நானும்தான் உள்ளடக்கமா?

பத்து வருடத்திற்குப் பிறகு சொந்த நாட்டில் என் பாதங்கள் படுகிறது.
மனதிற்குள் மட்டுமல்ல உடலுக்குள்ளும் ஒருவித புத்துணர்வு.
புதிதாய் விட்டதோர் நினைப்பு.ராஜேஷ் ,அவனைத்தான் என் கண்கள் தேடின.
என்னை அழைத்துச் செல்ல வந்திருப்பவன் அவன்தான்.
என் நண்பன்,எனக்கான ஒருவன்.நான் இந்தளவுக்கு உயர என்னை ஏற்றி விட்ட ஏணி.

''சுந்தர் ...சுந்தர் ...இங்கடா...''
குரல் வந்த திசை நோக்கி திரும்பினேன் .ராஜேஸ்தான்அழைத்தான் .கையைத் தூக்கி
காட்டிக்கொண்டே மறுகையால் என் சூட்கேசை இழுத்துக்கொண்டு அவனருகில்
சென்றேன்.எந்தப் பேச்சுக்களும் இல்லை.இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டோம்.

''எப்படிடா இருகிறாய்?''
''நல்லா இருக்கிறன் ,பார்த்தாலே தெரியல...''
''தெரியுது தெரியுது ,உடம்ப பார்த்தாலே தெரியுது .லண்டன் சாப்பாடு நல்லா வேலை
செய்யுது போல....''
''என்னதான் இருந்தாலும் நம்மூரைப்போல வருமா ....சரி அம்மா எப்பிடி இருக்காங்க ''
''அவங்களுக்கு என்ன ...நல்லா இருக்காங்க ....''

அவர் ராஜேஷ் அம்மா மட்டுமல்ல,எனக்கும் அம்மாதான்.எனக்கென்று உறவென்று
சொல்லிக் கொள்ள மட்டுமே எல்லோரும் தயாராக நின்ற போது என்னை
ஆதரித்தவர்கள் ராஜேசும் அவன் தாய் லக்சுமியும்தான்.உண்மையைச் சொல்லப்
போனால் இவர்கள் இல்லாவிட்டால் இன்றைக்கு நான் வயலில் சேற்றோடு
விளையாடிக் கொண்டு இருந்திருப்பேன்.
''என்னடா போவமா ....?''
''பிறகு,இஞ்சையே இருந்து என்ன செய்யிறது ?''
வாகனம் புறப்பட்டது.

வாகனத்தின் பயணம் என்னவோ முன்னோக்கித்தான் இருந்தது.ஆனால் என்னுடைய
நினைவுகளோ பின்னோக்கியது.
நான் சாதாரண தரத்திலே படித்துக் கொண்டிருந்த காலம்.அவ்வளவு பெரிய
பாடசாலையும் அல்ல,நான் படித்த பாடசாலை.சாதாரண தரம் வரைதான் இருந்தது.
மொத்தமாக இருநூற்றி ஐம்பது பிள்ளைகள்,இருபது ஆசிரியர்கள் ,ஒரு பெரிய கட்டிடம்
இரண்டு சின்னக் கொட்டில்கள் என்ற அளவோடுதான் இருந்தது.எங்கள் வகுப்பில்
பதினைந்து பேர்.எப்படியாவது உயர்தரம் படித்து ஒரு அரசாங்க வேலையில் சேர்ந்து
விட வேண்டும் என்கின்ற ஆசையில்தான் படித்துக் கொண்டிருந்தேன்.

