நாங்கள் யார்...

" பாரு ஜெனி... உண்மையை சொல்லணும்னா என்னை நீ லவ் பண்ணுற அளவிற்கு நான் சரியான ஆளு இல்ல. அழகிலையும் சரி... அறிவுலேயும் சரி... அதுமட்டுமில்லை லவ் பண்ணுறவங்கள்ல தொண்ணூறு சதவீதம் பேரு சேருறதில்லன்னு சொல்லுறாங்க." வருண் சொல்வதை கேட்க கேட்க ஜெனியின் முகம் அழுகையின் சாயலாக மாறிக் கொண்டிருந்தது.

"ஜெனி... உன்னை அழ வைக்கணும்னோ... கஷ்டப்படுத்தணும்னோ சொல்ல... எனக்கு உன்னை பிடிக்கும்... ஆனா பிராக்டிக்லா யோசிச்சு பாரு... நீ ஆர்பனேஜ்ல வளர்ந்த பொண்ணு. என் அப்பா, அம்மா கிராமத்து ஆளுக. எப்படி நம்ம மேரேஜ்க்கு ஒத்துப்பாங்க. ஒரு வேளை என் அப்பா, அம்மா உன்னை அனாதைன்னு திட்ட ஆரம்பிச்சா உன்னால தாங்க முடியுமா? அப்புறம் சேர்ந்து வாழ முடியுமா?"

ஜெனி கண்கள் கலங்க ஆரம்பித்தது.

"சத்தியமா ஜெனி உன்னை கஷ்டப்பட நான் சொல்லல... பிளீஸ்... பிராக்டிகலா பாரு..."

என்னை சொன்னாலும் அமைதியாக இருக்க வேண்டும் என்று இருந்த ஜெனியால் நாவை அடக்கமுடியவில்லை.

"சோ... பிராக்டிகல்னு நீ சொல்லுறது உன் அப்பா அம்மா சம்மதம்தான் இல்லையா....?!"

"அப்படி இல்லை ஜெனி..."

"இல்லை... நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு..."

"இப்படி கேட்டா என்ன சொல்லுறது?"

"வருண்... எல்லாரும் பேசுறது போல நீ பேசுற... பிராக்டிக்கல்ன்னா என்னான்னு உனக்கு தெரியல... இந்த காலேஜ் முடியுறதுக்கு இன்னும் கொஞ்சம் நாள் இருக்கு அதுக்கு முன்னால உனக்கு புரிய வைக்கிறேன்... ஆனா நீ என்னை லவ் பண்ணனும்ங்க்கிறதுக்காக இல்லை. உனக்கு அப்படி புரிய வெச்சு நீ என்னை ஏத்துக்கிற லவ் எனக்கு தேவை இல்லை..."

ஜெனி கண்களில் நீர் ஓட ஓட சொற்கள் பதற பதற பேசியதை பார்த்த வருணுக்கு மனசு பதறியது உண்மை. இருந்தும் அப்பா, அம்மா, சமுதாயம் இவைகள் அவன் மனம் திறப்பதை தடுத்தது.

"வருண்... நான் அனாதையா இருக்கலாம்... அப்பா, அம்மா பேரு தெரியாதவளா இருக்கலாம்... ஆனா நானும் மனுஷி... ஒண்ணும் மட்டும் கேக்குறேன்... இப்ப நீ ஏன் அனாதை இல்லை... அப்பா, அம்மா இருக்காங்க.... அவங்களுக்கு வயசுயாகுதில்லை... அவங்க...." சற்று நிறுத்திய ஜெனி கண்களை துடைத்து விட்டு,

"இல்லை... வருண்... வேண்டாம்..." என்றவாறு வகுப்பறை நோக்கி நடந்தாள்.

கல்லூரி காலங்கள் நமக்கு கற்றுக் கொடுப்பது வெறும் கல்வி பாடம் மட்டுமல்ல வாழ்கை பாடமும்தான். எது தியறி, எது பிராக்டிகல் என்று வகைப்படுத்தி அதற்காக தனி மதிபெண்கள் வழங்கி நம்மை தேர்வில் தேர்ச்சி பெற செய்கிறது.

நாங்கு வருட கல்லூரி வாழ்கையை முடித்து விட்டு நாம் வாழும் சமுதாயத்திற்குள் நுழையும் பொழுது எது நல்லது, எது கெட்டது, எங்கு வாழ வேண்டும்? யாருடன் வாழ வேண்டும் என்ற தெளிவு வர ஆரம்பிக்கிறது.

அவர்களும் அப்படிப்பட்ட ஒரு கட்டாயத்தில்தான் இருந்தார்கள். நான்காவது வருடம் முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பெயர்வெல் நாளை சிறப்பிக்க வேண்டும். என்ன செய்யலாம்? என்று ஒரு தலைமை பேராசிரியர் தலைமையின் ஒரு சின்ன வகுப்பறை விவாதம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.

"ஸ்டுடெண்ஸ் நீங்க சொல்லுறதுதான்... இது உங்க பெயர்வெல்... நீங்க டிசைட் பண்ணுங்க..."

பேராசிரியர் கேட்க மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தனர்.

கார்த்திக், "சார்... ஆர்கெஸ்ட்ரா..."

சிவா," டின்னார்"

ரமேஷ், "ஒரு டூர்..."

வருண், "ஒரு நாள்ங்க்கிறத ஒரு வாரம் ஆக்கிக்கலாம் சார்..."

இன்னும் பதில்கள் தொடர்ந்து கொண்டே போனது. பேராசிரியரால் எதுவும் முடிவுக்கு வர முடியவில்லை.

"ஹலோ...ஹலோ... நிறுத்துங்க.... எதாவது ஒரு தெளிவான முடிவா சொல்லுங்க...ஜெனி நீ என்ன சொல்லுற?"

"நம்ம காசை நாமே செலவு பண்ணுறதில என்ன சந்தோசம் சார்"

"வேற என்ன பண்ணலாம்?"

"ஒரு நாள் காலைல எல்லாருமா ஒரு அனாததை விடுதிக்கு போய்... மூணு நேரம் அவங்களுக்கு சாப்பாடு போடுறோம்... இவினிங்க் வரை அங்கே பசங்களோட விளையாடுறோம்.."

"நல்லா இருக்கே...ஸ்டூடண்ஸ் என்ன சொல்லுறீங்க?'

பெண்கள் எல்லாரும் கும்பலாக சம்மதத்தை தெரிவித்தனர். மாணவிகள் ஒத்துக்கொண்டால் பிறகு மாணவர்கள் வேண்டாம் என்றா சொல்ல போகிறார்கள்!

நாள் குறிக்கப்பட்டது. நேரம் சரியாக காலை ஆறு மணிக்கு அனைவரும் கல்லூரியில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எந்த ஆனாதை விடுத்தி செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த நல்ல விஷயத்தை கல்லூரி முழுவதும் பரவி அனைவராலும் வர வேற்கப்பட்டது.

அந்த நாள் காலை ஆறு மணி முப்பது நிமிடங்களுக்கெல்லாம் அம்மா விடுதி முன் அனைவரும் பேருந்திலிருந்து இறங்க ஆரம்பித்தனர்.

ஆரப்பமே காப்பகக் குழந்தைகள் ஆச்சரியம் கொடுத்தனர். அனைத்து குழந்தைகளும் வாசல் முன் நின்று வரவேற்று பாடல் பாடிவாறு ஒவ்வொருத்தர் கையையும் பிடித்து அழைத்து கொண்டு பூஜை அறையில் அமர வைத்தனர். பிறகு கண்கள் மூடி வேண்ட ஆரம்பித்தனர். ஒவ்வொன்றாக பார்க்க பார்க்க மாணவர்கள் மனம் உறைய ஆரம்பித்தது.

காலை உணவு தயார் செய்ய ஆரம்பித்தனர். மாணவர்கள் காய்கறிகளை வெட்ட மாணவிகள் சமைக்க ஆரம்பித்தனர். ஜெனி எல்லாவற்றையும் முன் நின்று நடத்தினாள்.

காலை உணவு பறிமாற குழந்தைகளின் நீள ஜெபத்துடன் உணவு உண்ண ஆரம்பித்தனர்.
உணவு முடிந்ததும் சிறுது நேரம் குழந்தைகளுடன் பேச ஆரம்பித்தனர்.

அழகு அது. அந்த குழந்தைகளுக்கு சோகம் தெரியவில்லை. வருத்தமில்லை. அம்மா அப்பா இல்லை என்கிற கவலை இல்லை. அவர்கள் சந்தோசத்தைப் பார்க்க பார்க்க மாணவர்களில் ஆர்வம் கூடியது. அவர்கள் இருப்பது அனாதை விடுதி என்பதை மறக்க ஆரம்பித்தனர். காலை உணவை வேலையாக செய்த மாணவர்கள் கூட மதிய உணவை ஆரவத்துடன் சமைக்க ஆரம்பித்தனர்.

