நிமிர்ந்து நில்

Tamil Cinema Vimarsanam


நிமிர்ந்து நில் விமர்சனம்
( Vimarsanam)

இயக்குநர் சமுத்திரக்கனியின் லஞ்ச ஒழிப்பு பிரச்சாரமாக வெளியாகியிருக்கும் படம் தான் \'நிமிர்ந்து நில்\'.

ஆசிரமம் ஒன்றில் படித்துத் தேறும் அரவிந்த் (ஜெயம் ரவி) நேர்மையான மனிதனாக வாழ விரும்புகிறான். அனால் வெளி உலகிற்கு வரும் அரவிந்த் முற்றிலும் வேறு விதமான அனுபவத்தைப் பெறுகிறான். அவன் செல்லுமிடமெல்லாம் லஞ்சமும் ஊழலும் அவனை வரவேற்கின்றன. பிரச்சினைகள் அவனைத் துரத்துகின்றன. ஊழலில் புழுத்துப் போன அமைப்பின் சகல அங்கங்களும் அவனைப் பாடாய்ப் படுத்துகின்றன. அவனு டைய காதலி பூமாரி (அமலா பால்), நண்பன் ஆகியோர், நடைமுறையைப் புரிந்துகொண்டு வளைந்து கொடுத்து வாழச் சொல்கிறார்கள். அவன் மறுக்கிறான். சட்டபூர்வமான வழிகளைப் பயன்படுத்திப் போராடுகிறான்.

அவமானங்களுக்கும் வலிகளுக்கும் ஆளாகும் அரவிந்த் அணுகுமுறையை மாற்றுகிறான். நேர்மையான வக்கீல், நேர்மையான சில அதிகாரிகள் ஆகியோரின் உதவியுடன் ஊழல்வாதிகளைப் பொறியில் சிக்க வைக்கிறான். உண்மை டிவி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் உதவியுடன் 147 அதிகாரிகளை மக்கள் முன்னால் அம்பலப்படுத்துகிறான். மக்கள் கொதிப்படைகிறார்கள். பெரும் எழுச்சி நிகழ்வதற்கான சூழல் உருவாகிறது. ஆனால் அதிகாரிகள் அவன் வைத்த அதே பொறியில் அவனைச் சிக்கவைக்கத் தந்திரம் செய்கிறார்கள். அரவிந்த் அதில் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து அவன் தப்பினானா? அவன் லட்சியம் என்னவாயிற்று?

ஊழலில் ஊறிப்போன அமைப்பைச் சீர்திருத்த வேண்டும், மக்ககளிடையே நியாய உணர்வும் எழுச்சியும் தோன்ற வேண்டும். இவைதான் சமுத்திரக்கனியின் நோக்கங்கள். தமிழ் உணர்வு, லஞ்சம், பத்திரப் பதிவு ஊழல், தொலைக்காட்சியின் மூலம் அம்பலம், ஆம் ஆத்மி எனப் பல விஷயங்களை வைத்துத் திரைக்கதையைப் பின்னியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வசனங்கள் வழியே அமைப்பையும் சமூகத்தையும் சாடுகிறார். லஞ்ச, ஊழலைப் பற்றிப் பேசும் படத்தில் திடீரென இலங்கைப் பிரச்சினைக்கான குரலும் கேட்கிறது.

ஜெயம் ரவி கடுமையாக உழைத்திருக்கிறார். இரண்டு வேடங்களிலும் மாறுபட்ட பேச்சு, உடல் மொழி என்று ரசிக்கவைக்கிறார். ஜெயம் ரவி, இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமலா பால் அவ்வப்போது வந்து திரைக்கதைக்கு வண்ணம் கூட்டுகிறார். சூரி கொஞ்சம் காமெடி நிறைய சீரியஸ் என்று தன் அடையாளத்தை நிலைநிறுத்துகிறார். சுப்பு பஞ்சு, கோபிநாத், கு. ஞானசம்பந்தன், ராகினி ஆகியோர் படத்துக்கு வலு சேர்க்கிறார்கள். சரத்குமார் அழுத்தமான சிறிய வேடத்தில் தனித்து நிற்கிறார்.

நிமிர்ந்து நிற்க வேண்டிய படம்


சேர்த்த நாள் : 2014-03-27 16:48:37
4.3 (30/7)
Close (X)

நிமிர்ந்து நில் தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே