தாய்த் தமிழ் நான்

கண்கள் நிரம்பி
கண்ணீர்த் துளிகள்
என் கன்னங்களை நனைப்பது
தெரியவில்லையா ?
தமிழ்த் தாய்
எந்தன் அழகிய வதனத்தின்
வாட்டம்தான் புரியவில்லையா?

நாகரீக மோகத் தீயில்
அழிகிறது என் அழகு
காக்கும் மேகங்களின்
சுரக்கும் துளிகளை அழைக்கிறேனே
அக்கினித் தடாகத்திலிருந்து-அசரீரி
என் அபாயக்குரல் கேட்க யாருமில்லையா?

அவை நடுவின் அவமானம் போக்கி
பாஞ்சாலி காத்த பரந்தாமன் எங்கே?
அசோகவனச் சிறைக்காவல் நீக்கி
சீதையை மீட்ட ஸ்ரீராமன்தான் எங்கே?
கலங்கமுற்றுக் கதறும்
பெண்ணென்னைக் காக்கும்
அவதாரங்கள் எங்கே?

அமிர்தம் போன்று என் தட்டில்
ஆகாரம் நிறைந்திருக்க
அடுத்தவன் வீட்டுணவில் ஆசை
அள்ள அள்ளக் குறையாத
அட்சயப் பாத்திரம் நானிருக்க
அயலானிடம் கடன் கேட்கும் குழந்தைகளை என்செய்வேன்?

அந்நியத்தை அருகெடுத்து
தமிழன்னை என்னை
அந்நியமாய் பார்க்கும் பிள்ளைகள்
என் உறவோடு நடமாட
இழிவாக நோக்கும் உறவுகள்
அநாதையாக்கப் படுகிறேனே
யான் என்ன செய்வேன்

கலங்க மாட்டேன் -நான்
கலங்க மாட்டேன்- காத்திருக்கிறேன்
கலங்கம் துடைக்கும் கரங்களோடு
காலப்போக்கில் காலம் மாறும்
புது அழகாய் என் அழகு
மெருகாகும் நாள் உருவாகும்
கனவோடு காத்திருக்கிறேன்.

எழுதியவர் : சந்தரிகா (15-Mar-12, 2:01 pm)
பார்வை : 246

மேலே