கவிப் பேரரசனுக்கு (வைரமுத்து )பிறந்தநாள் வாழ்த்து..

வடுகப்பட்டி கண்டெடுத்த
வற்றாத "கவியூற்று "
தேனிமண்ணில் வீசிவந்த
தேன்தமிழ் "பூங்காற்று"
காண்பதெல்லாம் காதல்கொண்டு
கவிக்கணைகள் நீ தொடுப்பாய் - உன்
கவியழகில் கரைந்தே நிதம்
கவலைகளை யாம் தொலைப்போம் .
உன் கவிக்கணையில் சிக்கியவை
சிகரம் பல தொட்டுவிடும் !
உன் கவிவரியில் தப்பியவை
தற்கொலைக்கு தூதுவிடும்.
விண்ணழகும் மண்ணழகும் - பேனா
மையழகில் மைய்யல் கொள்ளும் !
காகிதத்தில் அது வடிந்து
காலங்களை வென்றுவிடும் .
சிந்தையெல்லாம் கவிதையன்றோ
சிறிதளவும் அகன்றதில்லை !
சித்தமெல்லாம் கவிமயமேயது
சிந்த சிந்த குறைந்ததில்லை .
அள்ள அள்ள குறையாத - பெரும்
ஆழமிக்க கவிக்கடலே !
அண்டமெல்லாம் கவிபுனைந்துமுன்
அறிவுவேட்க்கை தளர்ந்ததில்லை.
வருடங்கள் ஒவ்வொன்றும் உன்
வரிகளையே எண்ணி நிற்கும் !
விருதுகள் ஒவ்வொன்றும் உன்
விரல்தொடவே ஏங்கி நிற்கும் .
காலம் பல கடந்தாலும்
கவி நின் புகழ் ஓங்கி நிற்கும் -உன்
கவிவரிகள் ஒவ்வொன்றும்
வான்புகழை தாங்கி நிற்கும் .
கவிதைகளும் காதல் கொள்ளும்
கவிமகளின் இளவரசே !
கவியுலகை ஆண்டு நிற்கும்
கவிஞர்களின் "பேரரசே" .
தமிழ்மகளின் மகுடம் மின்னும்
தலைசிறந்த " வைரமுத்து " - நீ
தமிழர் நெஞ்சம் கொள்ளைகொண்ட
தரணிவென்ற "தமிழ் சொத்து" ...........................