குறவஞ்சி இலக்கியம் நூல் ஆசிரியர் தமிழச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

(Tamil Nool / Book Vimarsanam)

குறவஞ்சி இலக்கியம் நூல் ஆசிரியர் தமிழச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

குறவஞ்சி இலக்கியம் நூல் ஆசிரியர் தமிழச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி விமர்சனம். Tamil Books Review
குறவஞ்சி இலக்கியம் !

நூல் ஆசிரியர் : தமிழச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம்–608 001. பக்கம் 384, விலை: ரூ.200

*****
இலக்கிய இணையர் என்றால் இலக்கிய உலகம் நன்கு அறியும். தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இவர்கள் இருவரும் போட்டி போட்டு நூல் எழுதி வருகிறார்கள். தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்கள் குறவஞ்சி இலக்கியத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று, மதுரைத் தமிழ்ச்சங்கக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இலக்கியத்தில் ஓய்வின்றி உழைத்து வருபவர். தமிழ்த் தேனீ ஐயா அவர்களுடன் பட்டிமன்றத்திலும் முழங்கி வருகிறார்கள் .ஐயாவிற்கு வாழ்க்கைத் துணையாக மட்டுமன்றி இலக்கியத் துணையாகவும் இருந்து வருபவர் .

முனைவர் பட்ட ஆய்வை செதுக்கியும், பதுக்கியும் நூலாக்கி உள்ளார்கள். குறவஞ்சி இலக்கியத்தை விரிவாக ஆய்வு செய்து சிற்றிலக்கிய விருந்து வைத்துள்ளார்கள். பாராட்டுகள். பதிப்பித்த மெய்யப்பன் பதிப்பகத்திற்கு பாராட்டுகள்.

ஒன்பது தலைப்புகளில் விரிவாக கட்டுரைகளும் பின்னிணைப்புகள் என்று பகுதி துணைநூற்பட்டியல் விபரம் ஒரு பகுதி மொத்தம் 11 பகுதிகள் நூலில் உள்ளன. பதிப்புச் செம்மல் பேராசிரியர் ச. மெய்யப்பன் அவர்களின் பதிப்புரையும் , தமிழறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் அணிந்துரையும் நூல் என்ற மகுடத்தில் பதித்த வைரகற்களாக ஒளிர்கின்றன. அணிந்துரையிலிருந்து பதச்சோறாக ஒன்று.

“திருமதி டாக்டர் நிர்மலா மோகன் அவர்கள் நல்ல நுணுக்கிப் பார்க்கின்ற ஆற்றலும், மிகுந்த உழைப்பும் உடைய சிறந்த ஆய்வாளர். குறம், குறவஞ்சி, குருவ நாடகம் என்ற மூன்றையும் இணைத்து சிறந்த முறையில் ஆய்வேட்டினைக் கொடுத்து எல்லா தேர்வாளர்களும் சிறந்த ஆய்வேடு எனப் பாராட்டிப் பட்டம் பெற்றவர்” .

நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களின் கடின உழைப்பை உணர்த்தும் விதமாக நூல் உள்ளது. மேம்போக்கான ஆய்வு இல்லை இது. தமிழ் ஆர்வமும், தமிழ் அறிவும், பொறுமையும் இருந்ததால் மட்டுமே ஆய்வை சிறப்பாக முடிக்க முடிந்தது.

நூலில் இருந்து சில துளிகள். உங்கள் பார்வைக்கு :

“குறம், குறவஞ்சி, குளுவ நாடகம் ஆகிய மூன்று இலக்கியங்களும் பல நாட்டுப்புறக் கூறுகளைக் கொண்டு விளங்குகின்றன. திரும்பத் திரும்ப வர்ல், இசைபாங்கு, சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப்பெறாமரபு, புராண மரபுச் செய்தி, பழமொழியாட்சி, விடுகதை பாங்கு, பேச்சுவழக்கும் சொற்கள், யாப்பு வடிவ ஒற்றுமை, நம்பிக்கைகளும் சடங்குகளும் ஆகிய நாட்டுப்புறக் கூறுகள்” .

இப்படி இலக்கியத்தில் உள்ள மேன்மைகள் பற்றி ஆய்ந்து ஆராய்ந்து மிக நுட்பமாக எழுதியுள்ள நூல்.

குறம் என்பது 18 வகைகள் உள்ளன. அவை யாவை என்பது நூலில் உள்ளன. இவற்றில் 14 குறங்களே ஆய்வாளருக்குக் கிடைத்துள்ளன என்ற செய்தியும் நூலில் உள்ளது. குளுவ நாடகங்கள் 5, அவை எவை? என்ற விபரம் உள்ளது. பல்வேறு நூல்கள் படித்து முனைவர் பட்ட ஆய்வினை முழு ஈடுபாட்டுடன் செய்து உள்ளது புலனாகின்றது. தேடல் இருந்தால் தான் ஆய்வு சிறக்கும். அ.கி. பரந்தாமனார், இரா. இளங்குமரனார், உ.வே. சாமிநாதையார், இளம்பூரணர் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்களின் நூல்கள் படித்து வடித்த நூல் இது.

