யோகாவா ...? உடற்பயிற்சியா ....? எது நமக்கு தேவை....?

இளமையாய் இருக்க ஆசைப்படாதவர் யார்..? நாலு தலைமுடிகள் நரைத்துவிட்டாலே ” டை” யை தேடி ஒடுகிறவர்கள்தான் பெரும்பாலோர் . முழுக்கை சட்டை அணிந்தால் வயதான மாதிரி தெரிகிறது என்பதற்காக அரைக்கை சட்டையையே விரும்பி அணிகிற அறுபது வயது வாலிபர்கள் எத்தனை பேர் ..?
50 வயதுக்கு மேல் ஆகவே கூடாது , என்பதுதான் நிறைய மனிதர்களின் ஆதங்கம்.

சிரஞ்சீவியாய் வாழ்வதற்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி அறிவியல் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமே உள்ளன. மார்க்கெட்டில் புதிது, புதிதாய் ஏதாவதொரு அழகுப்பொருள் வந்துகொண்டேதான் இருக்கிறது .

”மரணமென்பது நிச்சயமான ஒன்று” என்பது தெரிந்திருந்தாலும் கூட , தள்ளிப்போட ஏதாவது வழி இருக்கிறதா ? என்கிற ஆர்வத்தில் விதவிதமான உடற்பயிற்சிகள், உணவு முறைகள் என்று முயற்சிக்காதவர்கள் வெகுகுறைவே .


இதற்கு எளியதொரு தீர்வாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய சித்தர்களும்,ஞானிகளும் கண்டறிந்து சொன்ன வழிதான் யோகாசனம் . பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்டட்தாக சொல்லப்படும் யோகாசனம் இன்றூ கால்பதிக்காத இடமே உலகில் இல்லை .ஆனாலும் நம் இளைஞர்கள் மத்தியில் ஒரு குழப்பம்... எதை பின்பற்றுவது யோகாசனத்தையா... ? அல்லது உடற்பயிற்சியையா... ? எது நமக்கு நல்லது.. ? இந்த குழப்பத்திற்கு ஒரு தீர்வினை சொல்ல விழைவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

கட்டுமஸ்தான உடம்பு , அதாவது நமது சினிமாக்களி ஹீரோக்கள் காட்டுகிற ”6 கட் “ என்பதுதான் இளைஞர்கள் மத்தியில் இன்றைய தேடலாக இருக்கிறது. பொதுவாகவே இத்தகைய தசைப்பெருக்கத்திற்கு நவீனமான கருவிகளை கொண்டு செயல்படுகிற “ஜிம்” மைதான் நாட வேண்டியிருக்கிறது...

ஆனால் “ ஆரோக்கியமே என் தேவை, நோய்கள் அணுகாதபடி நீண்டகால சுகத்திற்கு நான் என்ன செய்யவேண்டும் ?” என்று கேட்பவர்களுக்கு ஒரே வரியில் சொல்லமுடியும் ... நவீனமான உடற்பயிற்சிக்கூடங்கள் முழுமையான தீர்வல்ல... பழமையான யோகாசனமே இறுதிவரை தீர்வு... என்று. அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாமா....?

1. உடற்பயிற்சி என்பது உடம்பில் தசை பெருக்கத்தையும் ( BODY MASS) , உருவ அமைப்பையும் மேம்படுத்துவதற்குத்தான் பெரிதும்
உதவுகிறது. உடல் நலத்தை சீராக்குகிற பணியில் யோகாசனமே முதிலிடம் வகிக்கிறது.

2. இதயமானது, கடுமையாக உடற்பயிற்சி செய்கின்ற போது அளவுக்கதிகமான வகையிலே வேலை செய்கிறது.ஆனால் இதயத்துடிப்பும் , இரத்த அழுத்தமும் , இயல்பாய் நாம் வேலை செய்கின்றபொழுது இருப்பதை விடவும் குறைவாகவே யோகாசனம் செய்கிறபொழுது
வேலை செய்வதை நம்மால் நன்றாக உணரமுடியும்.

3.உடற்பயிற்சி, எலும்புகள் இணையும் பகுதிகளை அதிகமாக பாதித்து ’ ருமேட்டிஸம்’ மற்றும் உடல் நடுக்கம் போன்ற குறைபாடுகள் ஏற்படவும் காரணமாக இருக்கிறது. யோகாசனம் செய்கின்றபொழுதோ , உடல் தளர்வாக இருப்பதனால் எலும்புகளிடையே உராய்வினை குறைப்பதுடன் தேய்மானத்தையும் குறைக்கிறது.எலும்புகள் இலகுவான தன்மையினை பெறுகின்றன.

4. உடற்பயிற்சியின் போது வேக,வேகமாக மூச்சு விடுவதனால் ஆக்ஸிஜன் அளவு வெகுவாக குறைகிறது.யோகாசனங்களோ நிதானமாக செய்யப்படுவதால் செலவழிக்கிற ஆக்சிஜன் அளவு குறைவாகவே இருக்கிறது.

5. உடற்பயிற்சி செய்கிறபொழுது ஏற்படும் வேதிப்பொருட்களின் கழிவுகள் (TOXINS ) உடலிலேயே தங்கிவிடுகின்றது. யோகாசனம் செய்கின்றபொழுதோ அவை வெளியேறிவிடுகின்றது.

6.உடற்பயிற்சியின் பொழுது வேக,வேகமாக மூச்சு விடுவதால் மூச்சுக்குழாய்கள் மற்றும் நுரையீரல் அதிக அளவு வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

7. உடற்பயிற்சியின் போது , நாம் உண்ணுகிற உணவிலிருந்து சத்துப்பொருடகளையும், உள்ளிழுக்கிற மூச்சிலிருந்து ஆக்சிஜனையும் , , உடல் உள் உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை போன்றவை உறிஞ்சிக்கொள்வதைவிட , உடற்பயிற்சியின் மூலம் பெருக்கமடையும் தசைகளே அதிகமாக உற்ஞ்சிக்கொள்கின்றன. யோகாசனத்திலோ இது தலைகீழ்....

8. யோகாசனம் செய்கின்றவர்களுக்கு, சக்தி குறைவாக செலவழிவதால், தேவைப்படும் உணவின் அளவானது குறைவாகவே இருப்பதால்
உள் உறுப்புகள் குறைவாகவே வேலை செய்கின்றன.

9.உடலும்,மனமும் இறுக்கமாகவே இருப்பதால் மன நிலையும் இறுக்கமாகவே இருக்கிறது.யோகாசனமோ இலகுவாகவும், திறைந்த மனோ நிலையிலும் செய்யப்படுவதால் பயிற்சிக்கு பிறகு உடலும்,மனமும் புத்துணர்வு பெறுகிறது. உற்சாகம் மலர்கிறது.

10. உடற்பயிற்சியின் போது உடலின் வெப்ப நிலை உயர்வதையும், அதனால் உடலானது தளர்வடைவதையும் கண்கூடாக காணமுடியும்.

11. நிதானமாக மூச்சினை வெளியிட்டு , நிறைவான மனோ நிலையில் செய்யப்படுகிற யோகாசனம், உடலிலுள்ள பித்த நீர்ச்சுரப்பிகளை முழுமையாக தூண்டிவிடுவதால் , எல்லா சுரப்பிகளும் சிறப்பாக இயங்குவதற்கு காரணமாக அமைகிறது.

உடல் பருமன், தைராய்டு மற்றும் பற்பல உட்புற குறைப்பாடுகள் அனைத்துமே ஏற்படாதவகையில் வாழ்க்கை பாதுகாவலனாக யோகாசனம் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

“ இயற்கையான , எளிதில் செரிக்கும் உணவு, எளிய யோகாசனங்கள் , மன அமைதி தரும் தியானம் ” இந்த மூன்று தாரக மந்திரத்தையும் கடைபிடித்தால் இறக்கும்வரை இளமையாக வாழலாம் என்பதில் என்ன சந்தேகம் உங்களுக்கு....?

எழுதியவர் : muruganandan (6-Feb-12, 5:51 pm)
பார்வை : 536

மேலே