நண்பர்கள்- சிறுவர் கதைகள்

(Tamil Nool / Book Vimarsanam)

நண்பர்கள்- சிறுவர் கதைகள்

நண்பர்கள்- சிறுவர் கதைகள் விமர்சனம். Tamil Books Review
நட்போடு ஒரு பார்வை….

கனிசா, கஷ்வினி, கேவின் இவர்களோடு துணையாகத் தாயார் யோகராணி கணேசன் அவர்களின் கூட்டுத் தயாரிப்பான ‘நண்பர்கள்’ என்னும் சிறுவர் கதைத் தொகுப்பு வெளிவருகின்றது.
சிறுவனும் தானியங்கியும், ஒரு காட்டுப்பயணம், இரண்டு நண்பர்கள், எனக்கு உங்கள் மேல் எவ்வளவு பாசம் இருக்கிறது என்று தெரியுமா?, எதிரிகள் ஆகிய கதைகள் ஐந்துமே நட்பை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.
பொதுவாக சிறுவர்களுக்காக பெரியவர்களே சிறுவர் கதைகளை எழுதுவர். இதன்போது பெரியவர்கள் சிறுவர்களாக மாறி, அவர்கள் நிலையில் இருந்து சிந்தித்து அவர்களுக்காக எழுதவேண்டிய தேவை ஏற்படுகின்றது. கத்தியின் மீது நடப்பது போன்ற கவனமுடன் செயற்படவேண்டிய இச்செயலில் கவனம் சிறிது பிசகினால் கூட அக்கதைகள் சிறுவர்களை வசீகரிப்பதில் தோல்வியடைந்து விடுகின்றன. ஆனால் சிறுவர்களுக்காக சிறுவர்களே எழுதும் கதைகளில் இந்தக் கவனமும் கரிசனையும் அடிபட்டுப் போகின்றது. அவர்களே சிந்திக்கிறார்கள், அவர்களே எழுதுகிறார்கள். அது அவர்களைப் போன்ற பிள்ளைகளுக்கு உவப்பானதாக மாறிவிடுகின்றது. அங்கு நோக்கப்படவேண்டியது அவர்களின் கற்பனைத்திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றலையும் மட்டுமே.
ஏன் இப்படி யோசித்தீர்கள், ஏன் இப்படி எழுதினீர்கள் என்று அவர்களிடம் கேள்வி கேட்க முடியாது. அதற்கான பதிலும் பிள்ளைகளிடம் கிடையாது. அவர்கள் தாம் கண்டதை, கேட்டதை, உணருவதை, விரும்புவதை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வியல்பான வெளிப்படுத்துகைக்கு களம் அமைத்துக் கொடுப்பதும் நெறிப்படுத்துவதுமே பெரியவர்களின் செயலாக இருத்தல் வேண்டும். எல்லையற்ற கற்பனைக் கதைகளையெல்லாம் எமது குழந்தைகள் சிருஷ்டித்துக் கூறும்போது பெரியவர்கள் வியப்பும் புளகாங்கிதமும் அடைகிறோமல்லவா? அதுபோன்றதொரு மகிழ்ச்சியே இவற்றைப்u படிக்கும்போது ஏற்படுகின்றது.
‘சிறுவனும் தானியங்கியும்’ என்ற கதையில் சிறுவன் தானியங்கிக்கு ஆப்பிள் சாறு கொடுப்பதும், தானியங்கி சிறுவனுக்கு மின்கலம் மாற்ற முயற்சிப்பதும் பெரியவர்கள் பார்வையில் நகைப்போடு கேள்விகளைக் கேட்கத் தூண்டும். ஆனால் பிள்ளைகள் தன்னைப் போலவே தன்னைச் சார்ந்த அனைத்தையும் நோக்க முயல்வதையும் உணர்வுகளைப் பரிமாற விரும்புவதையும் புரிந்து கொள்ளலாம்.
நம்பிக்கையுடனான துணையாக ஒரு காட்டுப் பயணமும், நண்பர்களுக்கிடையே இருக்கவேண்டிய சகிப்புணர்வு, உதவி, தவறை உணர்த்தல், மனம்வருந்தல் போன்ற பண்புகளை வலியுறுத்துவதாக நண்பர்கள் கதை அமைந்துள்ளது.
அளவிடமுடியாத பாசத்தின் அளவை அளவிட முயலுவதாக ‘எனக்கு உங்கள்மேல் எவ்வளவு பாசம் இருக்கிறது என்று தெரியுமா’ என்ற கதை அமைந்துள்ளது. அளவிட முடியாத அமைதியை நிம்மதியை, நிறைவை கதையின் நிறைவுப்பகுதி விட்டுச் செல்கின்றது.
சுவாரசியமான கதைவடிவமாக ‘எதிரிகள்’ என்னும் கதை அமைந்துள்ளது. கதாபாத்திரங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் தொடரொழுங்குக்கு குச்சியொன்று காரணமாகின்றது. ஒரே வார்த்தைகளை திரும்பத்திரும்பக் கூறுதல், ஒரே செயலைத் திரும்பத்திரும்பச் செய்தல் என்பன சிறுவர் பாடல்கள் கதைகளில் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளன. இது பிள்ளைகளை மகிழ்ச்சிப்படுத்தும் செயலும் கூட. அவ்வாறானதொரு மகிழ்ச்சியை இக்கதை தருகிறது. இது சிறுவர் நாடகமாக நடிப்பதற்கும் கூட உவப்பானதாக அமைந்துள்ளது.
நட்பு என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்ட இக்கதை முயற்சி மனித விழுமியங்களை கற்றுத்தருவதும் ஊக்கப்படுத்துவதும் உணரவைப்பதும் கூடவே படைப்பாக்கத் திறனை ஊக்குவிக்கும் ஊடகமாகவும் அமைந்துள்ளமை பாராட்டப்பட வேண்டிய விடயம்.
விருட்சங்களின் வேர்கள் இங்குதான் உள்ளன என்பதைப் புலப்படுத்தவும், பலப்படுத்தவும் பிள்ளைகள் பழக்கப்படுத்தப்படுகின்றனர் என்பதற்கு கதைகளில் இடம்பெறும் தூயதமிழ்ப் பிரயோகத்திற்கான முயற்சியை தானியங்கி, நல்லிரவு, மகிழுந்து போன்ற சொற்பிரயோகங்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.
ஒரு ஊரில்..என்று தொடங்கும் கதைகூறும் மரபிலிருந்து மாற்றமுற்று நோர்வேஜியன் சிறுவர் கதைகளைத் தழுவி எழுதப்பட்டுள்ளது எனினும் உலகத்திற்கே பொதுவான உயர் விழுமியங்களும், சிறுவர்களின் இயல்பான மனப்போக்குகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
நவீனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரத்துக்குள் அகப்பட்டுப் போகாமல் சிறுவர்களை சிறுவர்களாகவே சிந்திக்கவும், படைப்பாக்கத் திறனை வளர்க்கவும் வழிகாட்டியாக இருக்கும் தாய் யோகராணி அவர்களுக்கு விசேட பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்ளலாம்.
கனிசா,கஷ்வினி,கேவின் போன்ற பிள்ளைகளின் படைப்பாக்க முயற்சி இவர்களைப் போன்ற பிள்ளைகளுக்கும் ஊக்கம் தருவதாக அமையும். இவர்களின் திறன் மென்மேலும் வளர்ந்து மெருகேற மனம் நிறைந்த வாழ்த்துக்களைக் கூறுகின்றேன்.


திருமதி.நெலோமி அன்ரனி குரூஸ்
விரிவுரையாளர்
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி

சேர்த்தவர் : யோகராணி கணேசன்
நாள் : 2-May-21, 10:37 pm

நண்பர்கள்- சிறுவர் கதைகள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே