வெவசாய மண்ண காணோம்

ஏலே...மக்கா...!
எங்கடா காணோம்.?
ஒழவு செஞ்ச மண்ணையும்
ஒரம் போட்ட மண்ணையும்
கட்டு கட்டா கதுரடிச்ச மண்ணையும்
கானோமடா.?
இத எங்கே போயி சொல்றது
எப்படித் தான் சொல்றதுனு
தெரியாமத்தான் பொலம்புறேன்
உள்ளுக்குள்ளே அழுவுறேன்
பச்சை பசுமையாய்
வெளஞ்ச மண்ணுடா
எல்லாம் பிளாட் பிளாட்டா போச்சுடா
பாவி மக்கா.....

சோறு போட்ட பூமியை
கூறு போட்டு வித்தது சரியா?
வெத வெதச்ச மண்ணுல
வீடு மொளைச்சு நிக்குது
களையெடுத்து,கதுரறுத்த மண்ணுல
கட்டடம் எழும்பி நிக்குது

நீரோடும் பாதையெல்லாம்
காரோடிப் போகுது
சின்ன மழைக்கு கூட
தெருவே தெப்பமா போகுது
நஞ்ச புஞ்ச வெவசாயம்
கொஞ்ச கொஞ்சமா கொறஞ்சு போச்சு
மிச்ச மீதி நெலமும் இப்போ
தண்ணி இல்லாம காஞ்சு போச்சு

கன்னடம் காவிரி தர மாட்டேங்குது
ஆந்திரம் கிருஷ்ணா தர மாட்டேங்குது
கேரளம் சொட்டு நீர் கூட தர மாட்டேனு
சொல்லி திரியுது-அட
கார்மேகம் கூட கருணை மழை
பெய்ய மாட்டேங்குது
மும்மாரி பேஞ்ச பூமி
முப்போகம் வெளஞ்ச பூமி
ஒரு மாரிக்கும்
ஒரு போகத்துக்கும்
வழி இல்லாம போச்சு சாமி

மணிப் பயல கேட்டேன்
மக கல்யாணத்துக்கு
வித்து புட்டேனு சொல்றான்
பழனிய கேட்டேன்
பையன் படிப்புக்கு
வித்து புட்டேனு சொல்றான்
இப்படி ஆளுக்கொரு
காரணம் சொல்லி வித்து புட்டாங்கே

மிச்ச பேர கேட்டா
என்னமோ ரியல் எஸ்டேட்னு
சொல்றாங்கே
சூசகமா பேசி
லாவகமா வாங்கி புட்டாங்கே
என்னமோ போங்கடா
தாத்தா மனசு கேக்காம
தாளாம துடிச்சு புட்டேன்
தாளாம் போடாம படிச்சு புட்டேன்

மிச்சம் மீதி இருக்குற
வெவசாய நெலத்தையாவது
விக்காம வெச்சு இருங்கடா
பாவி மக்கா...!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (14-Aug-12, 8:14 am)
பார்வை : 174

மேலே