உறுமீன்
Urumeen Tamil Cinema Vimarsanam
(Urumeen Vimarsanam)
ஜென்ம பகை தொடர்பான மூன்று தலைமுறை கதைத்தொகுப்பே உறுமீன். செல்வவளம் மிக்க ஒரு நாட்டின் வீரமிக்க மன்னராக வரும் பாபி சிம்ஹா, பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.
பஞ்சபூதங்களின் தன்மைகளை அறிந்து எதிர்காலத்தை கணிக்கும் அசாத்திய திறன் கொண்டவர். படையெடுத்து வரும் பிரிட்டிஷ் படைகளை சிதறடித்து விரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்டுகிறார். ஆனால், காட்டிக்கொடுத்த தன் நண்பன் கலையரசனால் அவர் வாழ்க்கை முடிகிறது.
கலையரசன் கொடுத்த தகவலின்பேரில், சுற்றி வளைத்த பிரிட்டிஷ் படைகள் கண்ணில் மண்ணைத் தூவும் பாபி சிம்ஹா, அங்கிருந்து தப்பிச் சென்று தன் குருவை சந்திக்கிறார்.
அப்போது, எப்படியும் தன்னை பிரிட்டிஷ் படைகள் பிடித்து கொன்றுவிடுவார்கள் என்பதை உணர்ந்த அவர், அவர்கள் கையால் சாவதைவிட உயிர்துறப்பதே மேல் என்று தன்னை உயிரோடு புதைக்கும்படி கூறுகிறார்.
அத்துடன் அவர் தன் எதிர்காலம் குறித்து எழுதி வைத்திருந்த ஜென்ம புத்தகத்தையும் உடன் புதைக்கும்படி கூற, அதன்படியே அவர் புதைக்கப்படுகிறார். இந்த 7 நிமிட முதல் தலைமுறை கதை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்பின்னர் கதை நேராக சென்னைக்கு பயணமாகிறது. கதாநாயகன் பாபி சிம்ஹா, பி.இ. படித்துவிட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு வருகிறார். நண்பர் காளியின் அறையில் தங்கியிருக்கும் அவருக்கு கால் சென்டரில் வேலை கிடைக்கிறது.
அலுவலகத்தில் அவரது டீம் லீடராக வருகிறார் கதாநாயகி ரேஷ்மி மேனன். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பதால் அறிமுகம் ஆகிறது.
இந்நிலையில், முதல் தலைமுறையில் எழுதப்பட்ட ஜென்ம புத்தகம், தன் வீட்டு உரிமையாளர் மூலம் பாபி சிம்ஹாவுக்கு கிடைக்க, அவருக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத மாற்றம் நடப்பதுபோல் தோன்றுகிறது.
புத்தகத்தை அலுவலகத்தில் வைத்திருந்தபோது அதிலிருந்து புகை வருகிறது. பின்னர் அதை ஒரு சைக்காடிஸ்ட் டாக்டரிடம் காட்ட, அந்த புத்தகத்திற்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.
எனவே, அந்த புத்தகத்தைப் பற்றிய நினைவில் மூழ்கியிருக்கும் பாபி சிம்ஹாவின் வாழ்க்கையில் ரேஷ்மி மேனன் மூலம் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. கிரெடிட் கார்டு கடன் வசூலிக்கும் நபர், தனக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறி ரேஷ்மி மேனன் உதவி கேட்கிறார்.
இதனால், அந்த நபரை பின்தொடரும் பாபி சிம்ஹா, அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என்று நெருங்கியபோது, அவர் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். அவர் பாபியின் நண்பர் கலையரசனின் தம்பி என்பதால், அவர்களுக்குள் பகை ஏற்படுகிறது.
தம்பியின் சாவுக்கு காரணமானவர்கள் பற்றி விசாரித்த கலையரசன், தம்பியை பின்தொடர்ந்து சென்ற பாபியையும் உண்மையான கொலையாளிளையும் பிடித்து தனி இடத்தில் அடைத்து வைக்கிறார். உண்மை அறிந்து, அங்கிருந்து தப்பிச் சென்ற பாபி, நேரடியாக கலையரசனுடன் மோத ஆரம்பிக்கிறார்.
பின்னர் தன்னிடம் உள்ள ஜென்ம புத்தகத்தை படித்தபோது, தனது முன்ஜென்ம வரலாறு அதில் இருந்தது.
முதல் ஜென்மத்தில் நண்பரா இருந்து காட்டிக்கொடுத்த கலையரசன், இரண்டாவது ஜென்மத்திலும் வழக்கறிஞராக இருந்த தன்னை நண்பனாக இருந்து காட்டிக்கொடுத்து சாவுக்கு காரணமாக இருந்தது தெரியவருகிறது. இவர்களின் ஜென்ம பகை தீர்ந்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.