.. அதுபோல நம்முடைய கனவும் மெய்ப்பட நாம் செய்யவேண்டியது என்ன... என்பதை நம்மிடத்திலே எடுத்துச்சொல்லி நம்மை வழி நடத்த வந்திருக்கிறார் வாழும் விவேகானைந்தர் Dr.கிருச்ணராஜ வானவராயர் ” என்று குறிப்பிட்டார்.



டாக்டர் கிருச்ணராஜ வானவராயர் அவர்கள் சிறப்புரை ஆற்றியபொழுது எள்விழுந்தால் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதி. புல்லாங்குழலில் இழையோடும் நாதமாய் இருந்தது அவரின் பேச்சு. இந்த தேசத்தின்மீதுதான் அவருக்கு எப்படிப்பட்ட காதல்...? அவரது பேச்சின் சாரம்சம் :



இந்த உலகத்தில் இருக்கும் நாடுகள் அனைத்திற்கும் முன்னோடியாய் நம்முடைய பாரதம் இன்றளவும் திகழ்வதற்கு
என்ன காரணம்.. ? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிர்வந்த எண்ணற்ற எத்தனையோ பேரிடர்களையும்,குழப்பங்களையும் பிரச்சனைக்களையும் எதிர்கொண்டு, இன்றளவும் நீடித்திருக்கும், இனிவரும் காலத்திலும் நிலைத்திருக்கும் நம்முடைய கலாச்சாரமும், பண்பாடும் தவிர வேறன்ன.. ?

அமெரிக்க அதிபர் ஓபாமா முதல்முறையாக கடந்த ஆண்டு இந்திய பயணத்தினை துவங்குவதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களூக்கு பேட்டி கொடுத்தபொழுது ஒரு நிருபர் கேட்டார் “ இந்தியாவிற்கு பயணம் செய்ய இருக்கிறீர்கள் .. உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது? நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் ?? அதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா... “ உலகத்திற்கே ஆன்மீக ஒளியையும்,கலாசாரத்தையும் பரப்பிக்கொண்டிருக்கும் நாட்டிற்கு ஒரு புனிதபயணம் மேற்கொள்கிற மனோ நிலையில் இருக்கிறேன்” ஆம்...எத்தனை
அற்புதமான ஒரு பதில்.. ?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எத்தனை , எத்தனை முனிவர்களும், யோகிகளும் தோன்றி தர்மத்தையும், அறத்தையும், வாழ்க்கையின் இலட்சியங்களையும் போதித்த தேசம் இது தெரியுமா... ?

சுவாமி விவேகானந்தர் ஒருமுறை சொன்னார் “ ஆன்மிகம்
உலகில் இந்த பாரத தேசத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட பிறகுதான் மற்ற எல்லாதேசங்களுக்கும் கிளைபரப்பியது “ எத்தனை சத்தியமான, உண்மையான வார்த்தைகள்.. ?

இந்த தேசத்தின் பிதா மாகாத்மா காந்தி ஒருமுறை சுவாமி விவேகானைந்தரின் ஆசிரமத்திற்கு சென்றிருந்தார்.அப்போது சுவாமிஜி அங்கு இல்லை.. அங்கிருந்த வருகை பதிவேட்டில் இப்படி தன் வருகை குறித்து எழுதிவைக்கிறார் காந்திஜி “ இன்று உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.. இருந்தாலும் இந்த புண்ணிய இடத்திற்கு வந்தபிறகு என்னுள் இருந்த தேசபக்தி இன்னும் பலகோடி முறை கொழுந்து விட்டு எரிவதை என்னால் உணர முடிகிறது.. ” ஆன்மிகமே இந்த தேசத்தை நேற்றும் , இன்றும், நாளையும் வழி நடத்தும் அச்சாணியென்பதை சொல்ல வேறு என்ன ஆதாரம் வேண்டும்....??

நம்முடைய நாட்டிற்கு விடுதலை கிடைத்த பிறகு உலகமே பாரட்டும் அரசியல் சாணக்கியர் வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னார் ‘ இன்னும் இரண்டொரு ஆண்டுகளின் இந்தியா உடைந்துவிடும்.. எத்தனை பிரிவுகள், எத்தனை வேறுபாடுகள் , எத்தனை மொழிகள்.. நிச்சயமாக இந்தியா ஒன்றாக இருக்காது.. “ இன்றைக்கு 65 ஆண்டுகள் கடந்து விட்டது.. இடையில் நாம் சந்திக்காத பிரச்னைகளா... நதியின் பெயரால், இட ஒதுக்கீட்டின்போது, மதத்தின் பெயரால்.. எத்தனை ,எத்தனை.. ஆனாலும் என்ன ஆயிற்று.. ? கலாசாரத்தினையும்,ஆன்மிகத்தையும் அடித்தளமாக கொண்ட நம்முடைய சகிப்புத்தன்மையும்,பொறுமையுமல்லவா இறுதியில் வென்றது..

இன்னும் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அவை அனைத்தையுமே நம்மால் எதிர்கொள்ள முடியும்..வெற்றிகாண முடியும்.. இந்த அற்புதமான விசயத்தை முதலில் இளைஞர்களிடம் எடுத்து செல்லுங்கள்.. ஏனென்றால் .. இன்றைய சூழல் வேதனை அளிப்பதாக இருக்கிறது.
நம்முடைய கல்வித்தரம் வெகுவாகவே தாழ்ந்திருக்கிறது.... படிக்கவேண்டும், பரிட்சையில் முதல் வகுப்பில் பாஸ் செய்யவேண்டும், கம்யூட்டர் டிகிரி வாங்க வேண்டும், இரண்டு ஆண்டுகள் ஒரு முண்ணனி நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும், அதன்பிறகு அமெரிக்கா சென்று அங்கேயே நிரந்தரமாக செட்டில் ஆகி விடவேண்டும்.. இதுதானா கல்வி.. ? பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக நம்மை மாற்றுவதற்க்குத்தானா இத்தனை படிப்புகளும், பட்ட்ங்களும்.. ? இவ்வளவுதானா நமது வாழ்க்கை.. ? இவ்வளவுதானா நமது கனவு.. ? நம்முடைய குடும்பம் மட்டும் நல்லபடியாக இருந்தால் போதும் என்பதற்குத்தானா நம்முடைய படிப்பும், உழைப்பும்.. ?
ஆடு,மாடுகள் போல வாழ்வதற்குத்தானா பயன்படப்போகிறது உங்களுடைய பகுத்தறிவு.. ?

வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்... கனவு காணுங்கள்...பிரமாண்டமாய் கனவு காணுங்கள்.. ...குடும்பத்தையும் தாண்டி சமுதாய நலனுக்காக, தேசத்திற்காக, உலகத்திற்காக கனவு காணுங்கள்.. உங்கள் குடும்பம் என்பது ஒரு சிறுவட்டம்.. அந்த வட்டத்திற்குள்ளேயே நின்று விடாதீர்கள்.. வெளியே வாருங்கள்...


சுவாமி விவேகானந்தரைப்போல , காந்தியைப்போல, நேருவைப்போல, அப்துல் கலாமைப்போல கனவு காணுங்கள்..
பிரமாண்டமாய் கனவு காணுங்கள்.. கனவு பலிக்கிறதோ இல்லையோ .. ஆனால் கனவுகாண்பதை மட்டும் விட்டு விடாதீர்கள்...ஏனென்றால் அப்படி பிரமிக்கதக்க கனவு கண்டவர்கள் மட்டுமே வரலாற்றில் நிலைத்து இருக்கிறார்கள்..
மற்றவர்கள் இருந்த இடமே தெரியாமல் காணமல் போய்விட்டார்கள்...

காந்தியின் உண்மையான கனவு நம்முடைய சுதந்திரம் அல்ல... அது கனவின் ஒருபகுதிதான்.. ”ராமராஜ்யமே காந்தியின் கனவு”...ஏதோ ஒருமதத்தினை சார்ந்ததென்று நீனைத்துக்கொள்ளவேண்டாம்.. ராமன் ஆண்டபொழுது இந்த தேசம் எப்படி, எல்லா வளங்களும் , நலங்களும் பெற்றதாக , இருந்ததோ அதுபோல எல்லா சமூகத்தினரும், ஒற்றுமையாக ,அன்பாக, அமைதியாக இருக்க வேண்டுமென்பது அவரின் கனவு...

பாரதியின் கனவு எல்லார்க்கும், எல்லாமும் என்பது ..


வேதாத்திரி மகரிஸி கனவு என்ன தெரியுமா.. ? “ 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகம் முழுவதும் ஒரே மதம்மட்டுமே இருக்கப்போகிறது.. அந்த மதம் முழுக்க,முழுக்க கர்மயோகத்தின் அடிப்படையிலே இருக்கும்.. அந்த சமயத்தில் மதங்களெல்லாம் தங்களுடைய சின்னங்களை, அடையாளங்களை இழந்திருக்கும்.... என்ன ஒரு அற்புதமான சிந்தனை.. ?


