தூது செல்வாயா தோழி.!
யாது சொல்வேனடி யென்தோழி
தூது சொல்லிப் போவாயோ நீ
மாதுயிங்கே மருகும்நிலை கூற
தோது யாருமில்லையடித் தோழி!
கன்னல் மொழிபேசிப் போன யென்
அண்ணல் வரும்திகதி அறிவாயோடி
மண்ணிலவன் வருமோசை கேட்டுக் கூற
சன்னல் கதவுக்கும் கற்றுத் தந்தேனடி!
பதுமம் பறித்துத்தர நாநுனியில் நயக்க
பாதகம் பாராது பட்டென அவன் குதிக்க
தடகத்தின் ஆழமறியாது நான் பதைபதைக்க
தண்ணீர் கிழித்து பதுமம் தர வியந்தேனடி!
படரும்கொடிப் பசுமை நிழலில் கிறங்க
பசலை மயக்கத்திலவன் மடியில் உறங்க
பாம்பொன்றவன் காலடியில் வந்திறங்க
பசுந்தொடி உறக்கம் கலைக்கா உள்ளம் பார்த்தேனடி!
வனத்தின் வனப்பை ரசித்து கால்கள் நடக்க
வலியின் மிகுதியில் மேலும் நடக்க மறுக்க
உள்ளமதில் சுமந்தாலுமே யென்னை அன்று
உடல் சுமந்து போன சுகமோ சுகமாய் சுகிக்குதடி!
நலக்குறைவால் நான்படுக்கையில் விழ
நலம் கேட்க வந்தவன் எந்நிலை கண்டழ
நெடுநேரம் எனைப் பார்த்த பின்னவன்
நெற்றியில் பதித்த நொடி முத்தம் நெஞ்சினிக்குதடி!
கார்த்திகைப் பூவும் பூத்துக் குலுங்குது
கமுகு வாசமும் தோட்டம் கமகமக்குது
காதல் தலைவனைக் காணாது கண்கள்
கண்ணிறை கொள்ளாது கண்கலங்குதடி!
ஊடல் பிரிவுநிலை எமக்குள் இல்லையடி
தேடலில் தேயுது உயிரும் உடலுமடி-அவன்
உள்ளத்து நிலை கண்டு வந்து உரைக்க
உற்ற தோழி உனையன்றி யாருமில்லையடி!

