எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

--என் காலடிப் பாதை-- அ ன்புத் தோழமைகளுக்கும், அறிஞர்...

--என் காலடிப் பாதை--
 

ன்புத் தோழமைகளுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும் என் மரியாதை கலந்த வணக்கங்கள்.

இன்றோடு இந்த தளத்தில் இணைந்து 8 மாதங்கள் முடிந்து இன்று 9 ஆவது மாதத்தில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியிருக்கிறது என் பாதை. 

சாதாரணமாக  எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை தமிழ்ப்பற்று இங்கு இழுத்து வர,ஆரம்ப சூழ்நிலையில் அதிகம் படிக்கவில்லையே என தன்னம்பிக்கையின்றி எழுத ஆரம்பித்தபோது அந்த ஆரம்ப காலகட்டத்தில் தயக்கம் இருந்தது. தளத்தோழர்கள் உங்களின் கருத்து ஊக்கம்தான், தயக்கம் போக்கி, இந்த தளத்தில்  தொடர்ந்து என்னை எழுத வைத்து முதல் பாதை அமைத்துத் தந்தது.  நீங்கள்  தந்த கருத்து  உற்சாக பாதையில் கொஞ்சம் கொஞ்சமாய் தாழ்வு மனப்பான்மை மறைந்தே விட்டது. அதற்காக ஒவ்வொருவருக்கும் என் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

எனக்குத் தெரிந்த விவசாயம் மற்றும் கிராமியம் கலந்து நான் எழுதும் படைப்புகளுக்கு வாழ்த்து தந்த  உற்சாகத்திலும், பலர் எழுதும் கவிதைகளை வாசித்து வாசித்தும் என்னை நானே மெருகேற்றிக் கொண்டேன்

முதன் முதலாக ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக்கொண்ட  கொண்ட   நம் “எழுத்து” தளம் நடத்திய”மீண்டும் மீண்டும்” எனும் கவிதைப் போட்டியில் தளத் தோழர்களோடும்,  தமிழறிஞர்களோடு நானும் பங்குபெற்றேன். பள்ளிப் படிப்பைக் கூட பாதியிலேயே விட்டு வந்த கிராமியத்தவன் நானும் தமிழறிஞர்களோடு பரிசுக்குரியவனாக தேர்ந்தெடுக்கப் பட்டேன். முதன் முதலில் நான் பெற்ற பரிசும் இதுவே. 

அதன் பின் வந்த ”காட்சிப்பிழைகள்” எனும் கசல் திருவிழாவில் பங்கு பெற்று இந்த தளத்தில் எனது 100 ஆவது கவிதையாக அதை  சனவரி முதல் நாளன்று பதிவு செய்தபோது மகிழ்ச்சியில் மனம் திளைத்தேன். உங்கள் ஒவ்வொருவரின் கருத்திலும் என்னை மேம்படுத்திக் கொண்டேன்.உங்கள் ஒவ்வொருவரின் பாராட்டிலும், கருத்திலும் மகிழ்ந்தேன்.அதில் கருத்திட்ட கவித்தா சபாபதி  அய்யா ”வாழ்நாளில் நான் ரசித்த காதல் கவிதைகளில் உலகளாவிய கவிதை என்றும்,  மிகச்சிறந்த 10 கவிதைகளின் முன்வரிசையில் மீட்டுகிறது”என்றும்,   திரு கருணாநிதி அய்யா "கசல் கவிதை தங்கக் கிரீடமாக தமிழன்னைக்கு சமர்ப்பித்து ..மண் வாசம் வீசும் பசுமையான கவிதை ஒன்றை உலகத் தரத்திற்கு உயர வைத்துள்ளவர்" என்றும், திரு இராஜன் அய்யா "தளத்துக்கு மேலும் ஒரு நல்ல படைப்பாளி கிடைத்திருக்கிறார்." அந்த கசல் தொடருக்கு வித்திட்ட திரு ஜின்னா அவர்களின் உணர்வுப்பூர்வமான கருத்துகள், அதை கசல் மாலையாக்கிய திரு முரளி அய்யா மற்றும் உங்கள் பலரின் ஊக்கத்தில் என்னை நானே இன்னும் உயர்த்திக்கொள்ள முடிவெடுத்தேன். அந்தக் கவிதை கசலின் முழு இலக்கணத்தில் இல்லையென்றாலும் தளத்தில் உள்ள இலக்கணத்தோடு உள்ள கசல் கவிதைகளை பார்த்து முயற்சியும் பயிற்சியும் எடுத்துக்கொண்டு என்னை இன்னும் மெருகேற்றிக் கொண்டேன்.  