அவ்வப்போது சண்டைகள் கொஞ்சம் பெரிதாகவே இடம்பெற்றுக்கொண்டிருந்தது .அப்படி
ஒருநாளில்தான் என்னைப் பெற்றவர்களை நான் இழந்தேன்.நான் பாடசாலைக்கு
சென்றிருந்த நேரம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை ஒரு செல் எங்கள் வீடு மீது
விழுந்து என் குடும்பத்தைக் காவு கொண்டது.எனக்கு அநாதை என்ற முத்திரையும்
கட்டியது .
உறவுகள் வந்தார்கள்.ஏதோ ஒரு கடமைக்கு செய்ய வேண்டியவற்றைச் செய்தார்கள்.
போய்விட்டார்கள்.ஒருவர் தன்னோடு வந்து வயல் வேலைகளைப் பார்த்துக்கொண்டு
இருக்குமாறு சொன்னபோது எனக்கு மனதில் ஒருவித பயம் குடிகொண்டது.
என்னுடைய அரசாங்க வேலை கனவு அவ்வளவுதான் என்று எண்ணியபோது
லேசாக அழுகையும் வந்தது.அப்போதுதான் தோள் கொடுப்பான் தோழன் என்பதுபோல
என் நண்பன் ராஜேஷ் வந்தான்,என்னைத் தன்னுடன் வரும்படி அழைத்தான்.நான்
முதலில் சிறிது தயக்கம் காட்டினேன்.காரணம்,ராஜேஷ்,அவனுடைய தந்தையை
சிறுவயதிலேயே இழந்தவன்.தாய்தான் வளர்த்து வருகிறாள்.என்னை வைத்துப்
பார்த்துக்கொள்ளக்கூடியளவுக்கு அவர்களுக்கு வசதி இருக்குமா என்கிற தயக்கம்.
ஆனாலும் அவர்களின் வற்புறுத்தல்களினால் நான் அவர்களுடனேயே சென்றுவிட்டேன்.

உண்மையைச் சொல்லப்போனால் தன் சொந்தப் பிள்ளையைப் போல் கவனித்தார்கள்.
மீண்டும் எனது கனவுப் பயணம் ஆரம்பமானது.அரசாங்க வேலை கனவுப்
ஆரம்பமானது.அரசாங்க வேலை கனவுப் பயணம்.உயர்தரம் சேர்ந்தேன்.வர்த்தகப் பிரிவில்
படித்தேன்.ராஜேசும்தான் பரீட்சை எழுதி முடிவுகளுக்கு காத்திருந்த நேரம்,அப்போதுதான்
அந்த சந்தர்ப்பம் கிடைத்தது.ராஜேஸின் தூரத்து உறவினர் ஒருவர் லண்டனில் ஒரு
தனியார் நிறுவனத்தில் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக கூறி ராஜேசிடம் அணுகினார்.
ராஜேஷ் என் பக்கம் சாய்ந்தான்.
ஆனால் என்னுடைய கனவு அரசாங்க வேலையாயிற்றே.அதனால் நான் மறுத்து விட்டேன்.
''ஏண்டா அரசாங்க வேலை ,அரசாங்க வேலைன்னு புலம்புறாய்..இதுவும் நல்ல
வேலைதானே...வெளிநாட்டு வேலை ...''
ஆனால் என்மனம் மட்டும் அரசாங்க வேலையையே விரும்பியது.
''ஏனடா நீ போவன்...''
ராஜேசைப் பார்த்துக் கேட்டேன்.
''நான் எப்படிடா அம்மாவை விட்டிட்டு போறது.இங்க பாருடா உனக்கு அரசாங்க வேலை
கட்டாயம் கிடைக்குமெண்டு என்ன நிச்சயம்.கிடைக்கிற சந்தர்ப்பத்த தவறவிடாத''
பல மணி நேர பேச்சுக்களுக்குப் பிறகு நான் சம்மதித்தேன்.லண்டன் புறப்பட்டேன்.கொஞ்ச
நாளில் எல்லாமே பழகி விட்டது.என்னுடைய கனவுகூட இப்போது மறந்துவிட்டது.

இன்றைக்கு பத்து வருடத்திற்குப் பிறகுதான் திரும்பி வருகிறேன்.இடையில் ஒருமுறைகூட
வரவில்லை.வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றில்லை.ஏனோ வர மறுத்துவிட்டேன்.
வெளிநாட்டு வாழ்க்கையில் லயித்து விட்டேனோ என்னவோ.
''சுந்தர் நம்ம ஸ்கூல பாரு..''
என் நினைவுகளை கலைத்தான் ராஜேஷ்.
எத்தனை மாறுதல்கள்,என்னென்ன கேவலங்கள்,யுத்தம் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டது.
நான் படித்த போது இருந்த கட்டிடம் ஒரு பகுதி உடைந்த நிலையில் இருந்தது.புதிதாக
இரண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.இன்னொரு கட்டிடம் வளர்ந்து கொண்டிருந்தது.
பிள்ளைகளின் எண்ணிக்கையில் பெரிதாக மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.
யுத்தம்தான் எத்தனை மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது.மக்களின் வாழ்க்கையை எந்தளவுக்கு
புரட்டிப் போட்டிருக்கிறது.
வீட்டுக்கு வந்து சேர்ந்த போது அதிர்ச்சியடைந்துவிட்டேன்.ஒரு சின்னக்கொட்டில் அதில்தான்
இருவரும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
''என்னடா இது...இதில்தான் இருக்கிறீங்களா?''
''வீடு கட்டுப்படுதுடா...அதுவரைக்கும்தானே...''
''ஏண்டா என்னட்ட சொல்லியிருக்கலாம்தானே...இவ்வளவு நாளும்...''
அவன் எதுவும் பேசவில்லை.எனக்கு ஒரு உண்மை புரிந்தது.
அவன் ஏன் சொல்லவேண்டும்,நானல்லவா உணர்ந்திருக்க வேண்டும்,நானகவல்லவா
உதவியிருக்க வேண்டும்.
யுத்தம் இடம்பெற்றதும் எனக்குத் தெரியும்.அதில் ஏற்பட்ட அழிவுகளும் எனக்கு தெரியும்.
ராஜேஷ்,அவனுடைய தாய் பட்ட கஷ்டங்களும் அவனே சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
இப்படியெல்லாம் கேட்டவன் நானாக ஏன் உதவமறுத்தேன்....என்னை வளர்த்துவிட்ட
குடும்பமல்லவா இது.இவர்கள் இல்லை என்றால் இன்றைக்கு வெளிநாட்டு வாழ்க்கையில்
திளைத்திருப்பேனா ,எங்கு வயல் வேலை செய்து கொண்டிருப்பேனோ,அல்லது
யுத்தத்தில் உயிரை விட்டிருப்பேனோ,யார் கண்டது.
என்னை வளர்த்த சொந்தத்தைவிட்டு,ஊரை விட்டு வெளிநாட்டு மோகத்தில் வாழ்ந்திருக்கிறேன்.
இந்தப் பத்து வருடங்களாக எத்தனை தடவை வந்து பார்த்திருக்கலாம்.ஆனால் நான்
அதைச் செய்யவில்லையே,எத்தனையோ சந்தர்ப்பம் கிடைத்தும் நான் வரவில்லையே,
ஏன்....பணத்தைப் பார்த்தவுடன் என் குணமும் மாறிவிட்டதா
சொந்த ஊரை மறந்து உறவுகளை மறந்து அந்நிய தேசத்தில்,அந்நிய கலாசாரத்தில் வாழும்
மனிதர்களுக்குள் நானும் உள்ளடங்கி விட்டேனா? மனிதர்களை மறந்து இயந்திர
உலகத்திற்குள் தள்ளப்பட்டுவிட்டேனா?
இல்லை.......இல்லை........
இனி நான் வெளிநாடு செல்லப்போவதில்லை.இங்கேயே,என் சொந்தங்களுடனேயே,என்
மனிதர்களுடனேயே,சொந்த மண்ணில் வாழப்போகிறேன்.மறந்துபோன என் கனவை
மீண்டும் தொடங்கப்போகிறேன்.அரசாங்க வேலை நிச்சயம் எனக்கு கிடைக்கும்.
அதுவரைக்கும் இருக்கும் பணத்தை வைத்து நல்லதொரு வீடு.அதிலே நான்,என் நண்பன்
எங்கள் தாய் சந்தோசமாய் வாழ்வோம் .மனிதரை மறக்கும் வெளிநாட்டு வாழ்க்கைக்குள்
நான் உள்ளடங்க மாட்டேன்.

எழுதியவர் : கலைப்பிரியன் (அனுஜன்) (30-Dec-12, 5:27 pm)
சேர்த்தது : அனுஜன்
பார்வை : 247

மேலே