நாம் இருவரும்
இருக்கிறதா இல்லையா எனத் தெரியாத
அனிச்சமலராய்த்தான்
இருக்கிறோம் நாம் இருவரும்
மலர்க்குவியலில் நுழையும் கனவுகளோடும்
இசைக்கின்ற ஏக்கங்களோடும்
கவிதை தேடும் கண்களோடு
என்னிடம் நீ வருகையில்
பூ கட்டும் பெண்ணின் ஊசித்துளையாய்
குத்திவிடும் என் வார்த்தைகளில்
அனிச்சமாய்த்தான் ஆகிறாய் நீ ....
கனவுகளற்ற சமநிலையில் நீ இருக்கையில்
காட்டுவெள்ளமாய் வரும் என் கனவுகள் அணைப்படுகையில்
நானும் அவ்வாறே ஆகிவிடுகிறேன்
என்றாலும்
வெட்டவெட்டக் கிளைக்கும்
கண்மாய்க் கரைச் செடியாய்
ஈரம் இருந்து கொண்டே இருக்கிறது
நாளைக்கு மொட்டவிழும்
என்கிற நம்பிக்கைகளுடன்

