தங்க மகன்

Thanga Magan Tamil Cinema Vimarsanam


தங்க மகன் விமர்சனம்
(Thanga Magan Vimarsanam)

தனுஷ், அவரது நண்பர் சதீஷ் மற்றும் உறவுக்காரப் பையன் அரவிந்த் மூவரும் சேர்ந்து ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். தனுஷின் அப்பா கே.எஸ்.ரவிக்குமார் வருமானவரித் துறை அலுவலகத்தில் கணக்கு எழுதுபவராக பணிபுரிந்து வருகிறார். ரவிக்குமாரின் மனைவி ராதிகா குடும்பத் தலைவி. நடுத்தர குடும்பம்தான் என்றாலும் இவர்களது குடும்பத்தில் சந்தோஷத்துக்கு குறைவில்லை. இந்நிலையில் ஒருநாள் நாயகி எமிஜாக்சனை கோவிலில் பார்க்கிறார் தனுஷ். பார்த்ததும் அவள்மீது காதல் துளிர்விட, தொடர்ந்து அவரையே சுற்றி வந்து, தனது காதலை வெளிப்படுத்துகிறார் தனுஷ். ஒருகட்டத்தில் எமிஜாக்சனும் தனுஷை காதலிக்கத் தொடங்குகிறார். இருவரும் காதலர்களாக மாறுகிறார்கள்.

அதேநேரத்தில், சதீஷும் எமிஜாக்சனுடன் கூடவே வரும் அவரது தோழியை காதலிக்கிறார். தனுஷும், சதீஷும் காதல் வலையில் சிக்கி, தங்களது காதலிகளுடன் ஊர் சுற்ற, அரவிந்துக்கு இதுபற்றி எதுவுமே இவர்கள் தெரிவிப்பதில்லை. இதனால், அரவிந்தனுடனான இவர்களுடைய நட்பில் விரிசல் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில், இவர்கள் காதல் செய்யும் விஷயம் அரவிந்துக்கு தெரிய, தன்னிடம் இதைப்பற்றி தெரிவிக்காத நண்பர்களிடம் கோபித்துக் கொண்டு அவர்களிடமிருந்து நிரந்தரமாக பிரிகிறான்.

பின்னர், ஒருநாள் எமி ஜாக்சன், தான் கட்டிவரும் கனவு இல்லத்தை தனுஷிடம் காட்டி, திருமணத்திற்கு பிறகு இருவரும் தனியாக இந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், அப்பா, அம்மா மீது அதிக பாசம் கொண்ட தனுஷோ, பெற்றோரை விட்டு தனியாக வரமுடியாது என்று கூறுகிறார். இதனால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து போகிறார்கள்.

இதையடுத்து தனுஷ் படித்து முடித்துவிட்டு அப்பா வேலைசெய்யும் வருமான வரித்துறை அலுவலகத்திலேயே வேலைக்கு சேர்கிறார். அதன்பின்னர், சமந்தாவை தனுஷுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். இருவருடைய திருமண வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கே.எஸ்.ரவிக்குமாருக்கு அவரது உயரதிகாரி ஜெயப்பிரகாஷ் மூலமாக பிரச்சினை வருகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் மீது திருட்டு பட்டம் கட்டி அவரை அவமானப்படுத்துகிறார் ஜெயப்பிரகாஷ். இந்த அவமானத்தை தாங்க முடியாத கே.எஸ்.ரவிக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவருடைய மரணத்திற்கு பிறகு தனுஷின் குடும்பமே நிலைகுலைந்து போகிறது. தங்குவதற்குகூட வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற தனுஷும் கிடைத்த வேலையை செய்துவருகிறார்.

இந்நிலையில், சமந்தா கர்ப்பமடைகிறார். சந்தோஷப்படவேண்டிய இந்நேரத்தில் தனது குடும்பத்தின் நிலையை அறிந்த மிகவும் வேதனையடைகிறார் தனுஷ். இறுதியில், தனது அப்பா மீதுள்ள திருட்டுப் பட்டத்தை தனுஷ் எப்படி நீக்கினார்? தனுஷ் தன்னுடைய குடும்பத்தை எப்படி மேலே கொண்டு வந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.


சேர்த்த நாள் : 2015-12-22 18:09:45
(0)
Close (X)

தங்க மகன் (Thanga Magan) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே