பணம்

பைத்தியக்காரனின்
அற்புதமான கண்டுபிடிப்பு
அன்பும் இதன் முன்னே
அற்பமாகி விடுகிறதே
கடமையும் இதன் முன்னே
கைகட்டி நிற்கிறதே
பரிமாற்றத்திற்கு
வந்த பழக்கம் இது-உறவை
பகையாக்குவதற்கும்
வழக்கமாகி விட்டது
மனிதனின்
மதிப்பையும்,மரியாதையையும்
அளவிடும் நவீன கால
அளவிடும் கருவி
பாசம் கூட
பணத்தால் முறிவது
பணத்தின் பெருமை
நீதியைக் கூட
பணத்தால் வாங்குவது
பணத்தின் சிறப்பு
பாதளம் வரை பாயும்
வேதாளம் இது
அச்சுக்கு முன் காகிதம்
அச்சுக்குப் பின் நாணயம்
இந்நாணயத்தால் போகுதே
பல பேரின் நாணயம்
ஆடையில்லாதவன்
அரை மனிதன்
அன்று
பணமில்லாதவன்
பாதி மனிதன்
இன்று
பணமில்லா பிணமும்
அநாதையாகி விடுகிறது
கல்லறைக்கு போகும் போதும்
சில்லறைகள் வேண்டும்
பூமி எதன் அச்சில்
சுழல்கிறதோ இல்லையோ
பணமென்னும் அச்சில்
நன்றாகவே சுழல்கிறது
பிறப்பு முதல்
இறப்பு வரை
எதற்காக வாழ்கிறோம்
என்று கேட்கையில்
பணமென்ற பதிலையே
மனம் தருகிறது
அதற்குப் பணம் சிரிக்கிறது
மனம் சிந்திக்கிறது.!