`மழையின் மனதிலே

(Tamil Nool / Book Vimarsanam)

`மழையின் மனதிலே

`மழையின் மனதிலே விமர்சனம். Tamil Books Review
கவிஞர் புதுயுகனின் `மழையின் மனதிலே’ கலைத்தாயின் மனதிலே நீங்கா இடம் பெறும் சிந்தனைப் பெட்டகம், சீரிய கவிச்சித்திரம்

---------------------------------------------------------------------------------------------------------------------
இலக்கியம் என்றுமே வாழ்க்கையின் நல்லதொரு விமர்சகன். பேரிலக்கியங்கள் இலக்கியம் எப்பொழுதுமே வாழ்க்கையினைப் பற்றிய விமரிசனங்களை முன் வைக்கத் தவறுவதில்லை, தட்டிக்கொடுப்பதோ, தட்டிக் கேட்பதோ.. இலக்கியம் அதன் வேலையினை செவ்வனே செய்து கொண்டுதானிருக்கிறது.. புக்கர் பரிசு பெறும் நாவல்களிலிருந்து தமிழ் புதுக்கவிதை வரை அதற்கு விதி விலக்கல்ல எனத் தோன்றுகிறது..

அப்படி.. வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் உள்ளடக்கி, ஒரு தட்டிக் கொடுக்கும், தட்டி கேட்கும் நண்பனாக, ஒரு கருத்துப் பேழையாக கவிஞர் புதுயுகனின் ` மழையின் மனதிலே’ கவிதை நூல் நம் கைகளில் தவழ்ந்து மணம் வீசுகிறது.

அது சரி வாருங்கள், ,கலைவாணன் புதுயுகன் `கலை`’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்

`இருப்பதைக் காட்டும் சமூகக் கண்ணாடி
வருவதைக் காட்டும் மாயக் கண்ணாடி
கல்லுக்குள் கடவுளும்,
சொல்லுக்குல் சொர்க்கமும்,
காகிதத்திற்குள் புது உலகும்
ஒசைக்குள் உயிர் துடிப்பும்
இழுத்து வரும் மந்திரக்கோல்’

அட, அதெப்படி. இவை அத்தனையுமே அவரது கவிதைகளுக்கு அப்படியே புதிதாய் வாங்கிய தீபாவளிச் சட்டை போல் பொருந்திப் போகிறது.
புதுயுகனின் பாடு பொருட்கள் பல, ஆடு களங்கள் பல , தேடல்கள் பல, தீர்வுகள் பல, ஒரு பொறியாளருக்குள் தான் எத்தனை கவிதைப் பொறி, தமிழ்தெறி என்று வியந்து போக வைக்கிறார் விரல்கள் பக்கங்களை நகர்த்துகிற போதே
.
`பெருவெளி,சிறு துளி’ என்ற கவிதையில் கொட்டிக்கிடக்கிறது எங்கெங்கும் தத்துவமொழி.

`ஆயுதப் பெருவெள்ளம் செய்யாததை
ஒரு மனிதனின்
அகிம்சை சிறு துளி சாதித்தது’

எனச்சொல்லி காந்தியச் சிந்தனைகளில் கரைந்து போகிறார் காந்தி காவியம் கண்ட இராமனுஜக் கவிராயரின் பேரன்.

`பெருவெள்ளக் கும்பலின் நடுவே,
உண்மை நட்பு என்னவோ ஒரே துளிதான்’
என் நட்பின் திறம் சொல்லி நகர்கிறார்.

`பேரிரைச்சல் ..பெருவெள்ளம்;
குவிந்த மனதின் திறன்- துளி’

இளைஞர்களே இது உங்களின் ஆக்கத் திறனை வெளிக் கொண்டு வர விரும்பும் கவிஞரின் அவா.

`மனிதம் என்பது யாதெனின்
அபூர்வ சிறுதுளிகளின்
அரிய சேகரிப்பே என்பேன்’
எப்போதும் வெல்லும்
இளமை உத்தி வேண்டுமாயின்
துளியின் தத்துவத்தை
தியானம் செயக’ என முடிக்கிறார்.

ஆழ்வார்கள் போல் ஆழ்ந்த சிந்தனையை வெளிப் படுத்தி, கவிதை பூவானமாய் சிரிக்கிறார்.

மனித முயற்சிகள் மகத்தானவை. எவரெஸ்ட் கூட குட்டை தான், செவ்வாய் கிரகம் கூட கிட்டதான் என்பது போல மனிதன் எங்கும் வியாபிக்கத் துவங்கிவிட்டான். கிட்டத்தட்ட கடவுள் போலாகிவிட்டான்.
`உலகளந்த பெருமாள்கள்’ கவிதை உங்களிடம் இதைத்தான் சொல்ல வருவது இப்படி…
`மூவடி…
நிலவில் பதித்த பாதம் ஒன்று..
இமயத்தின் உச்சி தொட்ட பாதம் இரண்டு
பசிபிக் அதலபாதள அழம் மூன்று
இவை உலகளந்த மனித அடிகள்
முயற்சி திருவினையடிகள்!’

