மகா கவிக்கு மனதஞ்சலி... செப்டம்பர் 11, 1921

பல் விழுந்த இடத்தைச் சுற்றி
நாக்கு அங்கு துளவுமே !
பல்லிருக்கும் போது அந்த
நாக்கு அதை மறக்குமே !

மரமிருக்கும் போது அதை
மனதிற் கூட எண்ணோமே
மரமில்லாமல் வாழ்வழிந்தால்
மரத்தை தேடி வைப்போமே !

உடல் நிலையில் தளர்வு வந்தால்
ஓரம் கட்டி வைப்போரே !
ஊன்றுகோலின் பயனைக் கூட
உருவி விட்டுச் செல்வாரே !

சாகும் போது தண்ணீர் கேட்டால்
ஓடிச் சென்று மறைவாரே!
செத்த பின்பு சிலையை வைக்க
கோடிப்பணம் செய்வாரே!

இல்லை என்று தெரிந்த பின்பு
இரங்கல் கூட்டம் நடத்துவோம் ,
இருக்கும் போது மதிப்பளிக்கும்
மரபு எங்கே போனது?

புதிய உலகை செதுக்க வந்த
புதுமையான ஞானியை
புசிப்பதற்கு உணவு தர
மறுத்த பாவி மக்கள் நாம் !

தனியொருவனுக் குணவில்லையெனில்
ஜெகத்தை அளிக்க சொன்னவன்
தாரணியிலொரு மனிதர் கூட
அவனுக் குணவளிக்க வரவில்லை!

பாரதியின் பிணத்தருகே
பாடை கட்ட ஆளில்லை
ஈக்களுக்கு தெரிந்த நீதி
இவர்களுக்கு தெரியலை !

அக்கினியாய் இருந்த அவனை
அரவணைக்க தெரியலை..!
அணைந்து போன விளக்கை வைத்து
அழுது புலம்பும் உலகிது!

சுப்ரமணிய பாரதியை எங்கள்
சொந்தமில்லை என்றார்கள்..
செத்தவுடன் புகழில் மயங்கி-தன்
சிரசில் தூக்கி வைத்தார்கள்

அன்னத் திற்கின்றி இருந்த போதும்-பாரத
அன்னையை மறவாப் பிள்ளையானான்..
பசியின் கொடுமை வந்த போதும்
பாரத அன்னைக்குப் புனித மகனானான்

மதத்தை தாண்டிய மனிதத்தை
மக்கட்குரைத்த மகானவன்
அல்லா யகோவா ஏசுவிற்கும்-நல்ல
அழகு கவிதை கொடுத்தவன்..

இருந்தபோது அவனை மதிக்க
இந்த உலகில் ஆள் இல்லை
இறந்த பின்பு அவனை மறக்க
இந்த உலகில் ஆள் இல்லை!

உயிர் உள்ளபோது உணருவாய்
உண்மைப் பொருளின் விளக்கத்தை
உயிரற்ட போது உணர்ந்திட்டால்
உனக்கும் நாட்டுக்கும் என்ன பயன்..?

நம்முடன் பாரதி, வள்ளுவனும்
நரேந்திரன், கம்பன், இளங்கோவும்
இருப்பதை அடையாளம் கண்டுகொண்டு
இன்றே அவனை அங்கீகரிப்போம் ....நாம்
இன்றே அவனை ஆராதிப்போம் ....!

-பசுவைஉமா..

எழுதியவர் : பசுவைஉமா (11-Sep-12, 3:06 pm)
பார்வை : 222

மேலே