நிழலாகிபோன நிஜங்கள்

தாயின் மடியே என் உலகம் -அந்த
மடியின் இளம்சூடே வாழ்வின் பேரானந்தம்
எனும் குழந்தை பருவ கொள்கைகள்

நான்தான் வீட்டின் அரசன் -மற்ற
நலம் விரும்பிகளெல்லாம் என் பணியாளர் என்று
நான் செய்த அராஜகங்கள்.

பள்ளிக்கூடம் என்பது
சாவுமணியடித்து அழைத்து
சந்தோஷ மணியடித்து அனுப்பி வைக்கும்
சங்கடங்கள் நிறைந்த இடம் என்ற
என் தவறான எண்ண ஓட்டங்கள்

உடன்பயின்ற வகுப்பு தோழியின் மேல்
உள்ளுக்குள் ஆசை இருந்தும் -என்ன
உறவு என்று சொல்லமுடியாத
உறுதியற்று உறுத்திய ஆசைகள்

நானும் நல்லவன்தான் -என்ற
நல்ல எண்ண ஓட்டத்தை -என்
தோழியின் மனதில் உருவாக்க
நான் மேற்கொண்ட நற்செயல் முயற்சிகள்

புகைக்க தெரிந்துகொண்டால் -நானும்
பெரியமனுஷன் என்ற எண்ணத்தில்
விடலைபருவத்தில் புகைத்து
இருமிதொலைத்த அந்த நாட்கள்

நானும் வளர்ந்துவிட்டேன் -என்ற
எண்ண ஓட்டத்தில்
முளைக்கதொடங்கியிருந்த அரும்பு மீசையை
முறுக்கி பார்த்து கர்வம் கொண்ட நாட்கள்

விடுதி வாழ்க்கை வெறுத்து போய்
வீட்டுக்கு ஓடிபோகலாம் -என
ஒவ்வொருநாளும் முடிவெடுத்து
ஒருநாளும் செயல்படுத்தாமல்போன
தோல்வியில் முடிந்த என் முடிவுகள்

கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்து
கண்ணில் பட்ட பெண்களெல்லாம்
தேவதைகளாக தெரிந்தும் -ஒருத்தியையும்
என்னவளாக தெரிந்து கொள்ள முடியாத
தெளிவற்ற மனநிலைகள்

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும்
நிஜங்களாய் தெரிந்தவை அனைத்தும்
நிழல்களாய் மாறிப்போனது -இது
எனக்கு மட்டுமல்ல
எண்ணற்றவர்களுக்கும் பொருந்தும்
ஆனால்.......
நிழலாய் மாறிப்போன இந்த நிஜங்கள்
நினைவலைகளில் நிலைப்பது மட்டும் நிஜம் ....

எழுதியவர் : (3-Sep-12, 9:34 pm)
சேர்த்தது : stanly
பார்வை : 218

மேலே