இந்த சந்தர்ப்பத்தை

அவன் ஊருக்குச் செல்லும் நாட்கள் குறைந்துகொண்டே இருந்தன. அவளிடமிருந்து எந்த மாற்றமும் காணமுடியவில்லை அவனால். அவள் காதலிக்கிறாளா என்றுகூட அவனுக்கு மிகுந்த சந்தேகமாகிப் போய்விட்டது. ஆனால் அப்படி இருக்க சாத்தியமில்லை. அவளைப்பற்றி அவனுக்குத் தெளிவாகத் தெரியும். வீட்டில் ஏதாகிலும் பிரச்சனை இருக்கலாமோ என்ற சந்தேகம் மேலோங்கியது. பலமுறை சந்திக்க முயன்று தோல்வியிலேயே முடிந்துகொண்டிருந்தது அவனின் முயற்சிகள் அனைத்தும். ட்ரெயினில் ஏற்படுத்தப்பட்ட அந்த சந்திப்பு நடந்திருந்தால் எல்லாமும் சுமூகமாகி இருந்திருக்கும். ம்ம்ம்ம்ம் வீட்டில் எதிர்ப்பு. விரக்தியான மனநிலை. சொதப்பினால் பயங்கரமான பிரச்சனையாகிவிடும் அபாயம்.
அவள் இத்தனை பரபரப்பான, சாதகமான உலகிலும் அவளின் எந்த விதமான தவகல்களையும் அவனுக்குத் தெரியப்படுத்தாமலேயே இருந்துகொண்டு இருந்தாள். அவனைப்பற்றியும் அவளுக்கு நன்கு தெரியும். அவன் சாதாரணமானவன் அல்ல. ஒரு சின்ன அசைவையும் கண்டு எடைபோட்டு முடித்து செயல்படுத்திடுவான். அதுதானே அவளின் சிக்கல்.
ஆனாலும் அவனிடம் அவளுக்குப் பிடித்ததும் அதே பரபரப்புதான். எந்தநேரமும் உயிருடேயே இருந்துகொண்டிருப்பான். வாழ்ந்துகொண்டிருப்பான்.
இருப்பினும் எழுத்துவில் மாற்றுப்பெயரில் ஒரு அக்கௌன்டைத் துவக்கி, அவனுக்காக ஒரு கவிதையினை வடிக்க நினைத்தாள். அதைக்கண்டால் ஏதாகிலும் மாற்றம் நிகழலாமே என்ற ஒரு கணக்கு.
" நீயின்றி நானில்லை அன்பே..
உன் நிழலுக்காக ஏங்கிநிற்கும்
நிலாவினை எப்பொழுது பிரித்தெடுத்து
வானுக்கு
நிரந்தர அமாவாசை தந்திடப் போகிறாய்..... " கவிதையினை எழுதிமுடிக்க அவளின் மாமன் மகன் வந்துநிற்க, கலவரத்துடன் கவிதையினை போஸ்ட் பண்ணாமலேயே அழித்துவிட்டாள்.
அவளின் வாழ்க்கை தனிமையிலேயே இனிமை காண இறைவன் விதித்துவிட்டான் போலும். இந்த சந்தர்ப்பத்தினைத் தவறவிட்டால்.....
தலை சுற்றியது அவளுக்கு.

எழுதியவர் : தீ (29-Dec-12, 9:13 am)
பார்வை : 314

மேலே