அதன் பிறகு மருத்துவர் திரு கன்னியப்பன் அய்யா அவர்களின் பெருமையான  சந்திப்பு.. இந்த சந்திப்புக்கு பிறகுதான் இலக்கணப் பாக்களின் மீது ஈர்ப்பு தோன்றியது. என்னைப்  போன்றோர் கவிதை படைப்புகளை எழுதுவதே கடினம். அதிலும் இலக்கணம் என்றால் சொல்ல வேண்டியதில்லை. இலக்கணப் பாக்களின் அருகில் செல்லக் கூட அருகதை இல்லை என்றிருந்த நான், முயன்று என்னை ஆயத்தப் படுத்தி, இலக்கணப் பாக்களின் பக்கம் திரும்பி எனைப்போன்ற விவசாய மக்களுக்காக எனது அனுபவத்தில் உதித்தவற்றையெல்லாம் எடுத்து உழவனதிகாரம் எனும் குறட்பா அதிகாரத்துக்கு முயன்றேன். அதில் சரிபார்ப்பு முன்னோட்டமாக மூன்று குறட்பாக்கள் எழுதினேன். அதில் சியாமளா அம்மா அவர்களின் வாழ்த்து மற்றும் சிறுபயிற்சி,   நான் எழுதிய இம்மூன்று குறட்பாக்கள் பார்த்து திரு சுசீந்தரன் அய்யாவிடம்  கிடைத்த பாராட்டுகள், எசக்கியேல் அய்யாவிடமிருந்து வந்த கருத்துகள், திரு சங்கரன் அய்யாவிடமிருந்து வந்த கருத்துகள், திரு ஆவுடையப்பன் அய்யா, திரு மு.ரா அய்யா, திரு முரளி அய்யா, திரு இராஜன் அய்யா, திரு பழனிகுமார் அய்யா, திரு ஜின்னா போன்றோரின் கருத்துகள் எல்லாமே ஒவ்வொரு படியாக என்னை உயரத்துக்கு கொண்டு வந்தது. 

இன்று 9 ஆவது மாதம் காலடியெடுத்து வைக்கும் இந்த நாளில் அந்த குறள் வெண்பாக்களோடு மீதமுள்ள 7 குறள்களையும் ஒரு அதிகாரமாகவே ”உழவன் - உழவனதிகாரம்” எனும் தலைப்பில் கவிதைகள் பகுதியில் பதிவிட்டிருக்கிறேன். உழவுப் பரம்பரையில் வந்த விவசாயி என்ற முறையில் இதற்காக பெருமை கொள்கிறேன்.  தளம் நுழைந்த இந்த 8 மாத காலத்திற்குள்  நான் பெற்ற மிகப்பெரிய சொத்துகள் பெரியோர்களின் ஆசி, தோழர்களின் முகம் காணா நட்பு மற்றும் மிகப் பெரிய தன்னம்பிக்கை. கிராமியத்தவன், பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தவன் என்ற தாழ்வு மனப்பானமையை தூர விலக்கிய தன்னம்பிக்கைதான் முதல் படியானது. 

அதே போல நான் எதிர்கொண்ட துயர சம்பவம் உதயா எனும் உடன்பிறவா தம்பி உதயகுமாரின் இழப்பு. அவர் கல்லூரியில் படித்தாலும் ”வருங்கால வயல்களின் தளபதி” என்று அன்போடு வாய் நிறைய அழைத்து மகிழ்ந்த அந்த உடன்பிறவா தம்பியின் இழப்பு. என் கிராமிய எழுத்துகளில் அவன் எப்போதும் நிறைந்திருக்கிறான். முகம் காணாவிட்டாலும், பொங்கல் சாரல் கிராமியத்தோடு கலந்த நட்பு என்றும் நிலைத்திருக்கும். 

எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் உதயா உட்பட உங்கள் ஒவ்வொருவரின் கவிதைகளிலிருந்தும், கட்டுரைகளில் இருந்தும் கற்றுக்கொண்டேன். அதற்கு நம் ”எழுத்து” தள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், ”எழுத்து” தள குழுமத்துக்கும் இதன் மூலம் நன்றி சொல்லிக் கொள்கிறேன். 

ஒருமுறை மருத்துவர் அய்யா என் படைப்பு ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ததை பார்த்த பின்னர்தான் மொழிபெயர்ப்பு ஆசை வந்தது. அந்த மாதத்திலிருந்தே ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை காரணமாக முடிவு செய்து ஆங்கில மொழிகளில் உள்ளவற்றை உள்வாங்க ஆரம்பித்தேன். காரணம் மேலை நாட்டார்கள் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்று புரிந்து அதைவிட அதிகம் நம் மொழியில் தரவேண்டும் என்பதற்காக இப்போது ஆங்கிலத்தை அயராது முயன்று கற்று வருகிறேன். 

விரைவில் என் படைப்பு ஒன்றை நானே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.. உங்களால் ஓரளவுக்கு தமிழில் தேறிவிட்டேன். வெகுவிரைவில் ஆங்கிலத்துக்கும் உங்கள் ஆதரவு தேவை. நான் எழுதப் போகும் ஆங்கில மொழி பெயர்ப்பு எப்படி இருக்கப் போகிறதென்று தெரியாது. ஒன்றுமட்டும் உண்மை. எழுதப் போகும் எந்தப் படைப்பானாலும் சரி. அதற்குரிய மரியாதை அளித்து உயர்வாகவே முயற்சிப்பேன். 

வாழ்த்துங்கள், உங்கள் வாழ்த்துகளில் வளர்கிறேன்      

நாள் : 25-Apr-16, 2:36 pm

மேலே