ஒப்பிலக்கிய நோக்கில் ஒப்பீடு செய்தும் ஆய்வு செய்துள்ளார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பகுதி ஒன்று நூலில் உள்ளதை பதச்சோறாக காண்க.

குறவனின் கையாள்
குறவஞ்சியில் சிங்கனுக்குத் துணையாக குளுவன்,
நூவன் போன்றோர் வருவது போல, குளுவ நாடகத்தில்
தலைமை இடம்பெறும் குளுவனுக்கும் பறவை வேட்டை
யாடுவதற்குத் துணையாகக கையாள் ஒருவன் வருகிறான்.
அன்ன சின்னமகிபன் குளுவ நாடகத்திலும் (பா. 13)

கறுப்பர் குளுவை நாடகத்திலும் சிங்கன் என்றும், அருணாசலம் செட்டியார் குளுவ நாடகத்தில் பாங்கன் (ப. 24) என்றும் கோட்டூர் நயினார் குளுவ நாடகத்தில் நரசிங்கன் (ப. 15) என்றும் அழைக்கப்படுகிறான்.

தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களைப் போலவே மிக நுட்பமாக பாடல் எண் வரை குறிப்பிட்டு எழுதி இருப்பது நூல் படிக்கும் வாசகர்கள் விரும்பினால், அந்தப் பாடலையும் எடுத்து படித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

இந்த நூல் படிக்கும் போது தமிழின் பெருமையும், தமிழரின் பெருமையும் நன்கு அறிய முடிகின்றது. அன்று இருந்த மலைவளம் இயற்கை வளங்கள் வாழ்வியல் முறைகள், குலப்பெருமை என யாவும் விரிவாக எழுதி உள்ளார்கள். பாடல்களை எழுதி, அதற்கான விளக்கம் எழுதி, முடிவுரையும் எழுதி உள்ளார்கள்.

இயந்திரமயமான உலகில் சிற்றிலக்கியங்கள் அனைத்தும் படிப்பதற்கு பலருக்கு நேரம் வாய்ப்பதில்லை. அப்படியே நேரம் வாய்த்து படித்தாலும் பாடலின் பொருள் புரிவதில்லை. இந்த நூல் படித்தால் போதும் சிற்றிலக்கியங்கள் பல படித்த மனநிறைவு வந்து விடுகின்றது. பழச்சாறு போல பிழிந்து இலக்கியச் சாறு வழங்கி உள்ளார்கள். தமிழின் சொல்வளம், கருத்து வளம், நில வளம், நீர் வளம், பண்பாட்டு வளம் அனைத்தும் உணர்த்திடும் நூல்.

நாடகத்திறனில் அன்று தமிழர்கள் கொடிகட்டி பறந்தார்கள் என்பதை அறிய முடிகின்றது. திரைப்படத்தின் வருகையின் காரணமாக இன்று நாடகம் என்பது நலிந்து விட்டது. இந்த நூலில் நாடகத்திறன் பற்றி படித்த போது நம் நாட்டில் மீண்டும் நாடகங்கள் உயிர்பிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

“குறவர்கள் ஓரிடத்தில் தங்கி வாழாது, அடிக்கடி தம் இருப்பிடத்தை மாற்றித் திரியும் நாடோடி இயல்பினர் ஆவர். வனங்கடந்து, வயல்கடந்து, கரைகடந்து திரிவோம் (ப.45) என்று இவ்வியல்பினை உணர்த்துகின்ற ஸ்ரீ கிருஷ்ணமாரி குறவஞ்சியில் வரும் குறத்தி”.

சிற்றிலக்கியங்களில் இனம் பற்றி, பண்பாடு பற்றி, உணவு பற்றி, வாழ்க்கை பற்றி போகிற போக்கில் பாடலாக வடித்து வைத்து இன்றும் கணினியுகத்திலும் பழைய பண்பாட்டை, கலையை, திறமையை உணர முடிகின்றது.

‘இவ் ஆய்வு’ முன்னையவற்றின் பரிணாமமாக மலருகின்ற ஓர் இலக்கிய வகை, பின்னர் வருவனவற்றிற்கு அடித்தளமாய் அமையும் என்னும் கூர்தலறக் கோட்பாட்டினைக் குறவஞ்சி இலக்கியம் விளக்குவதாய் அமைகிறது எனலாம்”.

தமிழில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்க விரும்பும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். கடினமான இலக்கியத்தையும் மிக எளிதாக, எளிமையாக விளக்கி உள்ளார்கள். இந்த நூல் வைத்துக் கொண்டு இதன் தொடர்ச்சியாக தனித்தனியாக ஆய்வு தொடங்குவதற்கும் மிக உதவியாக இருக்கும் நூல்.

தமிழ்த்தேனீ என்று முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு வர நூல் உதவியது.


.



.

சேர்த்தவர் : கவிஞர் இரா இரவி
நாள் : 17-Nov-14, 9:17 pm

குறவஞ்சி இலக்கியம் நூல் ஆசிரியர் தமிழச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே