புறநானூறு பாடல் 4 – சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
இப்பாட்டைப் பாடியவர் பரணர் ஆவார். இவர் சங்கத்தொகை நூல்களுட் காணப்படும் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியவர். புறநானூற்றில் இவர் பாடிய பதின்மூன்று பாட்டுக்கள் உள்ளன. இவர் பாட்டுக்கள் கற்பனை வளமும், வரலாற்றுக் குறிப்பும் செறிந்தன. இவர் மருதத்திணையை அழகாகப் பாடியிருக்கிறார்.
இந்த சோழவேந்தன் இளஞ்சேட்சென்னி கரிகால்வளவனுக்குத் தந்தையாவார். நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் இளஞ்சேட்சென்னியை அழுந்தூர் வேளிடை மகட்கொடை கொண்டான் என்கிறார்.
இப்பாட்டில் பரணர், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் நால்வகைப் படைகளும் போரில் ஈடுபடுவதன் சிறப்பைப் புகழ்ந்தும், தேர்மீது தோன்றும் அவனை, ‘நீ மாக்கடல் நிலந்தெழுதரு செஞ்ஞாயிற்றுக் கவினை’ என்றும், நின்னைப் பகைத்தோருடைய நாடு அழியுமென அதன் அழிவுக்கிரங்கி ’தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூவும் நின் உடற்றியோர் நாடு’ என்றும் கூறுகிறார்.
இப்பாடலில் காலாளும் குதிரையும் யானையும் தேருமாகிய படை போரில் முன்னேறிச் செல்வதை பாராட்டிக் கூறுதலால் இது வஞ்சித்திணையாகும். வேந்தனது புகழைப் பாராட்டி, அவன் பகைவர் நாட்டின் அழிவுக் கிரங்கிக் கூறுவது கொற்றவள்ளை துறையாகும்.
இனி பாடலைப் பார்ப்போம்.
வாள், வலந்தர மறுப்பட்டன
செவ்வானத்து வனப்புப்போன்றன
தாள், களங்கொளக் கழல்பறைந்தன
கொல்ல் லேற்றின் மருப்புப்போன்றன
தோல், துவைத்தம்பிற் துளைதோன்றுவ 5
நிலைக்கொராஅ விலக்கம் போன்றன
மாவே, எறிபதத்தா னிடங்காட்டக்
கறுழ்பொருத செவ்வாயான்
எருத்துவவ்விய புலிபோன்றன
களிறு, கதவெறியாச் சிவந்துராஅய் 10
நுதிமழுங்கிய வெண்கோட்டான்
உயிருண்ணுங் கூற்றுப்போன்றன
நீயே, அலங்குளைப் பரீஇயிவுளிப்
பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி
மாக்கட னிவந்தெழுதரும் 15
செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ
அனையை யாகன் மாறே
தாயி றூவாக் குழவி போல
ஓவாது கூஉநின் னுடற்றியோர் நாடே.
பொருளுரை:
வாள், வெற்றியைத் தருதலால் குருதிக்கறை பட்டு செவ்வானத்தைப் போல அழகு பெற்றுப் பொலிந்தன. கால்கள், போர்க்களத்தில் இடம்பெயர்ந்து போர் செய்து களத்தைத் தமதாக்கிக் கொள்வதால் கழல்கள் உடைந்து, அரும்புகள் உதிர்ந்து மழுங்கிக் கிடந்து, கொல்லும் ஆண் யானையின் கொம்புகளை ஒத்திருந்தன.
கேடயங்கள், தைத்த அம்புகளால் துளை தோன்றியும் இங்கும் அங்கும் நிலையின்றி தப்பாது இலக்கை நோக்கியும் செல்வன. குதிரைகளோ, பகைவரை அழிப்பதற்கு வேண்டும் காலத்தை இட வலமாய்த் திரும்பி இழுக்கப்பட்டதால், கடிவாளத்தால் (முகக்கருவி) காயப்பட்ட சிவந்த வாயுடன், மான் முதலானவற்றின் கழுத்தைக் கவ்வும் புலியை ஒத்தனவும் ஆகும்.
ஆண் யானைகள் கோட்டைக் கதவுகளை முறித்து சினந்து உலாவுகின்ற நுனி மழுங்கிய வெண்மையான கொம்புகளை யுடையன. உயிரைக் கொல்லும் எமனைப் போன்றன. நீ, அசைந்த தலையாட்டமணிந்த குதிரைகளால் பூட்டப்பட்ட பொன்னாலான தேரின் மேலே பொலிவோடு தோன்றி, பெருங்கடலின் கீழ்த்திசையில் ஓங்கி எழுகின்ற சிவந்த கதிரவனின் ஒளியினை ஒத்த தன்மையை நீ உடைவனாதலால், உன்னைச் சினப்பித்தவர் நாடு தாயில்லாது உண்ணாத குழந்தை போல இடைவிடாது உன்னைக் கூப்பிடும் என்றும் பரணர் பாடுகிறார்.
திணை: வஞ்சி. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டுடன் வீரர்கள் வஞ்சிப்பூவைச் சூடிப் போரிடுவது வஞ்சித் திணை ஆகும்.
துறை: கொற்றவள்ளை. கொற்றவள்ளை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "கொற்றம்" என்பது வெற்றியைக் குறிக்கும். வள்ளை என்பது ஒரு பாடல் வகை, பெண்கள் நெல் குற்றும்போது தலைவனைப் புகழ்ந்து பாடுவது. எனவே, போரில் வென்ற அரசனைப் புகழ்வதையும், பகைவர் நாடு அழிவதற்காக வருந்துவதையும் பொருளாகக் கொள்ளும் இத்துறை "கொற்ற வள்ளை" எனப்பட்டது.
‘நீயே, அலங்குளைப் பரீஇயிவுளிப் பொலந்தேர் மிசைப் பொலிவுதோன்றி மாக்கட னிவந்தெழு தரும் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ அனையை யாகன் மாறே தாயி றூவாக் குழவி போல ஓவாது கூஉநின் னுடற்றியோர் நாடே’ என்று பரணர் இளஞ்சேட்சென்னியைப் புகழ்வதாலும், பகைவர் நாட்டின் அழிவுக்கு இரங்கி வருந்துவதாலும் இப்பாடல் கொற்றவள்ளை துறையாகும்.