தத்துவ விசாரனையில் மூழ்கி விட்ட புதுயுகனுக்கு முத்ததின் மொத்த வகையும் அத்துபடி போல… அடுக்கிக் கொண்டே போகிறார்.
`தந்தை மகளுக்குக் கொடுக்கும் முத்தம்
வாழ்க்கை நெடுக கூட வரும்
தன்னம்பிக்கை முத்தம்’

`உறவினர் மழலைக்குக் கொடுக்கும் முத்தம்
வந்து வந்து போகிற
கடலலை முத்தம்’

இனி முத்தம் கொடுத்து விட்டு அதன் அர்த்தத்தை அறிய, அகராதியை புரட்டாதீர்கள். `மழையின் மனதிலே’ புத்தகப் பக்கங்களில்தான் அதன் அர்த்தம் பட்டியலிடப்பட்டுள்ளது. French kiss போல இது இந்திய முத்த வகைகள்
மேற்கத்திய மோகம் பிடித்து ஆடும் இந்தியனை பார்த்து அவர் கேட்கும் கேள்வி தான் ` உலகின் அறிவுத் தலைமை கொள்’ கவிதை.

` தமிழ் சோலையின் கலைப் பூக்கள்
கவனிப்பாரற்றுக் கிடந்தன்,
ஹாலிவுட் நகலெடுத்து
போலியாய் படமெடுத்தார்
அசலோடு நகலையும்
அசராமல் நாம் பார்த்தோம்’


என மேற்கத்திய கலாச்சாரத்தின் ஈயடிச்சான் காப்பிகளை (Aping the West) அதன் உள்ளீடற்ற முட்டாள்தனத்தை சாடுகிறார்.

`அட்டைகளை தொலைத்தால்
அடையாளக் குட்டைகளாய் ஆவோம்’

என்பது அக்கவிதையின் முத்தாய்ப்பான வரிகள்

`அடி மாடுகள்’ என்ற கவிதையினை படிக்கிறபோது அடிவயிறு கலங்கிப்போகிறது. ஜீவகாருண்யம், பசுவதை எனப் பேசும் இந்தியாவில் கால்நடைகள் தலையில் சுத்தியால் ஒங்கி அடித்து கொல்லப்படுவது இன்று நடக்கின்ற வரையரையற்ற வன்முறை. கவிதை சாட்டையெடுத்து அத்தீவினையை அடிக்கிறது.

பசு இப்படிப் பேசுகிறத

`பூக்களின் மொழியை கண்களில் பேசி..
துள்ளி ஓடிய தருணங்களில்
கேள்விகளே இல்லை என்னிடம்
கேள்வியற்ற நேசம் மட்டுமெ இருந்தது’

என தென்றலாய் ஆரம்பிக்கும் பசுவின் வாழ்வில் புயல் வந்தது சுயநலப் பிசாசாக மாறி விட்டிருக்கும் மனிதர்களின் உருவில் .

`பெருஞ்சுத்தியால் குறி வைத்து
நங்கென்று அடித்தான்
நீ பொட்டிட்ட அதே நெற்றியில்’

இந்தக் கவிதை புலால் மறுப்புக்கு வழி கோலும் என்றால் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

புதுயுகனுக்கு ஹைக்கூவும் தெரியும்..

`சிதறி விழுந்த ஒளி
சிரசில் விழாத தொப்பி
வானம்’

சென்ரியும் தெரியும்…

`விரல் நுனியில் உதயம்
விநாடியில் பிரசவம்
குறுஞ்செய்தி’

குளிர்ந்த குற்றாலச்சாரல் முகத்தில் விழுவது போல சின்ன சின்ன செல்லக்கவிதைகள் இவை.

மேற்கோளுக்காக எழுத வில்லை புதுயுகன் குறிக்கோளுக்காக எழுதுகிறார், மேதாவி அல்லவா.. மேற்கோள்கள் தானக வந்து விழுகின்றன. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் பதிப்பகத்தார் சண்டைக்கு வந்து விடுவார்கள்.
காலவெள்ளத்தினை எதிர்த்து எதிர் நீச்சலிடும் கவிதைகள்
புதுயுகனுடையவை. ` மழையின் மனதிலே’ புத்தகத்தை படித்து முடித்தவுடன் இது கலையின் மனதிலே நீங்கா இடம் பெறும் என எனக்குத் தோன்றியது. . உங்களுக்கும் தோன்றலாம்.. படித்து பாருங்கள்.

சேர்த்தவர் : பரதகவி
நாள் : 19-Jun-16, 8:51 pm

`மழையின் மனதிலே தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே