கனவு, காதலன், கடவுள்...

அவசரமாய் உண்டு
முடித்து.

முடி திருத்தி.
கண்டு பூவை
சிண்டு முடியில் சொருகி.

முகம் கழுவி.
உதட்டு சாயம் இட்டு.
வாசனை திரவம்
உடலில் பூசி.
சுவாசத்தை சுத்தீகரித்து.

தரையில் துண்டு
விரித்து படுத்தேன்.
கனவுக்காக யாசித்து
கண்ணயர்தேன்.

கனவும் வந்தது.
எப்போதும் போல்
நீயே வருவாய் என
காத்திருந்த எனக்கு,
அதிரிச்சி.

வந்ததோ திமிர்
பிடித்த கடவுள்.

இளவரசனின் தரிசனத்திற்கு
காத்துக்கிடக்கும் எண்ணுள்,
பூசாரிபோல் கடவுள்
வந்து என்னை வெறுப் பேற்றினார்.

கோபத்தை அடக்க
முடியாமல்,
ஏன் வந்தாய் என்று கேட்டேன்?

என் ஆருயிர்
மகளே, உனக்கு
என்ன வரம் வேண்டும்?
என்றார்.

மரியாதையாய் கனவில்
இருந்து கலைந்துபோ
என்று கடிந்து விட்டேன்.

வீம்போடு கடவுள்,
என்னை எரித்து விடுவேன்
என்று எச்சரித்தார்.

முடிந்தால் முயர்ச்சித்துபார்
என்று முகத்தை
திருப்பிக் கொண்டேன்.

ஆனாலும் கடவுளுக்கு
கர்வமோ கர்வம்.
எல்லாருக்கும் இவரே
எல்லாமாய் இருப்பதால்
இருக்கும் ஆணவம்.

என்னிடத்தில் நடக்குமா அது?
எனக்கு எல்லாமே
நீ தானடா.
உன் அரவணைப்பில்
இருக்கும் என்னை
யார்? என்ன?
செய்துவிட முடியும்?

என்னை சாம்பலாக்க
எண்ணி,
முடியாமல் போய்
சாந்தமானார்.

கடவுளின் சரித்திரத்தில்
தோற்றுப்போனது,
இதுவே முதல் முறையாய்
இருக்கும்.

தோற்றுப்போன கோபத்தில்
உன்னிடமும் வருவாரடா.

வந்தால் சொல்லிவிடு.
என்னவளை தொந்தரவு
செய்ய வேண்டாம் என்று.

அன்பான கடவுளே.
என் மேல் கோபம் கொள்ளாதே.
உன்னை கனவிலும், நிஜத்திலும்
காதலிக்க பக்த கோடிக்குள்
பரி தவிகின்றனர்.

ஆனால் என்னைப் போல்
உள்ள அரவாணிகளை,
அன்பால் அரவணைக்கக் கூட
அஞ்சுகின்றனறே?
இதில் எங்கு
காதலிப்பது?

எழுதியவர் : கணேஷ்குமார் Balu (28-Feb-12, 4:58 am)
பார்வை : 882

மேலே