மீண்டுமொரு விடுதலை வேண்டும்

அந்நியர்கள் அன்று
அடக்கி ஆண்ட காலம்
மண்ணின் மைந்தர்களால்
மரணம் தழுவிப் போனது....!

செங்குருதியும் காய்ந்தே
செழுமையும் கொண்டது....,
போராடி வாங்கிய ஒன்றோ
போராடியே தோற்கிறது ...!

வற்றாத வீரமாய் வாழ்ந்த
வணக்கத்திற்குரியவர்கள்
வழங்கிச் சென்ற சுதந்திரம்
வறுமையிலே நொந்தது..!

சாத்வீகக் கொள்கையும்..,
சத்தியாகிரக கோஷமும்..,
விண்வெளிக்குள் சிக்கி
விதியென்று மாண்டது.....!

அந்தோ பரிதாபம் இங்கே
அனைத்திலும் கண்டேனே..,
அநியாயக் கண்ணோட்டம்
அராஜகத்தின் தேரோட்டம்...!

ஊர்கள் பெருகிய நாட்டில்
ஊழல் கொண்ட ராஜ்ஜியம்..,
உடைத்தெறிய ஆளின்றி
இறுகிக்கொண்டே போகிறது..!

சிந்தனைப் பேயாட்டத்தால்
செயலிலே கள்ளாட்டம்.....,
பொது மக்களுக்கோ இன்று
எந்நாளும் பொம்மலாட்டம்..!

நம் தேசப் பிதாவும் மீண்டும்
நம்மில் தோன்றிடமாட்டார்..!
நாட்டுக்கொரு நல்ல நிலை
நாமேதான் தந்திட வேண்டும்..!

என் குடிமகனே சிந்தித்துவிடு
எதிர்காலத்தை மாற்றும் சக்தி
உனக்கென்று வாய்த்துள்ளது....,
உபயோகப்படுத்த விழைகிறது..!

ஏறிமிதிக்கக் கிடந்த காலம்
ஏற்றுக்கொண்டதெல்லாம்..,
ஏமாளித்தனமும் மீள முடியா
கோமாளித்தனமுமே ஆகும்...!

கொடியதொரு ஆளுமைக்குள்
கொடிகளாய்ப் படரும் லஞ்சம்.....,
அறியாமை மக்களின் அறிவுக்கோ
புரிந்துகொள்ள முடியா வஞ்சம்..!

அடுத்த தலைமுறையிலும்
அரக்க சக்திகள் அதிகரிக்கக் கூடும்..,
பொறுத்துக் கொண்ட மனங்களே
பொங்கி எழுந்திடுக விரைவில்..!

இன்றும் உன் நாடு உனக்குச்
சொந்தமில்லை என்பதனை....,
மந்தம் தவிர்த்தே உணர்ந்திடு ;
மீண்டும் விடுதலை வேண்டும் !!!

எழுதியவர் : புலமி (19-Oct-12, 12:30 am)
பார்வை : 264

மேலே