அதை போல கனவு காணுங்கள்..


நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது... ” வித்தியாசமான யோசியுங்கள்.. தைரியமாக செயல்படுங்கள் ( Think differently .. Act courgeously ) என்பதுதான் . உங்கள் கனவு வித்தியாசமாக, பிரமாண்டமானதாக இருக்கட்டும்

சுவாமிஜி ஒருமுறை சொன்னது என் ஞாபகத்திற்கு வருகிறது “ எல்லோரும் என்னை பார்த்து சிரிக்கிறார்கள் , நான் வித்தியாசமானவனாக இருக்கிறேனென்று . நான் அவர்களை பார்த்து சிரிக்கிறேன் , அவர்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்களென்று ” எவ்வளவு தைரியமான பார்வை , எத்தனை துணிச்சலான சிந்தனை...?


இன்றைய இளைஞர்கள் ஆன்மீகத்திற்கு வராததற்கு காரணம் அவர்களல்ல நீங்கள்தான்... அவர்கள் ஏற்றுக்கொள்கிற மாதிரி
ஆன்மீகத்தை உங்களுக்கு சொல்ல தெரியவில்லை.. உங்களுடைய காலம் வேறு.. இன்றைய அறிவுப்பூர்வமான காலம் வேறு....இன்றைய இளைஞர்கள் எதையும் அறிவுப்பூர்வமாகவே அணுக விரும்புகிறார்கள்... அவர்களிடத்திலே நமது சமயங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களையும்,சடங்குகளையும் அறிவுப்பூர்வமாக விளக்குகிற பொழுதுதான் அது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமேதவிர.. கண்மூடித்தனமாக நம்பச்சொன்னால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள தயராக இலலை.. அதுமட்டுமல்ல.. நம்முடைய கலாசாரத்தையும், பண்பாட்டையும், ஆன்மீகத்தையும் அவர்கள் பயில்கிற கல்லூரிகளுக்கே, பள்ளிக்கூடங்களுக்கே நாம் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் காலத்தின் அவசியம்..



இந்த தேசத்தின் பெருமையை உங்கள் குழந்தைகளிடம் சொல்லுங்கள்.. அப்துல்கலாம் குறிப்பிட்டதுபோல தெளிவான பார்வையும் , துணிச்சலும் அவர்களுக்கே சொந்தம்... வருங்கால பாரதத்தின் உள்ளத்தில் தான் எப்படிப்பட்ட தேசத்தில் பிறந்திருக்கிறோமென்கிற என்ற பெருமை வற்றாத ஜீவ நதியாய் ஊற்றெடுக்க வேண்டும்



கனவு மெய்ப்படவேண்டுமென்றால் அதில் சமுதாய சிந்தனை அவசியம் இருக்க வேண்டும் .. சமுதாய சிந்தனை இல்லாத கனவு வெறும் வறட்டுக்கனவாக, எந்தவிதமான பலனும் ஏற்படுத்தாத கனவாக போய்விடும் “

கூட்டத்தில் கரகோசம் அடங்க நீண்ட நேரம் ஆனது..

ஆன்மிகமும், பண்பாடும் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் ஊறிக்கிடக்கும்வரை ,என் தேசத்தை இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் யாரும் அழித்துவிடமுடியாத என்கிற ஒரு சாரசரி இந்தியனான என்னுடைய கனவும் மெய்ப்பட ........ எந்த தேசத்திற்கும் இளைத்ததல்ல என் தேசம் ..என்ற கம்பீரத்தையும், உறுதியையும் நெஞ்சில் சுமந்துகொண்டு வீடு திரும்பினேன்.

20 களில் பெண்ணை மட்டுமே காதலிக்க தெரிந்தது... வேறு எதுவுமே கண்களில் படவில்லை... பின்னாட்களில் அடங்கி போனது....

40 களில் எல்லாம் அடங்கிய இந்த தருணத்தில் ... தாய் மண்ணின் மீதான காதல்மட்டும் இன்னும் ஆழமாக.... தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனிடமும் தொடர்கதையாகவே தொடரும்போலும்... எந்நாட்களிலும் அடங்குவதில்லை .. !

எழுதியவர் : முருகானந்தன் (27-Dec-11, 7:48 pm)
பார்வை : 6582

மேலே