கவிஞர் சுடர் முருகையா “புதுயுகம் காணப் புறப்படு தமிழா” - புதுக்கவிதைகள் காட்டும் சமுதாய சிந்தனைகள்

(Tamil Nool / Book Vimarsanam)

கவிஞர் சுடர் முருகையா “புதுயுகம் காணப் புறப்படு தமிழா” - புதுக்கவிதைகள் காட்டும் சமுதாய சிந்தனைகள் விமர்சனம். Tamil Books Review
கவிஞர் சுடர் முருகையா “புதுயுகம் காணப் புறப்படு தமிழா!” -
புதுக்கவிதைகள் காட்டும் சமுதாய சிந்தனைகள்

வார்த்தைகளைக் கொட்டும் ஆவேசத்திலும், வெறிகொண்ட மன எழுச்சியைச் சித்தரிப்பதிலும், வாழ்க்கை சார்ந்த பல அம்சங்களையும், லட்சியங்களையும் கவிதைப் பொருளாக அமைத்துக் கொள்வதிலும், கருத்து வன்மையில் அனல்தன்மை பெற்ற தமிழ் கவிதைகளைப் படைப்பதில், சிறந்த தற்கால கவிஞர்களுள் கவிஞர் சுடர் முருகையாவும் ஒருவராவார்.
கவிஞர் சுடர் உயர்ந்த கவி. உண்மைக் கவி. அவர் பாடல்களில் தெளிவான எண்ணத்தையும், சொல்நடயையும,; சமூக அவலங்களும், தமிழ் காதலும், பொதுவுடைமை சிந்தனைகளும், கண்ணிற்கு முன்னால் சமுதாயச் சீரழிவுகள் நிகழும் போது கண்டும் காணாமல் ஒதுங்கிப் போகமுடியாத கவிஞர் சுடரின் ஏக்கமும் பளிச்சிடுகின்றன. சாவை எதிர்பார்த்து நிற்கும் கிழத்தமிழனையும் வீரனாக்கும் வீரமும், உறுதியும் கலந்தசொற்கள் கவிஞர் சுடரின் கவிதைகளில் மிளிர்கின்றன.
தற்கால இலக்கிய படைப்பாளிகளில், புதுக்கவிதை வழியில் தடம்பிடித்து, ஹைக்கு கவிதைகளும் படைத்து சாதனை புரிந்துள்ள கவிஞர்களில் கவிஞர் சுடர் தனித்து அறியப்படுகின்றார். முருகையா என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் சுடர் திண்டுக்கல் அருகில் உள்ள மல்வார்பட்டியில் 1947-ல் மே மாதம் 18-ம் தியதி, திரு. சவடமுத்துக்கும் திருமதி. பாப்பம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த கவிஞர் சுடர், இப்பொழுது சென்னையில் ‘தமிழ் படைப்பாளர்கள் சங்கம்’ தலைவராகப் பணியில் அமர்ந்து கொண்டு, எழுத்துப்பணி செய்து வருகிறார்.
சாதி மத ஒற்றுமை
சாதி மத பேதமற்று வந்தாரை வாழவைக்கும் இந்தியத் தாய் திருநாட்டின் ஒற்றுமையுணர்வுக்கு பங்கம் விளைவித்திடாதீர் என தீயோரை எச்சரித்;து, ஒற்றுமையை வலியுறுத்தி,
மத வெறியால்
தூய்மையின் சின்னங்கள்
சிதைக்கப்படலாமா?
மத வெறியால்
மனிதனைக் கூறுபோடும்
மடமையை ஒழிக்க
ஓ! மனிதர்களே!
ஓன்று சேருங்கள்! (ஒருமைப்பாடே)