விளையாட்டு, பாட்டு, கதை என்று மாலை வரை மாணவர்கள் அனைத்தையும் மறந்து இருந்தனர்.

எல்லாம் முடிந்து இரவு ஒன்பது மணிக்கு மேல் மீண்டும் பூஜை அறையில் அனைவரும் கூடினர். மீண்டும் நீண்ட சாமி மந்திரம்... பிஞ்சு மழலைகள் மந்திரங்களை சொல்ல சொல்ல அது இவர்களுக்கு இனிமையாக கேட்க ஆரம்பித்தது.

ஜெபம் முடிய ஒரு குழந்தை மட்டும், சுமாராக அந்த குழந்தைக்கு எட்டு வயது இருக்கலாம், பேச ஆரம்பித்தது.

" என் பெயர் சுபத்திரா.. நாங்கள் அனாதைகள் இல்லை. எங்களுக்கு உணவு சமைத்து பரிமாறுவர்கள்தான் எங்கள் அம்மா... இன்று நீங்கள்தான் எங்கள் அம்மா... அம்மா அப்பா உயிருடன் இருக்கும் பொழுது நாங்கள் எப்படி அனாதை ஆவோம். இங்கு வாழும் ஒவ்வொருவரும் என் சகோதர்கள். உடன் பிறந்தவர்கள். அம்மாவிற்கு எந்த மகனும் மகளும் நன்றி சொல்வதில்லை. நாங்களும் உங்களுக்கு நன்றி சொல்ல போவதில்லை. எங்கள் அம்மா நீங்கள் இருக்கும் வரை நாங்கள் பட்டினி இருப்பதில்லை." என்று சொல்லி அந்த குழந்தை அப்படியே கீழே படுத்து அனைவரையும் வணங்கியது.அந்த குழந்தை வணங்க தரை தொட்ட இடம் வருண் காலடி. முன் வருசையில் அமர்ந்திருந்த வருண் மனம் பதற பட்டென்று எழுந்தான். அவனை தொடந்து மற்றவர்களும் எழுந்து நின்றனர். வருண் குழந்தையை தோள் தொட்டு தூக்கினான். மற்ற குழந்தைகளும் ஒவ்வொருத்தர் கையை பிடித்துக் கொண்டனர். வருண் கைகளில் அமர்ந்திருந்த அந்த சுபத்திரா கடைசி பாடலின் முதல் வரியை பாடினாள்... தொடர்ந்து மற்றவர்கள் பாட மாணவர்கள் மெதுவாக வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தினர். வாசல் வர வர ஒவ்வொரு குழந்தைகளாக கைகளை விட்டு விட்டு வாசலின் பின்னால் நின்று கொண்டனர்.

எல்லா மாணவர்களும் வெளியே வந்து குழந்தைகளுக்கு விடை சொல்ல வருண் மட்டும் ஜெனியைதேடினான்.

"ஜெனி எங்கே?"

"ஜெனி..." இன்னொருவன் கேட்டான்

"ஜெனி...." மாணவர்கள் சத்தம் சல சலத்தது...

அனைவரும் மீண்டும் திரும்பி குழந்தைகளை பார்க்க, குழந்தைகள் அனைவரும் "நன்றி அம்மா" என்றவாறு ஜெனியின் கன்னத்தில் முத்தமிட்டு நன்றியையும் பாசத்தைக் காட்டி கொண்டிருந்தனர்.... ஜெனியின் கண்கள் மட்டும் வருண் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தது. அவள் கண்கள் நான் அனாதை இல்லை என்று சொல்லி காட்டியது. இந்த பாசத்தில் எது பிராக்டிக்கல் எது தியறி என்று கேட்பது போல் தோன்றியது வருணுக்கு....

அனைவரும் நகர வாசல் கதவு மூடிக்கொண்டது... வருண் மனம் திறந்து கொண்டது...

அவன் மனது அவனிடம் கேட்டு கொண்டிருந்தது,

"உன் அப்பா, அம்மாவிற்கும் வயதாகிறது...
அவர்கள் இறந்து விட்டால் நீயும் அனாதையாகி விடுவாயா???!!!"


- ஜெயன் எம் ஆர்

எழுதியவர் : ஜெயன் எம் ஆர் (28-Dec-12, 4:26 pm)
Tanglish : naangal yaar
பார்வை : 322

மேலே