சகாவின் சாவு

நட்பு பற்றி பாரினிலே
தினம் தினமும் பறை சாற்றல்
சிறு பங்கு நான் பகர
சில வரிகள் உனக்காக.

ஓர் வகுப்பில் படிக்கையிலே
ஒதுங்கிவிடும் பிரச்சனைகள்,
நீர் கிழிக்கும் படகுகளாய்
வேரறுக்கும் சோகங்களை.

நகர்ந்து செல்லும் மணித்துளிகள்
இரவுகளை வசை பாடி,
நித்திரையின் பிரிவுகளில்
நம்மிருவர் தடம் தேடும்.

வீறுப்பருவமதில்
கூடிச் சோறுண்டு
சுகம் கழித்தோம்.
நிலாச்சாறு பிழிந்து
நாமருந்தி
போதையுற்றோம்
சில பொழுதில்...

கடதாசிக் கூட்டங்களை
கலையாக மாற்றிப் பார்த்தோம்,
விளையாடா நேரங்களில்
நடைப்பிணமாய்
நாம் கிடந்தோம்.

புத்தாடை அணிந்து வந்து
புதினந்தான் நீ காட்ட,
"வா" என்றழைத்து
கேலிகள் நான் செய்து
"ஜொலி" யாக நாமிருந்த
காலந்தான் இனிவருமா?

ஒன்றாகத்தான் நாம் திரிந்தோம்
தனியாக நீ பிரிந்தாய்,
கண்மூடும் வேளையிலும்
கொல்லுதடா உன் நினைவு
கனவுளாய் வந்து நின்று.

தேர் வந்து சேருமுன்னே
உற்சவங்கள் முடிந்ததென்ன?
உடல் மட்டும் இங்கிருக்க
உயிர் துறந்து போனதென்ன?

கடவுளுந்தான் கண்முன்னே
வந்து நின்று அருளுரைத்தால்,
மனுக்கொடுப்பேன் என்னையுந்தான்
உன்னிடத்தில் கூட்டிச்செல்ல.

எழுதியவர் : S.Raguvaran (4-Sep-12, 7:04 pm)
பார்வை : 294

மேலே