என்று கூறுகிறார். இங்கே நாட்டில் நிலவும் மதமெனும் சுவரினை தகர்த்திட கவிஞர் ஆவேசம் கொள்கிறார்.
சமத்துவபுரம் ஊர்களில் மட்டுமே இருத்தலாகாது என்றும், மக்கள் கூடி வாழும் இடம் அனைத்தும் சமத்துவபுரங்களாக உருவாக வேண்டும் எனும் உயரிய சிந்தனையைக் கவிஞர்,
மண்ணில் பிறந்த அனைவரும் சமமே!
மொய்க்கும் வண்டுகள்
மலர்களில் மதம் பார்ப்பதில்லை!
மண்ணில் மலரட்டும்
சமரச மலர்கள்!
தொடரட்டும் சமுதாய உறவுகள்! (சமத்துவபுரம்)
என்று கூறி, இங்கே நாட்டில் நிலவும் சாதியெனும் சுவரினை தகர்த்திட ஆவல் கொள்கிறார்.
தமிழ் பற்று
பிறப்பிலே தமிழனாய் இருந்தும் தமிழ் மொழியை வெறுக்கும் மாந்தரை நோக்கி,
தொப்பிள் கொடியோடு
தொலைந்ததோ தமிழும்!
காக்கை
ஒரு போதும் கொத்துவதில்லை
தன் பொன் குஞ்சுகளை!
ஆனால்….
தமிழ் நாட்டில்
தமிழும் தமிழனும்…?
(வெப்பம் வெளியே இல்லை)

பெண்மை
கவிஞர் பெண்களின் மேன்மையை அறிந்து, பெண்மையை போற்றும் கவிதைகளின் வரிகள்,
சுமைதாங்கி பெண்ணினம்!
சுகம் மறந்த கொத்தடிமைகள்!
ஏணிகளும் அவர்களே!
எரியும் கற்பூர தீபங்கள் அவர்களே! (பெண்ணினம்)
என்பதால் அறியலாம்.

சிறைச்சாலை
தவறு செய்பவர்களைத் திருத்தி மீண்டும் புதுவாழ்வு பெற சிறைச்சாலை உதவிட வேண்டும் என்று வலியுறுத்தும் கவிதை வரிகள்,
சிறைச்சாலை
தெய்வத் திருத்தலம்!
தீய உணர்வுகளை
எரிக்கும் வேள்விச்சாலை!
புது வாழ்வும்
மறு வாழ்வும் பெற்றிடப்
புடம் போடும்
தங்கக் கோயில்!

என்பதால் காணலாம்.
விடுதலை பெற்ற இந்தியத் தாய் திருநாடு பொன் விழா கண்டும் தேசத்தின் அவல நிலையினை யதார்த்த நிலையில் உணர்ச்சி ததும்ப கவிஞர் பாடியுள்ளார். இந்நிலையில்லா உலகில் மனிதன் மானிட நேயத்தை மறந்து வாழ்கிறான் என்பதையும், இந்தியத் தாயின் மானம் காத்து எல்லையில் கண் இமையாது நிற்கும் இந்திய வீர மறவர்களின் உயிர் தியாகத்தையும் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
இக்கவிதைத் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் மீரா (மீ.ராசேந்திரன் - 1938) அங்கத உத்தியில் சமூகத்தில் நிலவும் அரசியல் பொருளாதார அவலங்களை குத்தலாகக் காட்டும் கவிதை நடையோடு ஒத்திருப்பதைக் காணமுடிகிறது.
கவிஞர் வாழ்வில் அமுத்தப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர், ஒதுக்கப்பட்டவர் உயரவேண்டும் என்றும், தனி மனித நேயமும், நாடு பொதுவுடைமை ஆக்கப்படவேண்டும் என்ற பார்வையும், பரந்த நோக்கமுமே தன்னுள் கொண்டு, ‘புதுயுகம் காணப் புறப்படு தமிழா!’ என்ற பெயரை தம் நூலுக்கு சூட்டியுள்ளார். விளக்குகளில் மங்கி எரியும் திரியைத் தீண்டித் தூண்டினால் மிகைப்படும் வெளிச்சம் போல், ஒவ்வொரு தனி மனிதனையும் தட்டி எழுப்பி, ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் கவிதைகளாக கவிஞர் சுடர் கவிதைகள் ஒளிர்ந்தும், ஒளிர்ந்து கொண்டுமிருக்கின்றன.

சேர்த்தவர் : ஆஷைலா ஹெலின்
நாள் : 2-Apr-15, 12:53 pm

கவிஞர் சுடர் முருகையா “புதுயுகம் காணப் புறப்படு தமிழா” - புதுக்கவிதைகள் காட்டும் சமுதாய சிந்தனைகள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே